Last Updated : 02 Jun, 2019 11:47 AM

 

Published : 02 Jun 2019 11:47 AM
Last Updated : 02 Jun 2019 11:47 AM

போராட்ட குணத்தை வெளிப்படுத்திய ஆப்கன்: வார்னர், ஸ்மித், பிஞ்ச் இருந்தும் ஆஸி.க்கு சுமார் வெற்றிதான்

வார்னர், ஆரோன் பிஞ்ச் அரைசதம் அடித்தாலும், பிரிஸ்டலில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் போராட்ட குணத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணிக்கு சுமார் வெற்றிதான் கிடைத்தது

பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பின் ஸ்மித், வார்னர் இருவரும் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டி இதுவாக இருந்தது. இருவரும் களமிறங்கும்போது, வழக்கம்போல் இங்கிலாந்தின் பார்மிஆர்மி ரசிகர்கள் அவர்களை கிண்டலடித்தார்கள்.

ஆனால், அந்த பகடிபேச்சுகளை தனது பேட்டிங் மூலம் வார்னர் உடைத்தெறிந்து, 89ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்மித் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தான் பேட்டிங்கில் வல்லமையுடன்தான் இருக்கிறேன் என்பதை வார்னர் நிரூபித்துள்ளார்.

நடப்பு சாம்பியன் என்று சொல்லிக்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் வல்லமை படைத்த வார்னர், ஸ்மித், பிஞ்ச், மேக்ஸ்வெல் என பல வீரர்கள் இருந்தபோதிலும், 35 ஓவர்களில்தான் 208 ரன்களை சேஸிங் செய்துள்ளார்கள்.

உண்மையில் இதுபோன்ற குறைவான ஸ்கோரை ஆஸ்திரேலிய வீரர்களின் திறமைக்கு 20 ஓவர்களில் அடித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை அடிக்கவிடாமல் பல்வேறு சிரமங்களையும், பந்துவீச்சில் நெருக்கடியையும் கொடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

வெடிகுண்டுகள், துப்பாக்கிச் சத்தங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாடிப்பழகி, உலகக் கோப்பைப் போட்டியில் 2-வது முறையாக ஆப்கானிஸ்தான் அணி அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் சற்று அனுபவமிக்க அணியாகத்தான் ஆப்கன் வந்துள்ளது.

உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி கூட எங்களை எளிதாக வீழ்த்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து போராட்டத்தை வெளிப்படுத்தியது சிறப்பு. ஒருகட்டத்தில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது கேப்டன் குலாபுதீன் நயிப், நஜ்புல்லா ஜத்ரான் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்தது முத்தாய்ப்பாகும்.

உலகக் கோப்பை முன்னாள் சாம்பியன் அணிகளாக இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள், நியூசிலாந்து அணியிடம்150 ரன்களுக்குள் சுருண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றார்கள். ஆனால், அந்த அணிகளோடு ஒப்பிடும்போது ஆப்கானிஸ்தான் வீரர்களின் பேட்டிங், பந்துவீச்சு சிறப்பாகத்தான் இருந்தது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தாலும், வெற்றிக்காக முயற்சித்து தோல்வி அடைந்தார்கள். ஆனால் பாகிஸ்தானும், இலங்கை அணியும் தோல்வி அடைவதற்காகவே விளையாடினார்கள். இதுதான் ஆப்கானிஸ்தான் அணிக்கும், அந்த அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமாகத் தெரிகிறது.  

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஆரோன் பிஞ்ச், வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஆரோன் பிஞ்ச் தொடக்கத்தில் இருந்து அடித்து விளையாட வார்னர் நிதானமாக பேட் செய்தார். பவர்ப்ளேயில் ஆஸி. அணி 52 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் முஜிபுர் ரஹ்மானின் லெக் ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை. சாத்துமுறைதான் நடந்தது.

அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய ஆரோன் பிஞ்ச் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

முதல்விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். குல்பதீன் நயிப் வீசிய 17-வது ஓவரில் டீப்கவரில் நின்றிருந்த முஜிபுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து பிஞ்ச் ஆட்டமிழந்தார். இவர் 49 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்துஇருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து உஸ்மான் கவாஜா களமிறங்கி, வார்னருடன் இணைந்தார். நிதானமாக ஆடியவந்த வார்னர், 74 பந்துகளில் அரைசதம் அடித்தார். பயிற்சிப் போட்டியில் சிறப்பாக பேட் செய்த கவாஜா, இந்த போட்டியில் சொதப்பினார்.

ரஷித் கான் வீசிய 25-வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து 15 ரன்களில் கவாஜா பெவ்லியன் திரும்பினார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து ஸ்மித் களமிறங்கி வார்னருடன் சேர்ந்தார். இருவரும் களத்தில் இருந்தபோது இங்கிலாந்து ரசிகர்களின் கிண்டல்  களைகட்டியது. ஆனால், இதை கண்டுகொள்ளாமல் இருவரும் பேட் செய்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்மித் 18 ரன்கள் சேர்த்தநிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் வெளியேறினார். இருவரும் சேர்ந்து 49 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த மேக்ஸ்வெல் ஒருபவுண்டரி அடிக்க ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டில் வென்றது. மேக்ஸ்வெல் 4 ரன்களுடனும், வார்னர் 89 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிபுர் ரஹ்மான், ரஷித்கான் குல்பதீன் நயிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

முன்னதாக டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலயாவின் மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ் வேகத்தில் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் குல்பதீன்  நயிப், ஸத்ரான் இருவரும் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சேர்ந்து 83 ரன்கள் சேர்த்தனர். நயீப்  31 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸத்ரான் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார்.

அதிரடியாக பேட் செய்த ரஷித் கான் 3சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 11 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா 42 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப  ரன்களில் ஆட்டமிழந்தனர்.

38.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில்  கம்மின்ஸ், ஜம்பா தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x