Last Updated : 06 Jun, 2019 08:37 AM

 

Published : 06 Jun 2019 08:37 AM
Last Updated : 06 Jun 2019 08:37 AM

போராடி வென்றது நியூஸி.: கடைசிநேர ெநருக்கடியை பயன்படுத்தாத வங்கதேசம்: ராஸ் டெய்லர், ஹென்றி அபாரம்

தூண் போன்ற ராஸ் டெய்லரின் பேட்டிங், ஹென்றியின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் உலககக் கோப்பைப் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

இந்த தொடரில் நியூஸிலாந்து அணி பெறும் 2-வது வெற்றியாகும். வங்கதேசம் அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் ஒவ்வொரு போட்டியிலும் மெருகு ஏறிக்கொண்டே வருகிறது. 40 ஓவர்களுக்கு மேல் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பிய வங்கதேச அணியினர் கடைசிநேரத்தில் நெருக்கடி கொடுத்தும் விக்கெட் எடுக்கமுடியாமல் வெற்றியை தொலைத்தனர்.

ஒட்டுமொத்தத்தில் நியூஸிலாந்துக்கு தங்களின் முதல் ஆட்டத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியதைப் போன்று எளிதான வெற்றியாக இது அமையவில்லை. கம்பி மீது நடப்பதைப் போன்று கடைசி நேரத்தில் நியூஸிலாந்து விளையாடி திக், திக் வெற்றியைப் பெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேச அணியினர் 49.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 245 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17 பந்துகள் மீதம் இருக்கையில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர் ஆடிய ஆட்டம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியும். கடைசிநேரத்தில் சான்ட்னரின் பேட்டிங், டேனியல் வெட்டோரியின் பேட்டிங்கை நினைவு படுத்தியது.

டெய்லர், வில்லியம்ஸன் கூட்டணிதான் 105ரன்கள் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றனர்.

இதில் வில்லியம்ஸன் 40 ரன்களிலும், ராஸ் டெய்லர் 82 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். மற்ற வீரர்கள் அனைவரும் 25 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர்.

வெற்றிக்கு அருகே வந்தபோது, 218 ரன்கள்வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து 238 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது.

ஆனால், சான்ட்னர், பெர்குஷன் ஜோடி கடைசி நேரத்தில் அணியை காத்து வெற்றியை உறுதி செய்தனர். இந்த இருவரில் ஒருவர் விக்கெட் வங்கதேசம் அணியினர் வீழ்த்தி இருந்தாலும் ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறி இருக்கும்.

வங்கதேச அணி வீரர்களின் அனுபவமற்ற பந்துவீச்சு, கேப்டன்ஷிப்பில் அனுபவமின்மைதான் இதுபோன்ற கடைசிநேரத் தவறுகளுக்கு காரணமாகிவிடுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரை நியூஸிலாந்தின் ஹென்றி, டிரன்ட் போல்ட், பெர்குஷன் ஆகிய 3 பேரும் சிக்கமானமாகவே பந்துவீசினர். இதில் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும்பகுதி சரிவுக்கு காரணமாகினர்.

வங்கதேச அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர்கள் சர்க்கார், தமிம் இக்பால் இந்தமுறையும் நல்ல தொடக்கம் அளித்தார்கள். ஆனால், இருவரும் 30 ரன்கள் அடிக்கும் பேட்ஸ்மேன்களாகவே இருக்கிறார்கள், உலகத் தரத்துக்கு இணையாக சதம் அடிப்பவராகவோ, அரைசதம் அடிப்பவராகவோ மாறுவது அவசியம்.

அணியில் அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் (64) ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். பேட்ங்கிலும், பந்துவீச்சிலும் ஹசன் முத்திரை பதித்திவிட்டார், பேட்டிங்கில் அரைசதம், பந்துவீச்சில் 2 விக்கெட் என ஹசன் அசத்தினார்.

ஹசன் களத்தில் இருக்கும் வரை வங்கதேச அணியின் ரன் வேகம் சீராக இருந்தது. ஹசன் ஆட்டமிழந்தபின், நடுவரிசையில் வந்து வீரர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் ஆட்டமிழந்தனர். இன்னும் 30 ரன்கள் கூடுதலாக வங்கதேசம் அடித்திருந்தால், நிச்சயம் வெற்றி கிடைத்திருக்கும்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங் செய்தது. வங்கதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் நல்ல தொடக்கம் அளித்தனர். நியூஸிலாந்தின் போல்ட், ஹென்றி பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு ஆடி பவுண்டரிகள் அடித்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சவுமியா சர்க்கார் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சஹிப் அல் ஹசன், தமிமுடன் சேர்ந்தார். தமிமும் நீ்ண்டநேரம் நிலைக்கவில்லை 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வந்த முஷ்பிகுர் ரஹிம், ஹசனுக்கு துணையாக ஆடினார். 19 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹிம் ஆட்டமிழக்க அடுத்து மிதுன் வந்தார்

நிதானமாக ஆடிய சஹிப் அல் ஹசன் 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் நிலைக்காத ஹசன் 64 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 151 ரன்களுக்கு 4வது விக்கெட்டை இழந்தது வங்கதேசம்.

ஹசன் ஆட்டமிழந்தபின் நடுவரிசை, பின்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து ஆடாமல் வேகமாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.  மிதுன்(26), மகமதுல்லா(20), மொசாடக் ஹூசைன்(11), சைபுதீன்(29), மோர்தசா(1), மிராஜ்(7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 151 ரன்களுக்கு 4 வது விக்கெட்டை இழந்த வங்கதேசம் அடுத்த 93 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

49.2 ஓவர்களில் வங்கதேசம் 244ரன்களக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

245 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கப்தில், முன்ரோ கடந்த போட்டியைப் போன்று நிலைத்து ஆடாமல் ஏமாற்றம் அளித்தனர். கப்தில் 25, முன்ரோ 24 ரன்களில் ஆட்டமிழந்ததால், 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை தொடக்கத்திலயே  நியூஸிலாந்து இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர், கேப்டன் வில்லியம்ஸன் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். அனுபவம் மிக்க டெய்லர், வில்லியம்ஸன் இருவரும் மோசமானபந்துகளை மட்டும் தேர்வு செய்து அடித்து ஸ்கோரை உயர்த்தினர். ராஸ் டெய்லர் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

நிதானமாக ஆடிவந்த வில்லியம்ஸன் 40 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த லதாமும் டக்அவுட்டில் மெஹதி ஹசனின் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 162 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது நியூஸிலாந்து

அடுத்து நீஷம் களமிறங்கி, டெய்லருடன் சேர்ந்தார். இருவரும் பொறுமையாக பேட் செய்து அணியை 200 ரன்களைநோக்கி நகர்த்தினர். மொசாடக் ஹூசைன் வீசிய 29-வது ஓவரில் டெய்லர் 82ரன்களில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் களத்துக்கு வந்தார்.

40 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 200 ரன்களை எட்டியது. வெற்றிக்கு 60 பந்துகளில் 45 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. நியூஸிலாந்து 218 ரன்கள் சேர்த்திருந்தபோது, 43-வது ஓவரில் கிராண்ட் ஹோம் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் நீஷம் 25ரன்களில் வெளியேறினார். 47-வது ஓவரில் ஹென்றி 7ரன்களில் வெளியேறினார். 218 ரன்களில் இருந்து 238 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் நியூஸிலாந்து சிக்கயது.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. சைபுதீன் 47-வது ஓவரை வீசினார். சான்ட்னர் முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். 3-வது பந்தில் ஹென்றி 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 9-வது விக்ெகட்டுக்கு சான்ட்னர், பெர்குஷன் ஜோடி சேர்ந்தனர்.

 சைபுதீன் 2 வைடுகள் வீச 2 ரன்கள் கிடைத்தது, கடைசிப் பந்தில் ஹென்றி ஒரு பவுண்டரி அடித்தார். முஷ்பிர் ரஹ்மான் வீசி 48-வது ஓவரில் சான்ட்னர் பவுண்டரி அடிக்க நியூஸிலாந்து வெற்றி பெற்றது. சான்ட்னர் 17 ரன்னிலும், ஹென்றி 4 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

47.1ஓவர்களில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x