Published : 26 Jun 2019 07:52 AM
Last Updated : 26 Jun 2019 07:52 AM
உலகக்கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றது.
ஆரோன் பிஞ்ச்சின் அதிரடியான சதம், மிட்ஷெல் ஸ்டார்க், பெஹரன்டார்ப் ஆகியோரின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு ஆகியவற்றால் லண்டனில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.
இந்த ஆட்டம் “மினி ஆஷஸ் டெஸ்ட்” போட்டியைப் பார்த்த உணர்வுதான் இருத்து. இரு அணி வீரர்களும் களத்தில் ஆவேசமாக விளையாடியதும், ரசிகர்கள் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும்போது ரசிப்பதும்,விக்கெட் விழுந்தபோது கைதட்டுவதும் என வழக்கத்துக்கு மாறான உற்சாகத்துடன் இருந்தனர்.
உலகக் கோப்பைப் போட்டிக்குள் வரும்போது ஐசிசி தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து தற்போது சிக்கலில் இருக்கிறது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது. 286 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 64 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் 2அடுத்தடுத்த தோல்வி, 4 வெற்றிகள் என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியை உறுதிசெய்துவிட்டது. ஏனென்றால், டைபிரேக்கர் அடிப்படையில் வந்தாலும் முதலில் அதிகமான வெற்றிகள்தான் கணக்கிடப்படும். அந்த வகையில் ஆஸி. தற்போது 6 வெற்றிகளுடன் இருக்கிறது. ரன்ரேட்டைக் காட்டிலும் அதிக வெற்றிகளே கணக்கிடப்படும் என்பதால், ஆஸி முன்னேறிவிட்டது . இன்னும் 2 ஆட்டங்கள் இருக்கின்றன.
ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், வார்னர் கூட்டணி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார்கள். மற்ற வீரர்கள் யாரும் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை. ஆட்டநாயகனாக கேப்படன் ஆரோன் பிஞ்ச் தேர்வு செய்யப்பட்டார்.
கடைசி 6 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு ஆஸி. இழந்தது மோசமான பேட்டிங்.பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் மிட்ஷெல் ஸ்டார்க், பெரஹரன்டார்ப் இருவரின் ஸ்விங் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறவைத்துவிட்டது. இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்து பேட்டிங்கைப் பொருத்தவரை நெருக்கடி, அழுத்தம் அதிகரிக்க, அதை சமாளிக்க முடியாமல் வீரர்கள் பேட்டிங் செய்தது தெளிவாகத் தெரிந்தது. இங்கிலாந்து அணியின் பலமே “அட்டாக்கிங் கேம்தான்” . அதை தொடக்கத்திலேயே பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த யுத்திய பயன்படுத்திய முந்தைய ஆட்டங்களில் எதிரணியை நிலைகுலையச்செய்து வென்றார்கள். ஆனால், இலங்கை அணிக்கு எதிராக “டிபன்ஸ் ப்ளே” எடுத்து தோற்றார்கள். அதேபோலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நேற்று விளையாடி தோற்றனர்.
தொடக்கத்தில் ஏற்பட்ட சரிவை சரியாகப் பயன்படுத்திய ஆஸ்திரேலிய பந்தவீச்சாளர்கள், இங்கிலாந்தை மீண்டும் எழுந்திருக்க விடவில்லை. தென் ஆப்பிரிக்க வீரர்களைப் போல் நெருக்கடியை சமாளித்து ஆடும் திறமை இல்லாததால், இந்த முறையும் “சோக்கர்ஸ்” ஆக மாறினர் இங்கிலாந்து அணியினர்.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரைக்கும் இதுவரை 4 வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அடுத்துவரும் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில் இருக்கிறது. இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தால், அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடியலாம். அல்லது ஒரு போட்டியில் வென்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக இங்கிலாந்து காத்திருக்க நேரிடும்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கணித்த அரையிறுதிப்பட்டியில் இங்கிலாந்து அணி இல்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “இங்கிலாந்து அணி கடைசி 3 போட்டிகளில் சி்க்கிக்கொள்ளும், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்துவது சாதரணமல்ல. அதனால், இந்த முறையும் இங்கிலாந்து அரையிறுதிவாய்ப்பை இழக்கும்” எனத் தெரிவித்திருந்தார். அது நடந்து விடப் போகிறதோ
உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை வெல்ல முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த முறையும் வெல்லமுடியாமல் அந்த வரலாற்றை ஆஸ்திரேலிய அணியிடம் அளித்தது இங்கிலாந்து
டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் இரவு பெய்த மழை பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கம் என கணித்தார் மோர்கன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பிஞ்ச்,வார்னர் நல்ல தொடக்கம் அளித்தனர். கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர் இங்கிலாந்து பந்துவீச்சை நன்கு சமாளித்து, சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இந்த உலகக் கோப்பை தொடரில் 3-வது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.
ஆரோன் பிஞ்ச் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்த 2-வது கேப்டன் எனும் பெருமையை பிஞ்ச் பெற்றார். வார்னர் அரைசதம் அடித்து, உலகக்கோப்பையில், 500 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். வார்னர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். பிஞ்ச் 100 ரன்களில்(2சிக்ஸர், 11பவுண்டரி) ஆட்டமிழந்தார். இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த எந்த வீரர்களும் பயன்படுத்தவில்லை என்பதுதான் வேதனை.
ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் இருந்தபோது, நிச்சயம் 300 ரன்களுக்கு மேல் செல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால், பிஞ்ச், வார்னர் சென்றபின், அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் கைஓங்கத் தொடங்கியது. 173-க்கு 2-வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 86 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்வரிசையில் வந்த கவாஜா(23), ஸ்மித்(38), மேக்ஸ்வெல்(12), ஸ்டாய்னிஸ்(8), கம்மின்ஸ்(1) என விரைவாக ஆட்டமிழந்தனர்.
நடுவரிசை வீரர்கள் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்திருந்தால், நிச்சயம் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும். அந்த வகையில் வார்னர், பிஞ்ச் இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலிய நடுவரிசை பேட்டிங் கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரையில் பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை என்ற கூறலாம். பிஞ்ச், வார்னர் இருவரையும் தொடக்கத்திலேயே வீழ்த்தி இருக்க வேண்டும் இருவரையும் நங்கூரமிடவிட்டது தவறு. அதன்பலனை அனுபவித்தனர்.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
221 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பெஹரன்டார்ப் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் இன்ஸ்விங் பந்தை ஆடத்தெரியாமல் க்ளீன் போல்டாகினார் வின்ஸ்.
கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் மெக்கலத்தை இதேபோன்றுதான் போல்டாக்கினார் ஸ்டார்க் என்பது நினைவிருக்கும்.
அதன்பின் வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரூட்(8), மோர்கன்(4), பேர்ஸ்டோ(27) என 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.
பெஹரன்டார்ப், ஸ்டார்க் பந்துவீச்சுக்கு இங்கிலாந்து வீரர்கள் ஒட்டுமொத்தமாகவே திணறினர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேஸன் ராய் இல்லாத விளைவை இங்கிலாந்து அணி அனுபவித்தது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருபேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இதுவரை எந்தப் போட்டியிலும் தனது வழக்கமான அதிரடியை அவர் வெளிக்காட்டவில்ல. இந்த ஆட்டத்திலும் 25ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணிக்கு எதிராகவும் பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை ஆடினார், இந்த ஆட்டத்திலும் ஸ்டோக்ஸ் போராடினார். ஆனால், அவரின் போராட்டத்துக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைக்கவில்லை, நல்ல பாட்னர்ஷிப் அமையவில்லை. இதுபோன்ற மிகப்பெரிய இலக்கை, வலிமையான அணிக்கு எதிராக சேஸிங் செய்யும்போது நல்ல பாட்னர்ஷிப் அவசியம்.
ஸ்டோக்ஸ் மட்டும் களத்தில் போராடி 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வோக்ஸ்(26), மொயின் அலி(6), ரஷித் (25), ஆர்ச்சர்(1)என ஆட்டமிழந்தனர். கடைசி 44 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கத்தில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்த விரைவான சரிவுதான், பாட்னர்ஷிப் இன்றி சென்றதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 44.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 221ரன்களில் ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 4 விக்ெகட்டுகளையும், பெஹரன்டார்ப் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT