Published : 26 Jun 2019 06:09 PM
Last Updated : 26 Jun 2019 06:09 PM
மான்செஸ்டரில் நாளை நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இந்திய அணியை எதிர்த்து களமிறங்குகிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி.
உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியை வெல்ல முடியாமல் போராடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் இந்த முறை அதை மாற்றும் முயற்சியோடு இறங்குகிறது.
கடைசியாக 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வென்றது மே. இ.தீவுகள் அணி அதன்பின் வெல்லவில்லை.
இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றிகள், ஒரு போட்டி ரத்து என 9 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது இன்னும் 2 வெற்றிகள் ஏறக்குறைய அரையிறுதியை உறுதி செய்துவிடும்.
ஆனால், மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்விகள், ஒரு போட்டிமழையால் ரத்து என 3 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில், அதில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் மேற்கிந்தியத்தீவுகள் இருக்கிறது.
இந்திய அணியைப் பொருத்தவரை முதல் மூன்று போட்டிகளில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
குறிப்பாக தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்ததும், ஜாதவின் ஆட்டத்தையும் சச்சின் கடுமையாக விமர்சித்தார். ஆதாலால், இருவரும் தங்களின் மந்தமான ஆட்டத்தைக் கைவிட்டு பவர் ஹிட்டிங் ஆட்டத்துக்கு திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியில் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் தோனி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது எளிதாக இருக்கும் என்பதால், நாளை அவரின் பேட்டிங் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மற்றவகையில், ரோஹித் சர்மா 2 சதங்கள் அடித்து ரன் குவிப்பில் முன்னணியில் இருந்து வருகிறார். தவண் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ராகுல் தனது திறமையை நிரூபித்துள்ளார். விராட் கோலி அணியில் தூணாக இருந்து பேட்டிங் செய்து வருகிறார்.
இப்போது அணியில் இருக்கும் மிக்பெரிய கவலை நடுவரிசை மட்டுமே புவனேஷ்வர் குமாருக்கு பதிலாகவாய்ப்பு பெற்ற விஜய் சங்கர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் செயல்படாததால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா கடந்த 3 போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் போட்டியில் மட்டும் மந்தமாக பேட்டிங் செய்தார். அவரை 4-வது இடத்தில் இறக்கிபேட்டிங் செய்ய வைக்கும் முயற்சி சிறப்பான பலனை அளித்து வருகிறது.
தசைப்பிடிப்பு காரணமாக கடந்த இரு போட்டிகளாக ஓய்வில் இருந்துவரும் புவனேஷ்வர் குமார் நாளை வாய்ப்பு பெறுவது கடினம்தான், ஆதலால், அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் தொடர்ந்து நீடிக்கவே வாய்ப்பு இருக்கிறது.
பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷமி தொடக்கத்தில் பந்துவீசுவார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கெயில், ஹோப் உள்ளிட்ட இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், பும்ராவின் இன்ஸ்விங்கிற்கு அதிகம் திணறுவார்கள். இதைப்பயன்படுத்தி பும்ரா விரைவாக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்.
அதேபோல, ஷிம்ரன் ஹெட்மெயர், ஷாய் ஹோப், ஹோல்டர் ஆகியோர் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து விளையாடப் பழகவில்லை. கடந்த காலங்களில் இருவரின் பந்துவீச்சுக்கு அதிகம் இலக்காகியுள்ளார்கள் என்பதால், குல்தீப், சாஹல் பந்துவீச்சு முக்கியத் துருப்பாக இருக்கும்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொருத்தவரை அதிரடி வீரர் ரஸல் தொடரில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டது பெரும் பின்னடைவாகும். அவருக்கு பதிலா அம்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக கெயில் சிறப்பாக பேட்டிங் செய்தும் அணி வெற்றி பெறவில்லை. நாளைய ஆட்டத்தில் கெயில், சாய்ஹோப், லூயிஸ், ஹெட்மயர், ஜேஸன் ஹோல்டர், பிராத்வெய்ட் என வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி தோல்வி அடைந்த கடந்த போட்டிகளில் இறுதிவரை போராடித்தான் வீழ்ந்தது. இவர்களின் போராட்டக் குணம் நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். அடுத்துவரும் போட்டிகள் அரையிறுதிக்குள் செல்ல முக்கியமானது என்பதால், வெற்றிக்காக கடுமையாக மே.இ.தீவுகள் வீரர்கள் முயற்சிப்பார்கள்.
அதிலும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிராத்வெய்ட்டின் ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய அணிக்கு பிராத்வெய்ட்டின் பேட்டிங்கும், பந்துவீச்சும் சவாலாக இருக்கும்.
பந்துவீச்சில் தாமஸ், காட்ரெல், பிராத்வெய்ட், ஹோல்டர் என வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம் இருந்தாலும், பவுன்ஸர் போட்டு திணறவிடுவார்களேத் தவிர லைன்அன்ட் லெத்தில் வீசுவது குறைவுதான். அதனால்தான் கடந்த போட்டிகளில் எதிரணிகளால் பந்துவீச்சு அடித்து நொறுக்கப்பட்டது. இந்த தவறைத் திருத்திக்கொண்டு லைன், லென்தில் சீராக பந்துவீசினால் இந்திய அணிக்கு சிக்கல்தான்.
இந்திய நேரப்படி போட்டி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT