Last Updated : 01 Jun, 2019 04:33 PM

 

Published : 01 Jun 2019 04:33 PM
Last Updated : 01 Jun 2019 04:33 PM

க்ரீன்டாப் பிட்சால் பேட்ஸ்மேன்கள் திணறல் : 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாற்றம்

நியூசிலாந்து வீரர் ஹென்றியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இலங்கை அணியின் தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பிறகு மேலும் விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 என்று தடுமாறி வருகிறது.

இங்கிலாந்தில் 12-வது உலகக்கோப்பைப் போட்டித் தொடர் நடந்து வருகிறது. கார்டிப் நகரில் இன்று நடந்து வரும் 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டு நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஏனென்றால், மைதானம் பசும்புற்களால் நிறைந்திருந்தது. அதைக்காட்டிலும், ஆடுகளத்தில் புற்கள் வெட்டப்படாமல் மைதானமும், ஆடுகளமும் ஒரேமாதிரியாக இருந்தது.

வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியாக முதல் செஷன் வரை இருக்கும் என்பதை புரிந்துகொண்ட கேப்டன் வில்லியம்ஸன் சிந்திக்காமல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக அமைக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், ஆடுகளங்கள் பெரும்பாலானவே தொடக்கத்தில் பந்துவீச்சாளர்களுக்கும் பின்னர் பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாக மாறும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாடுவது அவசியம்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் விக்கெட்டை பறிகொடுத்ததைப் போலவே இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் இலங்கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஹென்றி, டிரன்ட் போல்ட் இருவரும் இலங்கை பேட்ஸ்மேன்களை தொடக்கத்தில் இருந்தே மிரட்டினார்கள். இருவரின் பந்துகளும் நன்றாக ஸ்விங் ஆகி, பேட்ஸ்மேன்கள் தொட முடியாத அளவுக்கு வந்தன.

இலங்கை தரப்பில் திரிமானே, கருணாரத்னே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஹென்ரி வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே திரிமானே எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து குஷால் பெரேரா வந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். பெரேரா மட்டும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

ஹென்ரி வீசிய 9-வது ஓவரில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. முதல் பந்தில் மிட் ஆன் திசையில் நின்றிருந்த கிராண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து பெரேரா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மென்டிஸ் அடுத்த பந்தில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த கப்திலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.

அடுத்து டிசில்வா களமிறங்கி, கருணாரத்னேயுடன் இணைந்தார். ஆனால், பசும்புல் ஆடுகளத்தில் பந்துகள் பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத வகையில் எகிறின. இதனால், இலங்கை பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க திணறினார்கள்.

12-வது ஓவரை ஹென்ரி வீசினார். 2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த டிசில்வா 4 ரன்கள் சேர்த்தநிலையில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். இவரும் 2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்தார். 15-வது ஓவரை டி கிராண்ட்ஹோம் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் கீப்பர் லதாமிடம் கேட்ச் கொடுத்து மேத்யூஸ் ஆட்டமிழந்தார். 59ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி திணறியது.

6-வது விக்கெட்டுக்கு மென்டிஸ் களமிறங்கி, கருணாரத்னேயுடன் இணைந்தார். ஆனால், மென்டிஸ் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

பெர்குசன் வீசிய 16-வது ஓவரில் நீஷத்திடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.

60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை ரன் சேர்க்க திணறி வருகிறது. களத்தில் பெரேரா 3 ரன்னிலும், கருணாரத்னே 19 ரன்களுடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x