Published : 09 Jun 2019 11:01 AM
Last Updated : 09 Jun 2019 11:01 AM
ஜேம்ஸ் நீஷத்தின் வேகப்பந்துவீச்சு, கேப்டன் வில்லியம்ஸனின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், டான்டனில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.
உலகக் கோப்பைத் தொடங்கியதில் இருந்து தான் சந்தித்த 3 போட்டிகளிலும் வென்று நியூஸிலாந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 32.1. ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம் நீஷம் 10 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் ஸ்டார்க் கடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் உலககக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்து சார்பில் ரிச்சர்ட் ஹாட்லி, ஷேன் பாண்ட், டிம் சவுதி, டிரன்ட் போல்ட் ஆகியோருக்கு அடுத்தார்போல், இப்போது நீஷம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் பேட் செய்தபோது பெர்குஷன் வீசிய பவுன்ஸர் அவர் ஹெல்மெட்டில் பட்டு எகிறது. அதோடு ஆட்டமிழந்து வெளியேறிய ரஷித் கான் பந்துவீச அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்கள் பந்துவீச வேண்டாம் என்று அறிவுறுத்தவே ரஷித் கான் ஓய்வு எடுத்தார். ரஷித் கான் இல்லாமல் ஆப்கானிஸ்தான் பந்துவீசியது பெரும் பின்னடைவாகும்.
ரஷித் கானுக்கு இன்று மருத்துவப் பரிசோதனை நடக்க உள்ளது.தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபின்புதான் தொடர்ந்து அவர் பந்துவீசுவது குறித்து தெரிவிக்கப்படும். ஆனால், நேற்று நலமாக இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்தாலும், மருத்துவர்கள் முடிவே இறுதியானது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரத்துல்லா ஜஜாய், அலி ஜத்ரன் நல்ல தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்து இருவரும் பிரிந்தனர். ஜஜாய் 34 ரன்னிலும், ஜத்ரன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்கள் ஆட்டமிழந்தபின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
ஹஸ்மத்துல்லா ஷாகிதி மட்டுமே நிலைத்து ஆடி 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வேகப்பந்துவீச்சில் அசத்திய நீஷம் 24-வது ஓவரில் முகமது நபரி(9) ஜத்ரன்(5) ஆகியோரை ஒரே ஓவரில் சாய்த்து அதிர்ச்சி அளித்தார். 41.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. நீஷம் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், பெர்குஷன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள், கப்தில், மன்ரோ நிலைத்து ஆடத் தவறினார். அப்தாப் ஆலம் பந்துவீச்சில் கப்தில் முதல்பந்திலியே டக்அவுட்டாகினார். மன்ரோ 22 ரன்னில் ஆலம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்ஸன், ராஸ் டெய்லர் இணைந்து அணியை வழிநடத்தினார்கள்.
நிதானமாக பேட் செய்த வில்லியம்ஸன் அரைசதம் அடித்தார். டெய்லர் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 90 ரன்கள் சேர்த்தனர்.
வில்லியம்ஸன் 79 ரன்னிலும், லதாம் 13 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
107 பந்துகள் மீதமிருக்கையில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT