Published : 23 Jun 2019 07:53 PM
Last Updated : 23 Jun 2019 07:53 PM
ஹாரிஸ் சோஹைல், பாபர் ஆசம் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தால், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.
ஓவருக்கு 6 ரன் ரேட் வீதம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு பெரும் சிக்கலாக இருக்கப் போகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சோஹைலுக்கு அதன்பின் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இன்று கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சோஹைல், 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 59 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
துணையாக ஆடிய பாபர் ஆசம் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். ஆனால், இமாத் வாசிமுடன் கூட்டணி சேர்ந்த சோஹைல் விரைவாக 71 ரன்கள் சேர்த்தார். கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 91 ரன்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. வேகப்பந்துவீச்சாளர்களான ரபாடா, இங்கிடி, மோரிஸ் ஆகியோரின் ஓவர்களை துவைத்துத் தொங்கவிட்டார் சோஹைல். இம்ரான் தாஹிர் மட்டுமோ ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்ஹக், பக்கர் ஜமான் இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் பக்கர் ஜமான் 44 ரன்களில் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இமாம் உல் ஹக்கும் 44 ரன்னில் அடுத்த சிறிதுநேரத்தில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம், முகமது ஹபீஸ் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஹபீஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசத்துடன், ஹாரிஸ் சோஹைல் சேர்ந்தார்.
இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பாபர் ஆசம் நிதானமாக ஆட, சோஹைல் காட்டடியில் இறங்கினார். 38 பந்துகளில் சோஹைல் அரை சதமும், பாபர் ஆசம் 61 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர்.
இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் துணையாக ஆடிய பாபர் ஆசம் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த இமாத் வாசிமும், சோஹைலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. 23 ரன்களில் இமாத் வாசிம் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வகாப் ரியாஸ் 4 ரன்னிலும் சிறப்பாக ஆடிய சோஹைல் 89 ரன்னிலும் வெளியேறினர்.
சர்பிராஸ் அகமது 2 ரன்னிலும், சதாப்கான் ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும், இங்கிடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT