Published : 16 Jun 2019 10:19 AM
Last Updated : 16 Jun 2019 10:19 AM
கார்டிப்பில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற உலகக்கோப்பை 2019-ன் 21வது ஆட்டத்தில் ஆப்கான் அணியை 125 ரன்களுக்குச் சுருட்டிய தென் ஆப்பிரிக்கா பிறகு அடித்து நொறுக்க வேண்டிய இலக்கை ஆமைவேகத்தில் விரட்டி 28.4 ஒவர்களில் 1 விக்கெட்ட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மொத்தத்தில் இந்த ஆட்டம் எப்படி இருந்தது என்றால் ஆப்கான் ஒரு டி20 போட்டியில் ஆடுவது போலவும், தென் ஆப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவது போலவும் இருந்தது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆப்கான் அணியை பேட் செய்ய அழைத்தது, அந்த அணி சுமாரான தொடக்கம் கண்டது, ஆனால் இடையிடையே மழையால் ஆட்டம் தடைபட்டதால் தொடக்க வீரர்கள் தங்கள் உத்வேகத்தை இழந்தனர். 56/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 69 ரன்களுக்கு இம்ரான் தாஹிர், பெலுக்வயோ, கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களுக்குச் சுருண்டது. இந்த 69 ரன்களில் ரஷீத் கான் மிகப்பிரமாதமாக பேட் செய்து 25 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அசத்தினார், இவரை இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறக்கி ஒரு முறையான ஆல்ரவுண்டராக வளர்த்தெடுக்கப் படவேண்டிய திறமை உள்ளவர், ஆனால் ஏனோ அவரை ஆப்கான் அணி முடக்குகிறது.
இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும் பெலுக்வயோ 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோரிஸ் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்க அணிக்க்கு டி.எல்.எஸ் முறைப்படி அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஸ்கோரான 48 ஓவர்களில் 127 ரன்கல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குவிண்டன் டி காக் 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து கேப்டன் குல்பதின் நயீப் பந்தில் காலியானார். ஹஷிம் ஆம்லா பேட்டிங் மறதியில் இருக்கிறார் போல் தெரிகிறது. 83 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களை எடுத்து ஹசிம் ஆம்லா வெறுப்பேற்றினார், ஆனால் அவருக்கே வேதனை தரும் ஒரு இன்னிங்ஸாகவே இது அமைந்த்து.
ஃபாப் டுபிளெசிஸ் அணி தற்போது 9வது இடத்திலிருந்து 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக வென்று கையைக் கட்டிக் கொண்டு மற்ற அணிகளின் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
ஆப்கான் அணி 2வது மழைத்தடைக்கு முன்னதாக நன்றாக ஆடினர். அதிரடி இடது கை வீரர் ஹஸ்ரத்துல்லா சஸாய் (23), நூர் அலி சத்ரான் (32) ஸ்திரமாக ஆடினர். ஸத்ரான் ஒரு எல்.பி. தீர்ப்பை ரிவியூ செய்து மாற்றும்போது 30 ரன்களில் இருந்தார். மழை விட்டு ஓவர்கள் 48ஆக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட போது ஆப்கான் மார்ச் ஃபாஸ்ட் தொடங்கியது, 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஹஸ்மதுல்லா ஷாகிதி 8 ரன்களில் பெலுக்வயோ பந்தை எட்ஜ் செய்து நடையைக் கட்டினார்.
இம்ரான் தாஹிர் தன் நல்ல பார்மைத் தொடர்ந்தார், ஒரே ஓவரில் நூர் அலியை கூக்ளியில் பவுல்டு செய்ய, அஸ்கர் ஆப்கானை டக்கில் வீழ்த்தினார். மொகமது நபி, பெலுக்வயோ பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். குல்பதின் நயிப் 5 ரன்களில் இம்ரான் தாஹிரின் ஆக ஷார்ட் பிட்ச் பந்தை குறிபார்த்து கேட்ச் கொடுத்தார். ரஷீத் கான் பிரமாதமாக ஆடி 25 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டத்துக்கு விறுவிறுப்பு சேர்த்தார். 34.1 ஒவர்தான் ஆப்கான் அணி தாக்குப் பிடித்து 125 ரன்களுக்குச் சுருண்டது.
ஹஷிம் ஆம்லா, குவிண்டன் டி காக் இருவரையும் ஆப்கான் பவுலர்கள் பவர் ப்ளே வரை 35 ரன்கள் என்று கட்டுப்படுத்தி வைத்தனர், ஆம்லா பேட்டிங் மறதியில் இருக்கிறார். அப்தாப் ஆலம் (11/0), ஹமித் ஹசன் (16/0) சில அசவுகரியமான தருணங்களை ஆம்லாவுக்கு அளித்தனர். ஆனால் விரட்ட பெரிய இலக்கு இல்லாததால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் போய் பிசுபிசுத்துப் போனது. ஆனாலும் 104 ரன்களை ஆம்லா, டிகாக் சேர்த்தனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சதக்கூட்டணி அமைத்தனர்.
ஆம்லா ஏதோ சந்தேகத்தில் ஆடியது போலவே இருந்தது, டிகாக்கிற்கும் ஆம்லாவின் நோய் அவ்வப்போது தொற்றியது, ஆனால் ஆம்லா அளவுக்கு நீண்ட மறதியல்லாமல் திடீரென நினைவு வந்து சில சக்தி வாய்ந்த ஷாட்களை ஆடினார். மொத்தத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று ஆடியதோ என்னவோ தெரியவில்லை சரளம் மிஸ்ஸிங், அதனாலேயே இந்த ஆட்டம் இந்த உலகக்கோப்பையின் மிக அறுவையான ஆட்டமாக இதுவரை உள்ளது. ஆட்ட நாயகன் இம்ரான் தாஹிர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT