Published : 26 Jun 2019 05:08 PM
Last Updated : 26 Jun 2019 05:08 PM
பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அனைவரும் யோசித்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் கட்டியுள்ளார். புரியவில்லையா..
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோனியின் மந்தமான பேட்டிங்கை சச்சின் காட்டமாக விமர்சித்துள்ளார். தோனியை மட்டுமல்ல, அவருடன் பேட்டிங் செய்த ஜாதவையும் சாடியுள்ளார்.
தோனி ஒழுங்காக பேட்டிங் செய்வதில்லை, பேட்டிங் சில சமயங்களில் கைகூடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுவது முதல்முறை அல்ல, இதற்கு முன்பும் வந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் தோனி மீதான வர்த்தக பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வேறு சம்பவத்தை கூறி அந்த விஷயம் மழுங்கடிக்கப்படும்.
கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இந்திய அணிக்காக தோனி சிறப்பாக விளையாடவில்லை என்று அனைவரும் அறிந்ததே. ஆனால், உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் தோனியின் பெயர் சேர்க்கப்பட்டவுடனே அவர் மீதான எதிர்பார்ப்பு செயற்கையாக ஊதி பெரிதாக்கப்பட்டது. தோனி என்ற ஒற்றை நபர் அணியை தூக்கி சுமப்பதுபோல் கட்டமைக்கப்பட்டார்
இந்த உலகக்கோப்பை தோனிக்கு கடைசியானதாக இருக்கும் என்பதால் நிச்சயம் இந்திய அணிக்காக அவரின் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஆனால், உலகக் கோப்பைப் போட்டி தொடங்கி இந்திய அணியும் 4 போட்டிகளில் பங்கேற்றபின் தோனியின் பேட்டிங் மீது கடுமையாக விமர்சனக் கணைகள் வீசப்பட்டுள்ளன. தோனி இதுவரை 4 போட்டிகளி்ல வெறும் 90 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் முக முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன்னில் அவுட்டாகினார்.
கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோனி அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று பேட் செய்து ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளினார்.
52 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்து தோனி ஆட்டமிழந்து வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
கேதார் ஜதாவ் சர்வதேச அளவுக்கு சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறமுடியாவிட்டாலும் இயல்பில் அடித்து விளையாடக்கூடியவர். அவரையும் சுயமாக விளையாடவிடாமல் தோனி அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, கோலி ஆட்டமிழந்தபின் ஏறக்குறைய 10 ஓவர்கள் பவுண்டரி அடிக்காமல் இருவரும் ஓவரை தேய்த்தனர்
அரையிறுதிக்குள் செல்ல வேண்டிய முக்கியமான கட்டத்தில் இந்திய அணி இருக்கும் போது, அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன் இப்படி மந்தமாக பேட் செய்வது அணியில் ஆரோக்கியமான பேட்டிங் வரிசைக்கு அழகா? என்று கிரிக்கெட் வட்டாரங்களில் விமர்சகர்களால் கேள்வி அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கேள்விகள் எழும்போதெல்லாம் கிரிக்கெட் அல்லாத காரணங்களைக் காட்டி தோனியின் பிம்பக்கட்டமைப்புக்கு அப்பழுக்கு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இது வீரர்களின் உற்சாக பேட்டிங் திறனை குலைத்துவிடாதா?, தோனியுடன் சேர்ந்து எதிர்முனையில் ஆடும் பேட்ஸ்மேனையும் 'ஸ்ட்ரைக்கை ரொட்டேட்' செய்யவிடாமல் செய்துவிடுமே?.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமாக பேட் செய்த, தோனி, ஜாதவ் குறித்து சச்சின் டெண்டுல்கர் கடுமையான விமர்சனம் வைத்தார். அணியில் உள்ள மூத்த வீரர் ஒருவர் இதுபோன்ற விளையாடலாமா, இப்படிப்பட்ட ஆட்டத்தை தோனியிடம் இருந்தும், ஜாதவிடம் இருந்தும் எதிர்பார்க்கவில்லை என்று காட்டமாகப் பேசினார்.
சச்சினின் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்திய அணிக்காக ஏராளமான பங்களிப்புகள் செய்திருக்கிறார்கள். தோனியை விமர்சிக்க சச்சின் தகுதியில்லாதவரா, தோனியை நியாயமாக விமர்சித்த சச்சின் மீது தோனி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாய்ந்துள்ளார்கள். இதே சச்சின் தான் 2011 உலகக்கோப்பையை வென்றவுடன் முதல் வார்த்தையாக ‘தோனிதான் சிறந்த கேப்டன்’ என்று புகழவில்லையா?
தோனி எனும் மிகப்பெரிய பிம்பத்தின் மீது விமர்சனங்கள் காரணமின்றி வைக்கப்படாது, சில ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் மூலம்தான் வைக்கப்படுகின்றன என்பதை ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. தோனி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 2017-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக 139 ரன்கள் சேர்த்தார் தோனி. அதன்பின் இன்னும் ஒரு போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.
2. 2019-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மட்டுமே தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த நாட்டில் 3 அரைசதங்களும், ஹைதராபாத்தில் ஒருஅரைசதமும் அடித்துள்ளார். நியூஸிலாந்து தொடரில் அடிக்கவில்லை.
3. ஆனால், 2018-ம் ஆண்டில் தோனி பல போட்டிகளில் பேட் செய்துள்ளார், சில போட்டிகளில் பேட் செய்யவில்லை. ஆனால், அவர் தான் பேட் செய்த எந்த போட்டியிலும் அரைசதம்கூட அடிக்கவில்லை என்பது எத்தனை ரசிகர்களுக்குத் தெரியும்?
4. 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடிக்கும் முன் தோனி கடைசியாக எப்போது அரைசதம் அடித்தார் தெரியுமா, 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தர்மசலாவில் இலங்கை அணிக்கு எதிராக 65 ரன்கள் சேர்த்தார் ஏறக்குறைய அரைசதம் அடிக்கவே ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
தோனிக்கு கிடைத்த இதுபோன்ற சலுகைகள் இந்திய அணியில் வேறு எந்த வீரருக்கும் பிசிசிஐ வழங்கி இருக்குமா?. ஒரு வீரர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் அரைசதம் அடிக்கவில்லை என்றால் அணியை விட்டு தூக்கிவிடும் தேர்வுக்குழுவினர் தோனி ஒரு ஆண்டுக்கும் மேலாக அரைசதம் அடிக்கவில்லை, 2 ஆண்டுகளாக சதம் கூட அடிக்கவில்லை. ஆனால், அணியில் இருந்து தோனி நீக்கப்படவில்லை. இதற்கு இதுவரை காரணமில்லை.
அப்படியென்றால், அணியில் மூத்த வீரர்களுக்கு ஒரு நீதி, இளம் வீரர்களுக்கு ஒரு நீதியா?. தோனியின் பேட்டிங் குறித்து எந்தவிதமான கூர்மையான விமர்சனங்களும், கேள்விகளும் வராமல், தாக்காமல் அவரைச் சார்ந்திருக்கும் வர்த்தக வளையம் பாதுகாத்து வருகிறது.
தோனி பேட்டிங்கில் சொதப்பி விமர்சனங்கள் பெரிதாகும்போது கிரிக்கெட்டுக்கு தொடர்பில்லாத சில விஷயங்கள் பரப்பப்பட்டு அந்த விஷயம் மறக்கடிக்கப்படுகிறது.
கடந்த 2014-15-ம்ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருக்கு தோனி தலைமையில் இந்திய அணி சென்றபோது 2 டெஸ்டில் தோல்வி அடைந்தவுடன், எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார்.
தோனியின் இதுபோன்ற செயலை வேறு எந்த வாரியமும் பொறுத்துக்கொள்ளாது, தோனி அணிக்கு தேவையா என்பதை பரிசீலனை செய்திருக்கும். ஆனால், பிசிசிஐ தொடர்ந்து அணியில் தோனியை விளையாட சம்மதித்தது.
தோனியைப் போலவே பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சிறந்த இளம் வீரர்கள் தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்ஸன், ரிஷப் பந்த் என பலரும் வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள். தோனி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் டக்அவுட் ஆகினாலும், 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தார்.
ஆனால், தினேஷ் கார்த்திக் நியூஸிலாந்தில் டி20 போட்டியில் கடைசிஓவரில் ரன் அடிக்கவில்லை என்பதற்காக அடுத்த தொடர் முழுவதும் தேர்வு செய்யப்படாமல் நீக்கப்பட்டார். உலகக் கோப்பைப் போட்டிக்கு இப்போது அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டாலும், தோனியின் முதலுதவிப்பெட்டி என்ற பிம்பத்தில்தான் இருக்கிறார். தோனிக்கு காயம் ஏற்பட்டால்தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு என்று தேர்வுக்குழுத் தலைவர் தாஸ் கூறினார். இதை தினேஷ் கார்த்திக்கே உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட பின் தெரிவித்தார்.
இன்னும் திறமையான இளம் வீரர்களை வலுவான காரணமின்றி பெஞ்சில் அமரவைப்பது எத்தனை நாட்களுக்கு நீடிக்கபோகிறது.
தோனியின் பேட்டிங் ஃபார்ம் ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல உலகக் கோப்பையிலும் மோசமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதற்காண தரவுகளும் உள்ளன
உலகக் கோப்பையில் தோனி.....
2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி தோனிக்கு முதலாவது உலகக் கோப்பை. இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்லாமல் லீக்கில் வெளியேறியது. 4 ஆட்டங்களில் இந்திய அணி மோதியது. இதில் தோனியி்ன் ஸ்கோர் என்ன தெரியுமா, வங்கதேசத்துக்கு எதிராக தோனி(0), பெர்முடாவுக்கு எதிராக தோனி(29), இலங்கை அணிக்கு எதிராக தோனி(0).இந்த தொடரில் தோனியின் ஸ்கோர் மொத்தம் 29 ரன்கள்தான்.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை
2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. இதில் தோனி 9 ஆட்டங்களில் 8 போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்தார். இதில் தோனியின் சராசரி 48.20. ஒரே ஒரு அரைசதம் மட்டுமே தோனி அடித்தார். அதுவும் பைனலின்போது 91 ரன்கள் அடித்தது மட்டுமே.
இங்கிலாந்து(31), அயர்லாந்து(34),நெதர்லாந்து(19நாட்அவுட்),தென் ஆப்பிரிக்கா(12),மே.இ.தீவுகள்(22),ஆஸ்திரேலியா(7), பாகிஸ்தான்(25), இலங்கை(91நாட்அவுட்). இந்த அணிகளுக்கு எதிராக தோனி சேர்த்த ரன்கள் 241 மட்டுமே.
உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 91 ரன்கள் சேர்த்து தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்ததாக ஊடகங்கள் சில தோனியை தூக்கிவைத்து கொண்டாடின. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடியாக ஆடிய கம்பீரை (97)மறந்துவிட்டார்கள்.
2015-ம் ஆண்டு உலகக் கோப்பை
2015-ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் தோனியின் பங்களிப்பு சுமார்தான். 8 ஆட்டங்களில் ஆடிய தோனி 2 ஆட்டங்களில் விளையாடவில்லை. இதில் சராசரி 59.25. அதிகபட்சமாக 85 ரன்கள். 2 அரைசதங்கள் அடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோனி(18), தென் ஆப்பிரிக்கா(18), யுஏஇ அணிக்கு எதிராக தோனி களமிறங்கவி்ல்லை, மே.இ.தீவுகள்(45நாட்அவுட்), அயர்லாந்துக்கு எதிராக தோனி களமிறங்கவில்லை, ஜிம்பாப்வே(85நாட்அவுட்), வங்கதேசம்(6), ஆஸ்திரேலியா(65). ஆக இந்த உலகக் கோப்பைத் தொடரில் தோனியின் எண்ணிக்கை 233 ரன்கள் மட்டுமே.
ஆக கடந்த 3 உலகக் கோப்பைப் போட்டியில் தோனியின் பங்களிப்பு என்பது 2007(29ரன்கள்), 2011(241ரன்கள்), 2015(233ரன்கள்) மட்டும்தான்.
அப்படி இருக்கும்போது,கடந்த காலங்களில் நிலவிய மோசமான பேட்டிங்கை தோனி வெளிப்படுத்திவிடக்கூடாது, மெத்தமான இருந்துவிடக்கூடாது என்று சச்சின் விமர்சனம் செய்ததில் என்ன தவறு இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தோனி நீல நிற உடை அணிந்து விளையாடினால் ஒருமாதிரியான விளையாட்டையும், மஞ்சள் நிற உடை அணிந்து விளையாடினால் அதில் ஆக்ரோஷம், ஆவேசம் இருக்கிறது என்பதையும் பலர் உணர்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்றும் தோனி மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் வரும் போட்டிகளில் தோனி பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT