Published : 24 Jun 2019 10:07 AM
Last Updated : 24 Jun 2019 10:07 AM
ஹாரிஸ் சோஹைலின் அதிரடி ஆட்டம், வகாப் ரியாஸ், சதாப் கானின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால், லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றியது பாகிஸ்தான்.
ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோஹைலுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பின் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் தென் ஆப்பிரிக்க அணி வெளியேறியது இதுதான் முதல் முறையாகும்.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் அணி அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்ட நிலையில், 2-வது அணியாக தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. 309 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்து 49 ரன்களில் தோல்வி அடைந்தது.
உலகக்கோப்பை போட்டியில் இதுவரை ஒருமுறைகூட தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்தது இல்லை என்பதை நேற்றைய போட்டியில் உறுதி செய்தது. உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச சேஸிங் இலக்கு என்பது கடந்த 2011-ம் ஆண்டு நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 296 ரன்களை துரத்தியதே.
அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளில் 300 ரன்களுக்கு மேல் தென் ஆப்பிரிக்க அணி சேஸிங் செய்ய முடியாத அளவுக்கு தடுமாறி வந்தது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு டர்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு போட்டி ரத்து என 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி மீதமுள்ள 3 போட்டிகளையும் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 7 போட்டிகளில் 5 தோல்விகல், ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து என 3 புள்ளிகளுடன் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியினர் உலகக்கோப்பையின் தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை இல்லாமல், விருப்பம் இல்லாமல் ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொண்டதுபோன்றே தோற்றமளித்தது. அந்த அணியைச் சேர்ந்த ஒருவீரர் கூட அர்ப்பணிப்புடன் விளையாடி சதம் அடிக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் அசத்தலாக விளையாடிய டூப்பிளசிஸ், ஹசிம் அம்லா, இம்ரான் தாஹிர், ரபாடா, மோர்கல் இவர்களில் யாருமே இந்த உலகக்கோப்பை போட்டியில் ஜொலிக்கவில்லை, குறிப்பிடத்தகுந்த ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்க அணி விளையாடியதைப் பார்த்தபோது, தோற்பதற்காகவே விளையாடினார்கள் என்று நினைக்கத் தோன்றியது.
குறிப்பாக ஹசிம் அம்லா சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழப்படக்கூடியவர். ஒருநாள் அரங்கில் மிகவேகமாக ரன்களை எடுத்து சாதனை படைத்தவர். ஆனால், உலகக்கோப்பையில் அவரின் செயல்பாடு படுமோசமாக இருந்தது. இதுபோன்று ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக தங்களின் மோசமான செயல்பாட்டால் சிறந்த அணியான தென் ஆப்பிரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.
309 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. முகமது அமீர் வீசிய 2-வது ஓவரில் ஆம்லா கால்காப்பில் வாங்கி 2 ரன்னில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.
2-வது விக்கெட்டுக்கு டூப்பிளசிஸ், டீகாக்குடன் சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டார். இந்த ஜோடி 87 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. டீகாக் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பின் பாகிஸ்தான் கை ஓங்கத் தொடங்கியது. அடுத்துவந்த மார்க்ரம் 7 ரன்னில் ஆட்டமிழக்க, அரை சதம் அடித்த நிலையில், டூப்பிளசிஸ் 63 ரன்களில் வெளியேறினார்.
வான்டர் டூசன், மில்லர் கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். இவர்களைப் பிரிக்க பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்கவில்லை. டூசன் (36), மில்லர்(31) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி வரிசையில் களமிறங்கிய ரபாடா(3), மோரிஸ்(16), இங்கிடி(1) ஆகியோர் வகாப் ரியாஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்கள். பெகுல்க்வாயே 46 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்க அணி 259 ரன்கள் மட்டுமேசேர்த்து 49 ரன்களில் தோல்வி அடைந்தது. வகாப் ரியாஸ், சதாப்கான் தலா 3 விக்கெட்டுகளையும் முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT