Published : 15 Jun 2019 03:07 PM
Last Updated : 15 Jun 2019 03:07 PM
உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் போட்டி நாளை மான்செஸ்டர், ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடக்கிறது.
தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்கும் ஆட்டம், ஏறக்குறைய 100 கோடி மக்கள் காத்திருப்பு, அரசியல் பதற்றம், வீரர்களிடையே அழுத்தம், மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் நாளை நடக்கிறது.
இந்த போட்டியைப் பொருத்தவரைக்கும் இந்தியா, பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா என்றால் நிச்சயம் இல்லை. இந்த போட்டியையும் தவிர்த்து இன்னும் பல போட்டிகள் அரையிறுதிக்குள் செல்ல இருக்கின்றன.
ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றால் செயற்கையாக உண்டாக்கப்படும் பேரெதிர்பார்ப்புகள், வணிக நோக்கத்துக்காக பெரிய அளவில் பேசப்படும் மொழிகள், வர்ணனைகள் ஆகியவைதான் போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டன.
ஆனால், வணிக நோக்கம், செயற்கைத்தன்மை ஆகியவற்றையும் தாண்டி மக்களின் உணர்வுகளோடு தொடர்புடையாதாகவே இரு நாடுகளுக்கு இடையிலான ஆட்டம் பார்க்கப்படுகிறது. இரு நாடுகள் மோதும் போது நிச்சயம் ஒரு நாடு தோல்வியைச் சந்திக்க வேண்டியது இயல்புதான்.
அந்த வகையில் கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து இந்தியாவிடம் தொடர்ந்து பாகிஸ்தான் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. பல்வேறு போட்டிகளில் இரு நாடுகளும் நேருக்குநேர் மோதும் போது, வெற்றி, தோல்விகளைச் சந்தித்து இருந்தாலும், உலகக் கோப்பைப் போட்டியைப் பொருத்தவரை இந்திய அணி வீழ்த்த முடியா அணியாகவே பாகிஸ்தானுக்கு இருந்து வருகிறது. கடந்த 6 உலகக் கோப்பைப் போட்டிகளையும் சுருக்கமாக பார்த்துவிடலாம்.
மியான்தத்தின் கங்காரு கிண்டல்
1992-ம் ஆண்டு சிட்னியில் நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் சேர்த்து. அதைத தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 48.1 ஓவர்களில் 173 ரன்களில் ஆட்டமிழந்து 43 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றபோதிலும், ஜாவித் மியான்தத், கிரண் மோர் இடையிலான உரசல் பெரிதாக பேசப்பட்டது. விக்கெட் கீப்பர் கிரண் மோர் அடிக்கடி நடுவரிடம் அவுட்கேட்டுக்கொண்டே இருந்தார். இதைப் பார்த்த பாக் வீரர் மியான்தத், கங்காரு மாதிரி குதித்து கிரண் மோரை கிண்டல செய்தார்.
அமிர் சோஹைல் வெங்கடேஷ் பிரசாத் உரசல்
1996ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் ஆட்டம் பெங்களூரு மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது. அதைத் தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து 39 ரன்னில் தோல்வி அடைந்தது.
இந்திய பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாக்கர் யூனிஸின் கடைசி 2 ஓவர்களில் மட்டும் 40 ரன்கள் சேர்த்து வெளுத்துவாங்கினார். 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்த ஜடேஜாவின் ஆட்டம் பெரிதாகப் பேசப்பட்டது.
இதைத் தாண்டி பாக் வீரர் அமீர் சோஹைல் இரு பவுண்டரி அடித்துவிட்டு இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத்திடம் பேட்டை காட்டி கிண்டல் செய்தார். ஆனால், அடுத்த பந்தில் வெங்கடேஷ் பிரசாத் சோஹைலை போல்டாக்கி பதிலடி கொடுத்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்டது.
வியக்கவைத்த வெங்கடேஷ் பிரசாத்
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் கடந்த 1999-ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க 47 ரன்னில் இந்திய அணி வென்றது.
இந்த போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்தின் பந்துவீ்ச்சு பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தது. 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கார்கில் போரில் அப்போதுதான் வெற்றி கிடைத்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெரிதாகப் பேசப்பட்டது.
அக்தர் பந்துவீச்சை வெளுத்த சச்சின்
செஞ்சூரியனில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. ஆனால், இந்த ஸ்கோரை 45.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் சதம் அடித்தபோதிலும், சச்சின் 98 ரன்கள் அடித்ததே ரசிக்கப்பட்டது.
ஏனென்றால், போட்டி தொடங்குவதற்கு முன் அக்தர் சச்சின் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு களத்தில் அக்தர் பந்துவீச்சை சச்சின் அடித்து நொறுக்கிவிட்டார்.
அப்ரிடி பந்துவீச்சும், மோசமான பீல்டிங்கும்
2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் ஆட்டம் மொஹாலியில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்து 29 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் சச்சினுக்கு மட்டும் 27, 45, 70, 81 ரன்களின் போது பாகிஸ்தான் வீரர்கள் கேட்சை தவறவிட்டனர். மோசமான பீல்டிங்கும் செய்தனர். தோல்விக்குப்பின் கேப்டன் அப்ரிடி, தனது நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக்கொணடார்.
கோலியின் அதிரடி
2015-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இரு அணிகளும் சந்தித்தன. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 300ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 224 ரன்களில் ஆட்டமிழந்து 76 ரன்களில் தோல்வி அடைந்தது. சச்சின் இல்லாத நிலையில் உலகக் கோப்பையைச் சந்தித்த இந்திய அணிக்கு கோலி 126 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்து வலு சேர்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT