Last Updated : 08 Jun, 2019 04:33 PM

 

Published : 08 Jun 2019 04:33 PM
Last Updated : 08 Jun 2019 04:33 PM

ஆஸி.யின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா கோலி படை?- விஜய் சங்கர், ஷமிக்கு வாய்ப்பு

லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தொடர்  வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாக கோலி தலைமையிலான இந்திய அணி எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை தங்களின் இரு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வென்றாலும், 2-வது ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் தண்ணீர் குடிக்கவைத்துவிட்டார்கள்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சையும், பவுன்ஸரையும் சமாளிக்க முடியாமல் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது ஆஸி..  ஆனால், ஸ்மித், கேரி , கூல்ட்டர் நைல் ஆகியோரின் ஆட்டத்தால் கவுரவமான ஸ்கோரைப் பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் வலிமையே நீண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையை கொண்டிருப்பது என்பதற்கு கடந்த போட்டியே சாட்சி.

அணிக்குள் வார்னர், ஸ்மித் மீண்டும் வந்திருப்பது அந்த அணிக்கு அசுரபலத்தை அளித்திருக்கிறது. மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக வார்னர் சரியாக விளையாடாவிட்டாலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அச்சுறுத்தல் தரக்கூடியவர்.

அதேபோலவே ஸ்மித் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் சதம் அடித்து இந்திய அணியின் வெளியேற்றத்துக்கு காரணமானார். இந்திய அணிக்கு எதிராக 50 ரன்களுக்கும் அதிகமாக சராசரி வைத்துள்ளார் ஸ்மித். இவர் வார்னரைக் காட்டிலும் ஆபத்தானவர்.

இது தவிர ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஸ்டாய்னிஸ், கோல்டர் நைல், ஆடம் ஸாம்பா, கம்மின்ஸ் என நீண்ட பேட்ஸ்மேன்கள் வரிசை இருக்கிறது. இதில் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் எந்த நேரத்திலும் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டிங் செய்யக் கூடியவர்கள்.

கடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பவுன்ஸரை சமாளித்து ஆடமுடியாத ஆஸி. பேட்ஸ்மேன்களை நினைத்து பேட்டிங் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கவலையடைந்துள்ளார். அதை சரிசெய்யும் முயற்சியிலும், இந்திய வீரர்கள பவுன்ஸர் வீசினால் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி அளித்து வருகிறார்.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க்,கூல்ட்டர் நைல், ஆகியோரைத்தான் பிரதானமாக நம்பி இருக்கிறது. இதில் ஸ்டார்க் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றவர், அதிகமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பேட்டிங் விரிசையை குலைத்து அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்தவர் ஸ்டார்க். அதுமட்டுமல்லாமல் குறைந்த போட்டிகளில் அதாவது 77 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல ஃபார்மில் ஸ்டார்க் இருந்து வருகிறார். இவருக்கு துணையாக சிக்கனமாகவும், கட்டுக்கோப்பாகவும் பந்துவீசக்கூடியவர் கம்மின்ஸ் இருவரின் பந்துவீச்சு தொடக்க ஸ்பெல்லிலன் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ரோஹித் சர்மா அபாரமான சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றிக்கு காரணமானார்.  இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஷிகர் தவண் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். குறிப்பாக நாளை கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோரின் பவுன்ஸர் பந்துவீச்சை ஷிகர் தவண் சமாளித்து ஆடுவது அவசியம்.

உலகக் கோப்பைப் போட்டியில் அனைத்து அணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளவர் கேப்டன் விராட் கோலி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்கோர் செய்யாவிட்டாலும்கூட, களத்தில் நின்றுவிட்டால் அணியை வெற்றிபெற வைக்காமல் விடாமாட்டார் என்று கூறும் அளவுக்கு பேட்டிங் இருக்கும். ஆனால், லெக் ஸ்பின்னில் இருக்கும் பலவீனத்தை ஆஸ்திரேலிய அணியினர் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

இந்திய அணியில் நடுவரிசைக்கு நீண்டகாலமாக இருந்த சர்ச்சைக்கு கே.எல்.ராகுல் தீர்வாகியுள்ளார். நாளைய போட்டியில் கேதார் ஜாதவுக்கு வாய்ப்பு அளிப்பது பெரும்பாலும் கேள்விக்குறிதான்.

ஏனென்றால், ஆஸ்திரேலிய வீரர்களின் பவுன்ஸருக்கு எளிதாக கேதார் ஜாதவ் இலக்காகிவிடுவார் என்பதால், அவருக்கு பதிலாக கூடுதல் ஆல்ரவுண்டராக விஜய் சங்கர் சேர்க்கப்படலாம். மேலும் இவரது அரைக்கை அஃப் ஸ்பின் ஆஸி வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது, சிக்கினால் சிதைத்துவிடுவார்கள்.

அணியின் நம்பிக்கை நாயகன் தோனிக்கு பயிற்சிப் போட்டியில் சதம் அடித்தார், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் நிலைத்து ஆடி நம்பிக்கை அளித்துள்ளார்.

இரு சுழற்பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், .யஜூவேந்திர சாஹல் இருவரில் யாரேனும் ஒருவர் அமரவைக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமி அழைக்கப்படலாம்.

சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் சாஹல் பந்துவீச்சைக் காட்டிலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி இருக்கிறார்கள். ஆதலால், கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தி இருந்தாலும் குல்தீப்புக்கு வழிவிட்டுத்தான் ஆக வேண்டும்.

நாளை நடக்கும்  ஓவல் மைதானத்தில்  பந்துகள் நன்றாக எழும்பும் என்பதால், கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஷமி சேர்க்கப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது. பகுதிநேர பந்துவச்சாளராக ஹர்திக் பாண்டியாவோடு, விஜய் சங்கரும் பந்துவீச திட்டமிடுவார்கள்.

ஓவல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவுக்கு கைகொடுக்கும் என்றாலும், சுழற்பந்துவீச்சை எளிதாக ஆஸ்திரிலேய பேட்ஸ்மேன்கள் கையாண்டுவிடுவார்கள். என்பதால் ரவிந்திர ஜடேஜாவுக்கு குறைவான வாய்ப்பு மட்டும அணிக்குள் வர வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி பிரத்யேக திட்டத்தை நிச்சயம் வைத்திருப்பார்கள். அவர்களின் தி்ட்டத்துக்கு மாற்றாக நாமும் மாற்று திட்டம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் சிறப்பாகப் பந்துவீசினார். இந்த போட்டியில் புவனேஷ் குமாரை தொடக்க ஸ்பெல்லில் பந்துவீசச் செய்யாமல் ஷமிக்கு வாய்ப்பு அளித்து புவனேஷ் குமாரை 10 ஓவர்களுக்கு மேல் வீசச் செய்யலாம்.

இந்திய பந்தவீச்சாளர்களின் மிகப்பெரிய பலவீனமாக இருப்பது கடைசியில் களமிறங்கும் டெய்லன்டர்களை வீழ்த்த முடியாமல் திணறுவதுதான். இது இப்போதல்ல டெஸ்ட் தொடரில் இருந்து உலகக்கோப்பை வரை தொடர்கிறது. தென் ஆப்பிரிக்க போட்டியின் போதுகூட பெலுக்வாயோ, ரபாடா ஆகியோரை நிலைக்கவிட்டார்கள். இதுபோன்ற தவறுகளை இந்திய அணியினர் திருத்த வேண்டும்.

ஆடுகளத்தைப் பொறுத்தவரை லண்டன் ஓவல் ஆடுகளம் பேட்ஸ்மேனுக்கு சொர்க்கபுரி. மழைமேகங்கள் இல்லாத பட்சத்தில் நன்றாக வெயில்அடித்தால் டாஸ்வென்றால் யோசிக்காமல் பேட் செய்துவிடுவது சிறப்பாகும். தொடக்கத்தில் விக்கெட் இழக்காமல் நிலைத்துவிட்டால் இறுதியில் ஸ்கோர் 300 ரன்களுக்கு மேல் கொண்டுவந்துவிடலாம். நாளை மேகமூட்டமாக இருந்தால், காற்றின் ஈரப்பதத்தால் பந்துகள் ஸ்விங் ஆகும் என்பதால், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யலாம். இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x