Last Updated : 18 Jun, 2019 09:19 AM

 

Published : 18 Jun 2019 09:19 AM
Last Updated : 18 Jun 2019 09:19 AM

சகிப் அல் ஹசன் 2-வது சதம், லிட்டன் தாஸ் காட்டடி: வங்கதேசம் வரலாற்று வெற்றி: காலியான கரீபியன்ஸ்

சகிப் அல் ஹசனின் ஆர்ப்பரிப்பான சதம், லிட்டன் தாஸின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால் உலகக் கோப்பைப் போட்டியில் டான்டன் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது வங்கதேசம் அணி.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. 322 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் வங்கதேசம் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகள் 2 தோல்விகள், ஒரு போட்டி ரத்து என 5 புள்ளிகளுடன், பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறி அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

அதேசமயம், மேற்கிந்தியத்தீவுகள் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்விகள், ஒரு போட்டி ரத்து என மொத்தம் 3 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பும் குறைந்து வருகிறது.

வங்கதேச அணி வீரர்களின்  நேற்றைய பேட்டிங் மிகப் பிரமாதமாக இருந்தது. தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், சவுமிகா சர்க்காரும் நல்லஅடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். அதை அனுபவ வீரர் சகிப் அல்ஹசன் நன்கு பயன்படுத்திக் கொண்டு மிகச்சிறப்பான சதத்தை அடித்தார். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சகிப் அல் ஹசன் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.

அதுமட்டுமல்லாமல் 6 ஆயிரம் ரன்களையும் கடந்துள்ள சகிப் அல் ஹசன் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன் சேர்த்தவர்கள்  பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள்  அணி அடித்த ஸ்கோர் உண்மையில் 321 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோர். அதை அனாயசமாக  எதிர்கொண்ட வங்கதேசம் அணி 41 ஓவர்களில் சேஸ் செய்து அசத்தியுள்ளனர்.

உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இங்கிலாந்து அணி 328 ரன்களை அயர்லாந்துக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் சேஸிங் செய்ததே சாதனையாக இருந்தது.

அதற்கு அடுத்தார்போல் 2-வது மிகப்பெரிய சேஸிங் சாதனையை வங்கதேசம் நேற்று நிகழ்த்தி 322 ரன்கள் சேர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை முதல் முறையாக வீழ்த்தியுள்ளது.

மிகச்சிறப்பாக ஆடிய சகிப் அல் ஹசன் 99 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 9-வது சதமாகவும் சகிப் அல் ஹசனுக்கு இது அமைந்தது.

 இதில் 16 பவுண்டரிகள் அடங்கும். இவருக்கு துணையாக ஆடிய லிட்டன் தாஸ் 69 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்ததும் உலகக் கோப்பையில் 4-வது விக்கெட்டுக்கு சேர்த்த அதிகமபட்சமாக அமைந்தது.

4-வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸும், சகிப் அல் ஹசனும் ஜோடி சேர்ந்தபின் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் அனைவரும் சராசரியாக ஓவருக்கு 8 ரன்கள் வரை கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

அதிலும் கேப்ரியல் வீசிய 38-வது ஓவரில் லிட்டன் தாஸ் ஹாட்ரிக் சிக்ஸர்களும், பவுண்டரியும் விளாசியது அற்புதம், அந்த ஓவரில் 24 ரன்கள் விளாசினார் லிட்டன் தாஸ். தனது அனுபவமான பேட்டிங்கால் ஜொலித்த சகிப் அல் ஹசன் 16 பவுண்டரிகளையும் மிட் ஆப், மிட் ஆன் திசையில் மட்டும் அடித்து முத்திரை பதித்தார்.

இந்த போட்டியில் வங்கதேசம் அணி பெற்றி வெற்றியின் மூலம் அடுத்துவரும் போட்டிகளில் எந்த அணியும் வங்கதேசத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம், 321 ரன்கள் அடித்தும் வெற்றியை தக்கவைக்க முடியாவிட்டால் மேற்கிந்தியத்தீவுகள் அணியினரை என்னவென்று சொல்வது. 6 வலுவான வேகப்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தும் எந்தவிதமான பயனும் இல்லை. விக்கெட் வீழ்த்தும் திறனற்று, ரன்களை வாரி வழங்கினார்கள்.

லைன் அன்ட் லென்த்தில்பந்துவீசாமல், ஷார்ட் பிட்சாகவும், பவுன்ஸராகவும் வீசியதை வங்கதேச பேட்ஸ்மேன்கள் நன்கு பயன்படுத்தி வெளுத்துக் கட்டினார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் இன்னும் கட்டுக்கோப்புடன், ஒழுக்கமின்மையுடன் பந்துவீசுவதை திருத்திக்கொள்ளவில்லை என்பதுநேற்றைய ஆட்டத்திலும் தெரிந்தது. இந்த போட்டியில் மட்டும் 25 வைடு பந்துகள் உள்ளிட்ட உதிரிகள் 26 ரன்கள் கொடுத்தனர்.

பீல்டிங்கிலும் மிகவும் மோசமாக நேற்று செயல்பட்டனர், 3 கேட்சுகளை நேற்று மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் கோட்டை விட்டனர்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்ட்ரூ ரஸல், கிறிஸ் கெயில் இருவரும் நேற்று டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதுவரை நடந்த போட்டிகளிலும் இருவரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக மேற்கிந்தியத்தீவுகள் அணி வங்கப்புலிகளிடம் காகிதப் புலியானது.

டாஸ்வென்ற வங்கதேசம் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கெயில் 13 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்டில் சைபுதீன் பந்துவீச்சில் வெளியேறினார். 6 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது மேற்கிந்தியத்தீவுகள்.

2-வது விக்கெட்டுக்கு லூயிஸ், ஹோப் இருவரும் சேர்ந்து அணியை மீட்டு 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹோப் 70 ரன்களி்ல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 25 ரன்களில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்குவந்த ஹெட்மெயர் அதிரடியாக பேட் செய்தார். 3 சிக்ஸர், 4 பவுண்டரி என 25  பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

நிதானமாக ஆடிய சாய் ஹோப் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு 96 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹஸ் டக் அவுட்டில் வெளியேறினார். கேப்டன் ஹோல்டர் 33 ரன்னிலும், பிராவோ 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் சேர்த்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

வங்கதேசம் தரப்பில் சைபுதீன், முஷ்தபிசுர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

322 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் நம்பிக்கையான தொடக்கத்தை அளித்தார்கள். தொடக்கத்தில்  பவுன்ஸர்களை வீசி மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் திணறடித்தாலும், அதை அனாசயமாக எதிர்கொண்டு நேரம் செல்ல, செல்ல அடித்து நொறுக்கினார்கள்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர் சர்க்கார் 29 ரன்னில் ரஸல் பந்துவீச்சி்ல் ஆட்டமிழந்தார். அடுத்து அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் களமிறங்கி, இக்பாலுடன் சேர்ந்தார். நிதானமாக தொடங்கிய சகிப் அல் ஹசன் அதன்பின் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். இக்பால் 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48 ரன்னில் காட்ரெல் பந்துவீச்சில் ரன்அவுட்டாகினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 69 ரன்கள் சேர்த்தனர். 49 பந்துகளில் சகிப் அல்ஹசன் அரைசதம் அடித்தார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த முஷ்பிகுர் ரஹிம் ஒரு ரன்னில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு வந்த லிட்டன் தாஸ், சகிப் அல் ஹசனுடன் சேர்ந்தார். இருவரும் மெதுவாக ரன் சேர்க்கத் தொடங்கினாலும், நேரம் செல்லச் செல்ல விளாசலில் ஈடுபட்டனர்.

காட்ரெல், ஹோல்டர், ரஸல், கேப்ரியல், தாமஸ் என 5 வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சும் நேற்று பவுண்டரி,சிக்ஸருக்கு பறந்தன.  பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருந்ததால், பேட்ஸ்மேன் அடித்தவுடன் விரைவாகச் சென்றது, அதற்கு ஏற்றார்போல் ஷாட் பிட்சாகவே பந்துவீசியதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக லிட்டன் தாஸ், மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டார். லிட்டன் தாஸ் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார், சகிப் அல் ஹசன் 83 பந்துகளில் தனது 9-வது சதத்தை பதிவு செய்தார்.

சகிப் அல்ஹசன் 99 பந்துகளில் 16 சிக்ஸர்கள் உள்பட 124 ரன்களையும், லிட்டன் தாஸ் 69 பந்துகளி்ல் 94 ரன்கள்(4 சிக்ஸர், 8 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 41.3 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்து வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x