Published : 07 Jun 2019 07:52 AM
Last Updated : 07 Jun 2019 07:52 AM
உலகக் கோப்பைப்போட்டியில் மற்றொரு சுவாரஸ்யமான ஆட்டம். ஒவ்வொரு பந்தும் வீசப்படும் முன் நிசப்தம், ஷாட் அடித்தபின் ரசிகர்களின் கரகோஷம் என சேஸிங் ஆட்டத்தைப் பார்க்கவே த்ரிலிங்காக அமைந்தது.
ஆட்டத்தின் முடிவு யார்பக்கம் திருப்பும் என்பது தெரியாமல் மாறி,மாறிச் சென்றது நல்லதொரு கிரிக்கெட் விருந்தை ரசிகர்களுக்கு வழங்கியது. சில “உஷ் கண்டுகாதீங்க”வும் இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி ஆட்டத்தில் தங்கள் ஆதிக்கத்தைக் காட்ட நடுவர்களோ விளையாடி ஆட்டத்தின் அதியற்புத நிர்ணயமின்மைத் தருணங்களைக் குலைத்தனர்
மிட்ஷெல் ஸ்டார்க்கின் 5 விக்கெட், ஸ்மித், கோல்டர் நீல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் ஆகியவற்றால் நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 288 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 289 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பயணித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.
46-வது ஓவர்கள்வரை வெற்றி மேற்கிந்தியத்தீவுகளின் பக்கம்தான் இருந்தது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் பிராத்வெய்ட், ஹோல்டர் என இரு வலிமையான பேட்ஸ்மேன்கள் வெளியேறியதும் ஒட்டுமொத்த கணிப்பும் தவிடுபொடியானது.
அராஜகமான நடுவர் தீர்ப்புகள்: கெய்லுக்கு இழைக்கப்பட்ட அநீதி:
இந்த ஆட்டத்தில் ஏராளமான நடுவர் தவறுகள் நடந்தன. கிறிஸ் கெயலுக்கு இருமுறை அவுட் வழங்கி டிஆர்எஸ் முறையில் தப்பித்தார். கடைசியில் அவர் அம்பயர் கால் என்ற ஒரு மாயையில்தான் அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால், ஸ்டார்க் வீசிய 5-வது ஓவரில் கெயில் ஆட்டமிழக்கும் பந்திற்கு முதல் பந்து ஸ்டார்க் வீசியது மிகப்பெரிய நோ-பால், கிரீஸுக்கு வெளியே ஒரு அடிக்கும் அதிகமாக காலைத் தூக்கிவைத்து பந்து வீசினார்.
இந்த நோ-பாலைக் கூட நடுவரால் கவனிக்க முடியவில்லையா? அல்லது வேறு ஏதாவதா என்று தெரியவில்லை. இந்த பந்தை கவனித்து நடுவர் நோபால் அளித்திருக்க வேண்டும். ஆனால்,அடுத்த பந்தில் கெயில் கால்காப்பில் வாங்கியவுடன் அதற்கு எல்பிடபிள்யு கொடுத்தார் நடுவர் கெஃபானே.
அதே போல் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு முறை மேக்ஸ்வெல் பந்தில், இன்னொரு முறை ஆடம் ஸாம்ப்பா பந்தில் எல்.பி. கொடுக்கப்பட்டார், இருமுறையும் ஹோல்டர் ரிவியூ செய்தார் அந்தப் பந்துகள் லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது தெரியவந்தது, அதாவது விதிப்படியே நாட் அவுட், ரிவியூ அந்த இடத்திலேயே முடிந்து போவது.
உண்மையில், அந்த நோ-பாலுக்கு அடுத்த பந்து ப்ரீ ஹிட்தானே. ப்ரீஹிட்டில் எவ்வாறு ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்க முடியும் என்ற சர்ச்சை கெயில் வெளியே சென்றபின் நிகழ்ந்தது. அதுபோல பல பந்துகள் மேற்கிந்தியத்தீவுகள் பேட்ஸ்மேன்களின் தோள்பட்டை வரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பவுன்ஸர் வீசியும் அதற்கு நோபால், வைடு நடுவர்கள் வழங்காதது ஏதோடு ஆஸிக்கு சாதகமாக செயல்பட்டார்களா எனச் சந்தேகிக்க வைக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நேற்று 11 வீரர்கள்தான் விளையாடினார்களா அல்லது நடுவரையும் சேர்த்து 13 வீரர்கள் விளையாடினார்களா? உஷ் கண்டுகாதீங்க! ஒட்டுமொத்தத்தில் கெயிலுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதில் போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது.
இதன் (உஷ்கண்டுகாதீங்க) வெற்றி மூலம் ஆஸ்திரேலிய ஒருநாள் அரங்கில் மீண்டும் ஃபார்ம் பெற்று தொடர்ந்து 10-வது வெற்றியைப் பெறுகிறது. 4 புள்ளிகளுடன் நியூஸிலாந்துக்கு அடுத்த இடத்தில் ரன்ரேட் அடிப்படையில் 2-ம் இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது.
ஸ்டார்க் சாதனை
வெற்றிக்கு முக்கியக் காரணமாக மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீச்சு இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இருவரின் நேர்த்தியான, கட்டுக்கோப்பான, எதிரணியின் ரன்எடுக்கும் வேகத்தை கட்டுப்படுத்தும் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றி.
5 விக்கெட்டுகளை ஸ்டார்க் வீழ்த்தி உலகக் கோப்பைப் போட்டியில் 2-வது முறையாக இந்த சிறப்பைச் செய்துள்ளார். இதற்குமுன், மெக்ராத், அப்ரிடி, கில்மோர், டிரேக்ஸ், அசாந்தா டி மெல் ஆகியோர் மட்டுமே 2 முறை உலகக்கோப்பைப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் மிகக்குறைந்த போட்டியில் 150 விக்கெட்டுகளை எட்டிய வீரர் எனும் சாதனையை ஸ்டார்க் செய்தார். 77 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை ஸ்டார்க் எட்டினார். இதற்குமுன் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக்(78), டிரன்ட் போல்ட்(81), பிரட்லீ(82), அஜெந்தா மென்டிஸ்(84) ஆகியோர் குறைந்தபோட்டிகளில் 150 ரன்களை எட்டினார்கள்.
மற்றொரு முக்கியமானவர்கள் கோல்டர் நைல், ஸ்மித். 79 ரன்களுக்கு 5 வி்க்கெட் எனும் இக்கட்டான நிலையில் அணி சிக்கியபோது அதை மீட்டெடுத்தவர் முன்னாள் கேப்டன் ஸ்மித். ஸ்மித் களத்தில் இருக்கும் வரை எப்போதும் எதிரணிக்கு ஆபத்துதான் என்பதை மீண்டும் நிரூபணமானது.
கோல்டர் நைல் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டார். புதிய உலக சாதனையையும் நைல் செய்துவிட்டார். 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 92 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையயும் நைல் பெற்றார். இதற்கு முன் நைல் சிறந்த ரன் 34 மட்டுமே. நைலின் அதிரடி ஆட்டம்தான் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணம். ஆட்டநாயகன் விருதும் கோல்டர் நைலுக்கு வழங்கப்பட்டது. ஸ்மித், நைல் இருவரும் சேர்ந்து 102 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை வலுவாக கட்டமைத்தனர். இ்ப்படி ஒரு ஸ்கோருக்கு செல்லுமா ஆஸி என்று தொடக்கத்தில் யாரும் நினைக்கவில்லை.
மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொறுத்தவரை கட்டுப்பாடில்லாத ஆக்ரோஷம், ஒழுக்கமில்லாத பந்துவீச்சு, ஸ்மித்துக்கு 26-ல், நைலுக்கு 61ல் கேட்ச்களை விட்டது, பொறுமையின்மை ஆகிய காரணங்களால்தான் வெற்றியை கைநழுவவிட்டார்கள்.
தொடக்கத்தில் தாமஸ், ரஸல், காட்ரல், ஹோல்டர் ஆகியோரின் ஆவேசமான பவுன்ஸர், துல்லியமான பந்துவீச்சில் திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.
இதை வலுவாகப் பற்றிக்கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் சென்றிருக்க வேண்டும். ஆனால், 20 ஓவர்களுக்கு மேல் பந்துவீசிய பிராத் வெய்ட், காட்ரல் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினார்கள். சிறப்பாக பந்துவீசி வந்த ஹோல்டர் ஏன் 3 ஓவர்களை வீசவில்லை, நர்ஸ்க்கு ஏன் அதிகமான ஓவர்களை வழங்கவில்லை போன்ற கேள்விகள் தோல்விக்கு பின் எழுகின்றன.
அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 24 வைடு உள்பட 27 உதிரி ரன்களை வழங்கினார்கள். ஒழுக்கமில்லாத, கட்டுக்கோப்பில்லாத பந்துவீச்சின் விலையை கடைசியில் கொடுக்க நேர்ந்தது. இ்ந்த உதிரி ரன்களை கட்டுப்படுத்தி இருந்தால்,நிச்சயம் வெற்றி மேற்கிந்தியத்தீவுகள் பக்கம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அவசரம், பொறுமையின்மையால் பல வெற்றிகளை இனிவரும் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் இழக்கப்போகிறார்கள். ரஸல், பிராத்வெய்ட், பூரன், லூயிஸ் ஆகியோர் தேவையில்லாத ஷாட்களை ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்கள். பிராட்வெய்ட் 46-வது ஓவரில் அந்த ஷாட்டை ஆடாமல் இருந்திருந்தால், ஆட்டம் கையைவிட்டு சென்றிருக்காது.
289 ரன்கள் என்ற இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் களமிறங்கியது. லூயிஸ், கெயில் களமிறங்கினர். லூயிஸை ஒரு ரன்னில் வெளியேற்றினார் கம்மின்ஸ். ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 5-வது பந்திலும், 6-வது பந்திலும் கெயில் கால்காப்பில் வாங்க, நடுவர் கெஃபானி அவுட் வழங்கினார். இதை டிஆர்எஸ் முறையில் எதிர்த்து தப்பித்தார் கெயில். நடுவர் அவுட்வழங்கிய இருதீர்ப்புகளுமே தவறானவை
கம்மின்ஸ்வீசிய 4-வது ஓவரில் கெயில் 3 பவுண்டரி அடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பையில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ஸ்டார்க் வீசிய 5-வது ஓவரில் 4-வது பந்து நோபால் என்று தெரிந்து அதை நடுவர் கவனிக்கவில்லை. ஆனால் 5-வது பந்தை கெயில் கால்காப்பில் வாங்கியதும் அவுட் வழங்கினார் நடுவர் கெஃபானே. உண்மையில் 4-வது பந்து நோபால் என்றால் அடுத்தபந்து ப்ரீ ஹிட் கொடுத்திருக்க வேண்டும், அப்படியென்றால் கெயிலுக்கு வழங்கிய அவுட் நியாயமற்றது. கெயில் 21 ரன்னில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு ஹோப், பூரன் ஓரளவுக்கு நிதானமாக பேட் செய்து ஸ்கோரை உயர்த்தினர். ஜம்பா வீசிய 20-வது ஓவரில் பிஞ்சிடம் கேட்ச் கொடுத்து பூரன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 68ரன்கள் சேர்த்தனர்.
அடுத்தவந்த ஹெட்மயர், ஹோப்புக்கு நம்பிக்கை கொடுத்தார். ஹோப் அரைசதம் கடித்தார். அவசரப்பட்ட ஹெட்மயர் 21 ரன்னில் ரன் அவுட் ஆகினார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹோல்டர் களம்புகுந்தார்.
ஹோப், ஹோல்டர் அபாரம்
ஹோப், ஹோல்டர் நிதானமாக ஆடி ஸ்கோரை 200 ரன்களுக்கு அருகே கொண்டு சென்றனர். கம்மின்ஸ் வீசிய 35-வது ஓவரில் ஹோப் 68 ரன்னில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரஸல் சில அதிரடியான ஷாட்களை அடித்து 15 ரன்னில் தேவையில்லாமல் ஆட்டமிழந்தார்.
7-வது விக்கெட்டுக்கு ஹோல்டர், பிராத்வெய்ட் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஹோல்டர் ஆடும் விதமும் மன உறுதியும், ஆடும் ஷாட்களும் தன்மையும் கேப்டனாக விடாப்பிடி தன்மையும் கபில்தேவை நினைவூட்டியது. எந்த நிலையிலிருந்தும் வெற்றி பெறலாம் என்பதுதான் கபில். அதேதான் ஹோல்டரும்.
கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டனுக்குரிய நிதானத்துடன் ஆடிய ஹோல்டர் அரைசதம் அடித்தார். கடைசி 5 ஓவரில் 38 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. வெற்றக்கு மேற்கிந்தியத்தீவுகள் பக்கம்தான் இருந்தது.
ஆனால், 46-வது ஓவரை ஸ்டார்க் வீசும்வரை அந்த நம்பி்க்கை குலையவில்லை. ஸ்ட்ராக் வீசிய 2-வது பந்தில் ஸ்லோ பலாக அமைய அதை பிராத்வெய்ட் நேராக தூக்கிஅடித்தார். பிஞ்ச் லாவகமாக கேட்ச் பிடிக்க பிராத்வெய்ட் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப்பந்தில் பவுன்ஸரை அடிக்க முயற்சித்த ஹோல்டரும் 51 ரன்னில் வெளியேறினார்.
இந்த இரு விக்கெட்டுகள் சென்றபின் ஆட்டம் திசைதிரும்பியது.அடுத்துவந்த காட்ரலை ஒரு ரன்னில் வெளியேறினார். நர்ஸ், தாமஸ் களத்தில் இருந்தனர். நைல்வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது நர்ஸ் 4 பவுண்டரிகள் அடித்து பங்களிப்பு செய்தார். நர்ஸ் 19ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தாமஸ்,ரஸல், காட்ரல் ஆகியோரின் ஆக்ரோஷமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வார்னர்(3), பிஞ்ச்(6), கவாஜா(13), மேக்ஸ்வெல் டக்அவுட், ஸ்டானி்ஸ்(19) என 79ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா
6-வது விக்கெட்டுக்கு ஸ்மித், கேரே இணைந்து ஓரளவுக்கு நிதானமாக ஆடினர். 45 ரன்களில் காரே ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு வந்த கோல்டர் நீல், ஸ்மித்துடன் சேர்ந்தார். இருவரும் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர். அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல்டர் நீல் 41 பந்துகளல் அரைசதம் அடித்தார்,ஸ்மித்தும் அரைசதம் அடித்தார்.
கோல்டர்நீல் போன்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் அரைசதம்அடித்தார்கள் என்றால் மேஇதீவுகளின் பொறுப்பற்ற பந்தவீச்சுதான் காரணம். ஸ்மித் 73 ரன்னிலும், நைல் 92 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் தாமஸ், ரஸல், காட்ரல் தலா 2 விக்கெட்டுகளயும், பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT