Last Updated : 09 Jun, 2019 04:57 PM

 

Published : 09 Jun 2019 04:57 PM
Last Updated : 09 Jun 2019 04:57 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு வாழ்வா சாவா போராட்டம்: காயம்பட்ட கரீபியன்ஸ்களுடன் நாளை மோதல்

சவுத்தாம்டனில் நாளை நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெல்ல வேண்டிய வாழ்வா சாவா கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

ஏற்கனவே 3 தோல்விகளைச் சந்தித்துவிட்ட நிலையில் நாளை போட்டியில் தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு வாயில் கதவு தென் ஆப்பிரிக்காவுக்கு ஏறக்குறைய அடைக்கப்பட்டுவிடும். அடுத்தவரும் 5 போட்டிகளில் வென்றாலும் மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் அது பலன் அளிக்காது.

ஆதலால், போட்டியின் களத்தில் நிலைத்திருக்க நாளை டூப்பிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு வெற்றி அவசியமாகும். ஆனால், அந்த வெற்றி நிச்சயம் எளிதாகக் கிடைத்துவிடப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

தென் ஆப்பிரிக்க அணி இதுவரை தான் மோதிய இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து நம்பிக்கை இழந்து இருக்கிறது. வீரர்கள் அனைவரும் கோபத்துடனும், ஆத்திரத்துடன் இருப்பதாக டூப்பிளசிஸ் கூறியுள்ளார்.

கடந்த 1992-ம் ஆண்டுக்குப்பின், தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்ற எந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இதுபோன்று தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தது இல்லை என்பதால், மிகுந்த அதிருப்தியில் வீரர்கள் இருந்து வருகிறார்கள்.

மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக அசுரத்தனமான வெற்றியைப் பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15 ரன்களில் வெற்றி வாய்ப்பை நழுவவி்ட்டது. வீரர்கள் ஒவ்வொருவரும் கடந்த 1980களில் இருந்த மே.இ.தீவுகள் அணி வீரர்களின் உத்வேகத்துக்கு இணையாக இருக்கிறார்கள். இவர்களை எதிரணியினர் கட்டுப்படுத்துவது என்பது மிகக்கடினமாக இருக்கும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நாளைய போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு வெற்றி முக்கியம் என்பதால், அவ்வளவு எளிதாக வெற்றியை தாரை வார்த்துவிடமாட்டார்கள்.

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டெயின் விலகல், லுங்கி இங்கிடி நாளையும் விளையாடமாட்டார் எனும் செய்தி அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா, டூப்பிளசிஸ், மார்க்ரம், டீகாக், மில்லர், மோரிஸ், வேண்டர் டூசன் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு கடந்த 3 போட்டிகளிலும் விளையாடவில்லை. இவர்கள் அனைவரும் நாளை ஒட்டுமொத்த பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது

பந்துவீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தென் ஆப்பிரிக்க அணி வழக்கமான தன்மையை வெளிப்படுத்தவில்லை. ரபாடா மட்டுமே எதிரணிகளுக்கு சிம்மசொப்னாக இருந்து வருகிறார். ஆனால், அவரின் வழக்கமான யார்கர் கடந்த 3 போட்டிகளிலும் இல்லை. மோரிஸ் பெலுக்வாயோ, டூசன், மோரிஸ் ஆகியோரும் எதிரணிகளுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசவில்லை.

தரம்வாய்ந்த லெக்ஸ்பின்னர் என்று அறியப்பட்ட இம்ரான் தாஹிர் எங்கிருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு அமைதியாகிவிட்டார். ஒட்டுமொத்தத்தில் கூட்டு உழைப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு போட்டியில் அபாரமான வெற்றியும் மற்றொருபோட்டியில் வெற்றியை பரிதாபமாக இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் ஆக்ரோஷமான பந்துவீச்சில் தொடக்கத்தில் நெருக்கடி கொடுத்தாலும் கட்டுக்கோப்பில்லாத ,ஒழுங்கமற்ற பந்துவீச்சில் உதரிரன்கள் அதிகமாகச் சென்றது. மேலும் தவறான ஷாட்களை தேர்வு செய்து ஆடியது போன்றவற்றாலும் விக்கெட்டுகளை கவனமின்றி இழந்து தோல்விக்கு அணியை கொண்டு சென்றார்கள். இந்த தவறுகளை இந்த போட்டியில் திருத்திக்கொள்வார்கள் என்று கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார். குறிப்பாக நடுவரின் தவறான முடிவுகள் மே.இ.தீவுகள் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டது.

ஆதலால் வெற்றியை கைநழுவவிட்டுவிட்டோம் என்ற ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் நாளை மேற்கிந்தியத்தீவுகள் விளையாடுவார்கள். தாமஸ், காட்ரியல், ரஸல் ஆகியோர் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார்கள். அனைவரும் 6 அடிக்குமேல் உயரமாக இருப்பதால், பவுன்ஸர்களை எளிதாக வீசி எதிரணியினரை திக்குமுக்காட வைக்கிறார்கள். இவர்களின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்க வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

பேட்டிங்கில் லூயிஸ், கெயில் இரு போட்டிகளிலும் சோபிக்கவில்லை, ரஸலும் ஏமாற்றி வருகிறார். ஹோப், ஹோல்டர், பூரன் ஆகியோர் நடுவரிசையில் பலம் சேர்க்கிறார்கள். அவசரப்பட்டு ஷாட்களை  ஆடுவதைக் தவிர்த்து நிதானமாக ஆடினால் மேற்கிந்தியத்தீவுகள் பக்கமே வெற்றி உண்டு.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x