Published : 03 Sep 2014 12:00 AM
Last Updated : 03 Sep 2014 12:00 AM
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியளித்தல், அவர்களின் திறமையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக எம்ஆர்எப் பேஸ் பவுண்டேசனுடன் 5 ஆண்டுகால ஒப்பந்தம் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
இந்த ஒப்பந்தப்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சென்னையில் உள்ள எம்ஆர்எப் பவுண்டேசனில் அதன் இயக்குநரும் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருமான கிளன் மெக்ராத்திடம் பயிற்சி பெறுவார்கள்.இதுதொடர்பாக பிசிசிஐ இடைக்கால தலைவர் சிவலால் யாதவ் கூறுகையில், “இது தலைசிறந்த தருணம். எம்.ஆர்.எப்., பிசிசிஐ இடையிலான இந்த ஒப்பந்தம் நீண்டகாலத்திற்கு இந்திய கிரிக்கெட்டுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றார்.
பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “எம்ஆர்எப்புடன் இணைந்து செயல்படுவதில் பிசிசிஐ மகிழ்ச்சியடைகிறது. இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் ஏராளமான வேகப்பந்து வீச்சாளர்களை எம்ஆர்எப் உருவாக்கும். அந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.
எம்ஆர்எப் பவுண்டேசன் இயக்குநர் மெக்ராத் கூறுகையில், “ஒரு பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த இரு ஆண்டுகளாக இங்கு பணியாற்றியது அற்புதமானது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்” என்றார்.
இந்த ஒப்பந்தத்தின்படி “எலைட்”, “பிராபபிள்ஸ்” என இரு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் “எலைட்” பிரிவுக்கான பயிற்சி தொடங்கிவிட்டது. இந்தப் பிரிவில் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் என தேர்வுக் குழுவால் அடையாளம் காணப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ள வீரர்கள் “பிராபபிள்ஸ்” பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதில் 20 வீரர்கள் இடம்பெறுகின்றனர். இவர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு முறையே மே-ஜூன், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பயிற்சியளிக்கப்படும்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், ராகுல் சுக்லா, ஈஸ்வர் பாண்டே, அசோக் திண்டா, வீர் பிரதாப் சிங், தீபக் சாஹர், நீது சிங், அங்கித் ராஜ்புட், அனுரீத் சிங், ஷர்துல் தாக்குர், சி.வி.மிலின்ட் ஆகியோர் எம்ஆர்எப் பவுண்டேசன் பயிற்சி முகாமுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT