Published : 27 Jun 2019 05:04 PM
Last Updated : 27 Jun 2019 05:04 PM
ஆசிய கிரிக்கெட் அணிகளின் பெரிய பேட்ஸ்மென்கள் சுனில் கவாஸ்கர் முதல் மாஜித் கான், இன்சமாம் உல் ஹக், ஜாகீர் அப்பாஸ், ஜாவேத் மியாண்டட், ஜெயசூரியா, மகேலா ஜெயவர்தனே, சங்கக்காரா, அரவிந்த டி சில்வா, அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோரை இங்கிலாந்து கேப்டன்கள், வர்ணனையாளர்கள், முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் பண்டிதர்கள் பாய்காட் முதல் ஆண்டி லாய்ட் வரை அனைவரும் ‘ஃபிளாட் ட்ராக் புல்லீஸ்’ என்று பல்வேறு காலக்கட்டங்களில் அழைத்துள்ளதை நாம் அறிவோம்.
அதாவது துணைக்கண்டங்களின் தூசி தும்பட்டை மட்டை ஆடுகளங்களின் சூரப்புலிகள், நல்ல வேகப்பந்து ஆட்டக்களங்கள், ஸ்விங் ஆட்டக்களங்களில் இந்தச் சூரப்புலிகள் சொதப்புவார்கள், பெரிய ஆள்கள் இல்லை என்ற ரீதியில் ‘பிளாட் ட்ராக் புல்லீஸ்’ என்று வர்ணிப்பார்கள். இது ஒரு கிரிக்கெட் மேட்டிமை வார்த்தை இன்னும் சொல்லப்போனால் ‘வெள்ளைத்திமிர்’ வார்த்தை, சொற்பிரயோகம், நிலைத்த படிம உருவாக்கச் சொற்றொடர் ஆகும்.
ஆனால் அந்தச் சொற்றொடரில் ஓரளவுக்கு உண்மை இல்லாமல் இல்லை. அதை ஒரு விமர்சனச் சொற்றொடராகவும் பார்க்கலாம். ஆனால் எதற்காக ஆசிய அணிகளை, அதன் நட்சத்திர வீரர்களை ‘ஃபிளாட் ட்ராக் புல்லீஸ்’ என்று அழைத்தனரோ அதே காரணங்களுக்காக இப்போது இங்கிலாந்து அணியையும் ஃபிளாட் ட்ராக் புல்லீஸ் என்று அழைக்க வேண்டிய காலம் பிறந்துள்ளது.
இந்த உலகக்கோப்பை உட்பட முன்னதாகவும் கணக்கெடுத்துக் கொண்டால் 9 ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கும் அதிகமாக 8 முறை எடுத்துள்ளது. 400 ரன்களைக் கடந்து சென்றுள்ளது. உலகக்கோப்பையில் ஆப்கானுக்கு எதிராக 397 ரன்களைக் குவித்தது.
ஆனால் முதலில் பாகிஸ்தானுடன் பெரிய ஸ்கோரில் தோற்ற இங்கிலாந்து அதன் பிறகு இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் பெரிய அளவில் மண்ணைக்கவ்வி தற்போது அரையிறுதி வாய்ப்பே கேள்விக்குள்ளாகி நிற்கிறது.
காரணம் இங்கிலாந்து 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு பெரிய அளவில் எழுச்சி பெற்றதற்குக் காரணம் இங்கிலாந்து பெரும்பாலும் மட்டைபிட்சில், ரன்குவிப்புப் பிட்ச்களில், பவுலர்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் பிட்ச்களில் வெளுத்துக் கட்டி அணியை கட்டி எழுப்பினர். அதாவது சுருக்கமாக கூற வேண்டுமெனில் அவர்கள் ஆசிய ஸ்டார்களைக் கிண்டல் செய்த ‘ஃபிளாட் ட்ராக் புல்லீஸ்’ ஆக இங்கிலாந்தும் மாறிவிட்டது. பல பேட்டிங் சாதனைகளைப் படைத்தனர், ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஏன் ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மென்கள் உருவாகி இங்கிலாந்து ஒரு அரக்க பேட்டிங் யூனிட் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தினர்.
இதனையடுத்தே இந்த உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் இங்கிலாந்துதான் வெல்லும் என்று அனைவராலும் கூறப்பட அதுவே பெரிதும் உண்மையாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென இங்கிலாந்தின் கோடைக்காலம் மழைபிசுபிசுக்கும் கோடையாகிப் போனதால் பிட்ச்கள் தங்கள் வேகத்தை இழந்தன, பந்துகள் நின்று வந்தன, ஈரப்பதம் கூடுதலாக இருந்தது, இதில் விளையாட கொஞ்சம் உத்தி ரீதியாக தங்களை அவர்கள் ஈடுபடுத்தி ஆட வேண்டியதாயிற்று.
இலங்கைக்கு எதிராக மரபான வேகப்பந்து வீச்சு, ஸ்விங் வீச்சை மலிங்கா வீச, ஸ்பின்னர் டிசில்வாவும் பந்துகளைத் திருப்ப இங்கிலாந்து 232 ரன்களை எட்ட முடியாமல் மடிந்ததைப் பார்த்தோம், இதனை ‘மூளையற்ற பேட்டிங்’ என்று பாப் வில்லிஸ், ராபின் ஸ்மித் போன்றோர் வர்ணித்தாலும் பிரச்சினை இங்கிலாந்து ஆடியவிதமல்ல, இங்கிலாந்து சமீபகாலங்களாக ஆடிவரும் ஆட்டக்களங்களுக்கான பேட்டிங் இந்தக் களங்களில் இப்போது செல்லுபடியாகவில்லை என்பதை உணராத விமர்சனமாகவே அது அமைந்தது.
அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிச்சயமாக இங்கிலாந்துக்கு ஆணியறையப்பட்டது. மிட்செல் ஸ்டார்க், பெஹெண்டார்ப் வீசிய சில பந்துகள் இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங்குக்கு ஆப்பு வைத்ததாகும், நேதன் லயன் ஒரு புறம் டைட் செய்தார். இத்தகைய சூழ்நிலைகளி ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து ஆட வேண்டும், ஆனால் இங்கிலாந்து கடந்த 2, இரண்டரை ஆண்டுகளாக அப்படிப் பழகவில்லையே. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த ஒன்று, இரண்டு ரன்களை கணக்கிட்டாலே அந்த அணி எத்தகைய சிக்கலில் சிக்கியுள்ளது என்பது புரியவரும். ஆஸி.க்கு எதிராக முதல் 10 ஒவர்களில் 3 சிங்கிள்களை மட்டுமே எடுத்ததாக கிரிக் இன்போ வர்ணனையில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தை பீல்டிங் கவிழ்த்தது, ஆனால் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங்கும் சேர்ந்து கொண்டது. 2015--க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் 2 போட்டிகளில் தொடர்ச்சியாக முதல் முறையாகத் தோல்வி கண்டது இங்கிலாந்து.
2015-க்குப் பிறகு முழுதும் மட்டை ஆட்டக்களங்களை அமைத்து, தங்கள் வீரர்களையும் ஃபிளாட் ட்ராக் புல்லீஸ் ஆக்கியதால் மிகப்பெரிய ரன் சேஸ், மிகப்பெரிய ஸ்கோர், 500 அடிப்போம், 1000 அடிப்போம் என்று பீற்றிக் கொண்டதெல்லாம் இங்கிலாந்தின் வானிலையால் முறியடிக்கப்பட்டு, ஒரு மரபான பேட்டிங் முறை வேண்டிய நேரத்தில் அதை ஆட முடியாத வகையில் இங்கிலாந்த் பேட்டிங் கடந்த 4 ஆண்டுகளில் பிளாட் ட்ராக் புல்லீஸ் ஆனதே தற்போதைய ஆபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது, உலகக்கோப்பை கனவு நிறைவேறுவது கடினமாகியுள்ளது. மேலும் இத்தனையாண்டுகளாக தாறுமாறாக மட்டை ஆட்டக்களங்களில் பேட் செய்து தேவைப்படும் சமயத்தில் ஒரு ஒழுங்கு இல்லாமல் கட்டுக்கோப்பு இல்லாமல் போய்விட்டதை இங்கிலாந்து தற்போது உணர்ந்திருக்கும், அதோடு ஆசிய அணிகளும் அதன் நட்சத்திர வீரர்களும் வெறும் பிளாட் ட்ராக் புல்லீஸ் அல்ல என்பதையும் உணர்ந்திருக்கும்.
இங்கிலாந்து பிரமாதமாக வென்றிருந்தால் இந்நேரம் அரையிறுதி இடங்கள் சீல் செய்யப்பட்டு ஆடும் போட்டிகள் அனைத்தும் சுவாரஸ்யமற்ற செத்த ஆட்டங்களாக மாறியிருக்கும், ஆனால் இப்போது இங்கிலாந்து வெளியேறும் அச்சுறுத்தலால் உலகக்கோப்பை உண்மையில் சூடுபிடித்துள்ளதோடு சுவாரசியமாகவும் மாறியுள்ளது.
எனவே அவர்கள் தற்போது மழையால், வானிலையால் மாறியுள்ள பிட்ச்களுக்கு ஏற்ப தங்கள் பேட்டிங்கை மாற்றி கொண்டால் இந்தியா, நியூஸிலாந்து போட்டிகளில் வென்று அரையிறுதி செல்லலாம் இல்லையெனில் இன்னுமொரு 4 ஆண்டுகள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. எதுஎப்படியிருந்தாலும் ஃபிளாட் ட்ராக் புல்லீஸ் என்று மற்ற அணிகளை கேலி பேசியதை இப்போது தங்கள் அணிக்கே இங்கிலாந்து பண்டிதர்கள் கூற நேரிட்டுள்ளதைப் பார்க்கும் போது அணிகளை விட, தனிநபர்களை விட, நட்சத்திரங்களை விட ஆட்டம் பெரிது என்பதை புரிய வைக்கிறது, புரியவைக்கும்.
30ம் தேதி இந்திய அணிக்கு எதிராக கடும் நெருக்கடியில் இங்கிலாந்து களமிறங்க நேரிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT