Published : 02 Jun 2019 01:30 PM
Last Updated : 02 Jun 2019 01:30 PM
சாவோபோலோ போலீஸ் அறிக்கையில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மார் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை நெய்மார் கடுமையாக மறுத்துள்ளார்.
தன்னிடமிருந்து பணம் பறிக்கும் உத்தியில் வழக்கறிஞர் ஒருவர் அந்தப் பெண்ணைத் தூண்டி விட்டு தன் மீது பொய் குற்றம் சுமத்துவதாக நெய்மார் தரப்பு வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஏகப்பட்ட ஒழுங்க்கீனம் காரணமாக நெய்மார் பிரேசில் கால்பந்து அணியின் மதிப்புக்குரிய கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் குடித்து விட்டு தன்னை கற்பழிக்க முயன்றதாக பெண் ஒருவர் புகார் தொடுத்தார். நெய்மார் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கிளப்புக்காக தற்போது ஆடிவருகிறார்.
நெய்மார் மீதான போலீஸ் குற்றச்சாட்டில் பதிவாகியிருப்பதாவது:
பெயர் கூறாத அந்தப் பெண்ணுக்கு நெய்மாருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது, பாரீஸில் சந்திக்கலாம் என்று நெய்மர் கூறினார். இதனையடுத்து நெய்மாரின் உதவியாளர் அவருக்கு மே 15ம் தேதி விமான டிக்கெட்டுகளை அனுப்பியுள்ளார். மேலும் பாரீஸில் உள்ள விடுதி ஒன்றிலும் தான் தங்கியதாக அவர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், இரவில் நெய்மார் வந்தார் இருவரும் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது உணர்ச்சிவயப்பட்ட நெய்மார் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் பெண் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரான்ஸ் போலீசிடம் புகார் செய்யாமல் பிரேசிலுக்குத் தான் திரும்பியதாகவும் இந்த நிகழ்வு தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் வெளிநாட்டில் புகார் அளிக்க பயமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
நெய்மர் தந்தை இந்த புகாரை மறுத்து வேண்டுமானால் என் மகன் சமூகவலைத்தள உரையாடலை பகிரவும் தயார் என்று கூறியுள்ளார்.
தற்போது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடருக்காக நெய்மார் பிரேசில் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், இவரை கேப்டன்சியிலிருந்து நீக்கியதையடுத்து டேனி அல்வேஸ் பிரேசில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் தோல்வியடைந்த வெறியில் ரசிகர் ஒருவரை தாக்கியதற்காக 3 ஆட்டங்கள் நெய்மார் கிளப்பினால் தடை செய்யப்பட்டார். மேலும் அணி வீரர்களுடன் ஓய்வறையிலும் சண்டையிட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரேசில் கால்பந்து அமைப்பு கருத்து கூற மறுத்து விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT