Last Updated : 04 Jun, 2019 05:01 PM

 

Published : 04 Jun 2019 05:01 PM
Last Updated : 04 Jun 2019 05:01 PM

3 கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?- வலிமையான இந்திய அணியை எதிர்கொள்ளுமா இங்கிடி இல்லாத தென் ஆப்பிரிக்கா: ஸ்டெயின் விலகல்

சவுத்தாம்டன் நகரில் நாளை நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் வலிமையான இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது தென் ஆப்பிரிக்கா.

வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய இரு அணிகளிடமும் தோல்வி அடைந்து நம்பிக்கை இழந்த அணி தென் ஆப்பிரிக்கா என்று சொல்வதைக்காட்டிலும் தோல்வியின் ரணத்தை ஆற்றிக்கொள்ள வெற்றி மருந்தை தேடும் புலியாகத்தான் நாளை போட்டியில் வீரர்கள் விளையாடுவார்கள். வழக்கத்தைக் காட்டிலும் தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தில் நாளை ஆக்ரோஷம் இருக்கக்கூடும்.

ஆனால், காயம் காரணமாக ஸ்டெயின் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளதும், இங்கிடி இல்லாததும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாகும்.  ஸ்டெயினுக்கு பதிலாக ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

130கோடி மக்களின் கனவு

130 கோடி மக்களின் கனவை சுமந்துகொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நாளை தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது.

கடைசியாக தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 4 ஆட்டங்களில் இந்திய அணி வென்றுள்ளது.

ஆனால் உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்தபோதிலும் அதில் 3 முறை தென் ஆப்பிரிக்காவும் ஒருமுறை இந்திய அணியும் மட்டும் வென்றுள்ளது.

தோனி துணை

ஆனால், 2015-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணி விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்காவை பலமுறை வென்று பலமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கோலிக்கு பக்கபலமாக தோனியின் அறிவுரையும், ஆலோசனையும் இருப்து கோலியின் செயல்பாட்டை இன்னும் கூர்தீட்டும்.

4-வது இடத்துக்கு யாரு?

இந்திய அணியைப் பொறுத்தவரை உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராகும் வகையில் கடந்த 2ஆண்டுகளாக "தயாராகிறோம், தயாரிகிறோம்" என்று கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூறிவந்தார்கள். ஆனால், என்ன மாயமோ, சூனியமோ தெரியவில்லை, இதுவரை 4-வது இடத்துக்கு மட்டும் இதுவரை நல்ல பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை.

கே.எல் ராகுல், ராயுடு, ஜாதவ், என பலரை முயற்சித்து பாரத்தும் எதுவும் அமையவில்லை. முடிவில் கே.எல்.ராகுலை களமிறக்க திட்டமிட்டுள்ளார்கள். இனிமேலும் சப்பைக் கட்டு கட்டாமல் 4-வது இடத்துக்கு துணித்து ஒரு வீரரைத் தேர்வு செய்து களமிறக்க வேண்டும்.

தவண், சர்மா கூட்டணி

பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்கார் ஷிகர் தவண், ரோகித் சர்மா இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டங்களில் இருவரும் நன்றாக ஆடவில்லை என்பதை வைத்து முடிவுக்கு வரமுடியாது.

 இங்கிலாந்து மண்ணில் ஷிகர் தவண் மட்டுமே கடந்த காலங்களில் நல்ல ஸ்கோர் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சினுக்கு அடுத்த இடத்தில், சதம் அடித்த முதல் வீரரும் தவண்தான். ஆதலால், நாளை ஆட்டத்தில் தவண்தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்புவார் என நம்பலாம்.

ஆனால், தவம் தனது வீக்னஸ் பாயின்டான லெக்சைடில் வரும்  பவுன்ஸரைரை எவ்வாறு சமாளிப்பார்,  ரபாடா பவுன்ஸரை சமாளிக்க எந்த அளவுக்கு தேறி இருக்கிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும்

ரோஹித் சர்மா பயிற்சிப் போட்டியில் ஸ்கோர் செய்யாவிட்டாலும், ஐபிஎல் போட்டியில்  இருந்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். லெக்ஸ்பின் சமாளித்து ஆடுவதில் சிரமப்படும் ரோஹித் சர்மாவுக்கு இம்ரான் தாஹிர் பந்துவீச்சு நிச்சயம் குடைச்சலைக் கொடுக்கும்.

கோலி, தோனி

விராட் கோலியைப் பொருத்தவரை இன்றுள்ள தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர் கோலிதான். எந்த சூழலுக்கும் தன்னை மாற்றிக்கொண்டு விளையாடக் கூடியவர். இவரின்  பங்களிப்பு முக்கியமானதாகும்.

4-வது உலகக் கோப்பைப் போட்டியில் களமிறங்கும் அனுபவ வீரர், ஆக்டிங் கேப்டன் தோனி பயிற்சிப் போட்டியில் சதம் அடித்து மிரட்டியுள்ளார். கடந்த கால விமர்சனங்கள் அனைத்தையும் தோனி தனது சதத்தின் மூலம் சிதறடித்துள்ளார்.

தோனி களத்தில் இருக்கும்வரை எதிரணிக்கு நிச்சயம் கிலியாகத்தான் இருக்கும். இவரின் அனுபவ பேட்டிங், எப்போது அதிரடி ஆட்டத்துக்கு மாறுவார் என யாருக்கும் தெரியாது. தோனி இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.

தோனிக்கு அடுத்தார்போல் கூடுதல் பேட்டிங் ஆல்ரவுண்டரை களமிறக்கலாமா அல்லது பந்துவீச்சு ஆல்ரவுண்டரை களமிறக்கமாலா என்பது குறித்த ஆலோசனை இன்னும் ஓடுகிறது. விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

ஆல்ரவுண்டர் யார்

ஆனால், விஜய் சங்கரைக் காட்டிலும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒரளவுக்கு விளையாடக் கூடியவர் ரவிந்திர ஜடேஜா என்பதால் அவருக்கே முன்னுரிமை இருக்கும்.

தென் ஆப்பிரிக்க  அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கும் நிலையில் குல்தீப் யாதவ் களமிறங்குவாரா அல்லது பேட்டிங் ஓரளவுக்கு தெரிந்த சாஹலுக்கு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.

மும்மூர்த்திகள்

threejpg100 

பந்துவீச்சில் மும்மூர்த்திகளான பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரின் கூட்டணி கவனம் பெறுகிறது. அதிலும் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்று கருதப்படும் பும்ராவின் பந்துவீச்சு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு நாளை இம்ரான் தாஹிர், ரபாடா பந்துவீச்சு நிச்சயம் சவாலாக இருக்கும் இதற்கான தீர்வோடு களமிறங்க வேண்டும்.

2 தோல்விகள்

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை கடந்த இருபோட்டிகளிலும் பெரும்பாலான வீரர்கள் நிலைத்தன்மை இல்லாமல் பேட் செய்து விக்கெட்டை இழந்துள்ளார்கள், நம்பிக்கை நட்சத்திரம் டீகாக், டூப்பளஸிஸ், மில்லர், டுமினி என பேட்டிங்கில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். 2 தோல்விகளில் இருந்து மீள்வதற்கு இந்த போட்டியில் தென் ஆப்பிரக்காவுக்கு வெற்றி அவசியம். அதற்காக ஆக்ரோஷமாக போராடுவார்கள் என்பில் சந்தேகமில்லை

காயம்: அணிக்கு வலி

இங்கிடி தசைபிடிப்பு காயத்தால் நாளை விளையாட முடியாததும், ஸ்டெயின் விலகியுள்ளதும் தெ ஆப்ரிரிக்காவுக்கு கடும் பின்னடைவு. ஹசிம் ஆம்லா தலையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை இவரின் முடிவு நாளைதான் தெரியும்.

மேலும் மார்க்ரம், டுமினி, மில்லர், ஆகியோர் நடுவரிசையை பலப்படுத்த இருந்தாலும் நிலைத்தன்மையுடன் பேட் செய்யக்கூடியவர் அல்ல.

ஐபிஎல் சூட்சமம்

தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள பல வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பல்வேறு அணிகளில் இணைந்து விளையாடியவர்கள் என்பதால் இந்திய வீரர்களின் பலம், பலவீனம் குறித்து நன்கு தெரியும். அதேபோல அவர்களின் பலம் பலவீனம் குறித்து இந்திய வீரர்களுக்கும் நன்கு தெரியும்.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சுழற்பந்தை வீச்சை சாமாளித்து ஆடுவதிலும், நெருக்கடி நேரத்தின் போதும் வழக்கம்போல் விக்கெட்டை பறிகொடுப்பார்கள். ஆதலால், தென் ஆப்பிரிக்க அணியை நெருக்கடியுடனே நகர்த்தி வருவது இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.

3 கேள்விகள்

ஆனால், நம்முன் இருக்கும் கேள்விக்கு நாளை பதில் கிடைக்க வேண்டும்.

  1. இந்திய அணி 4-வது இடத்தில் யாரை இறக்க திட்டமிட்டுள்ளது,
  2. ஹசிம் அம்லா பேட் செய்யவந்தால் அவரை வீழ்த்துவதற்கான யுத்தி
  3. ஆல்ரவுண்டர் பெயரில் யாரை களமிறக்கப் போகிறது இந்தியா

 இவை குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்திய அணியை வீழ்த்துவதற்கு புதிய திட்டம் வைத்திருக்கிறோம் என்று டூப்பிளசிஸ் கூறிய நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக என்னமாதிரியா தந்திரங்களை இந்திய அணி கையாளப்போகிறது என்று இதுவரை தெரியவி்ல்லை.

ஆடுகளம் எப்படி

சவுத்தாம்டனில் இருக்கும ஏஜஸ் பவுல் ஆடுகளத்தில் புற்கள் வெட்டப்பட்டு தட்டையாக, இறுக்கமாக இருப்பதால், நாளை பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகத்தான் இருக்கும். டாஸ் வென்று முதலில் பேட் செய்வது உத்தமம். நாளை மழைவருவதற்கும், வானம் மேகமூட்டமாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளதால், சேஸிங் செய்யும்போது கடினமாக இருக்கும். ஆதலால், கோலி டாஸ் வென்றால் யோசிக்காமல் பேட்டிங் செய்வது சிறந்தது.  இந்திய நேரப்படி போட்டி மாலை 3 மணிக்கு தொடங்கும்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்) ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஹர்திக்  பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.

தென் ஆப்பிரிக்கா: டுபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, குயிண்டன் டிகாக், டேவிட் மில்லர், மார்க் ராம், ஜேபி டுமினி, பெலுக்வயோ, கிறிஸ் மோரிஸ், பிரிட்டோரியஸ், வான் டெர் டசன், இம்ரன் தகிர், தப்ரைஸ் ஷம்சி, டேல் ஸ்டெயின், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x