Published : 13 Jun 2019 08:21 AM
Last Updated : 13 Jun 2019 08:21 AM

கிரிக்கெட் வர்ணனையாளர்களின் விமர்சனக் குரல்வளையை நெரிக்கும் ஐசிசி: மைக்கேல் ஹோல்டிங் காட்டமான பதிலடி

மே.இ.தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலகக்கோப்பை போட்டியில் நடுவர் தீர்ப்புகள் ஒருதலைபட்சமாகி அது மே.இ.தீவுகளின் தோல்வியில் போய் முடிந்தது, இதனையடுத்து அன்றைய போட்டியில் நடுவர் தீர்ப்புகள் ‘அராஜகம்’ என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் ஹோல்டிங் சாடினார்.

 

அன்றைய போட்டியில் கிறிஸ் கெய்லுக்கு நோ-பாலுக்கு அடுத்த பந்து எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் பந்து நோ-பால் கொடுக்கப்பட்டிருந்தால் கெய்ல் அவுட் ஆன பந்து ப்ரீ ஹிட்டாகியிருக்கும் அதே போல் ஹோல்டருக்கு ஒரேஓவரில் அவுட் கொடுத்துக் கொண்டேயிருந்தது என்று மே.இ.தீவுகளுக்கு எதிரான சதி நடந்தேறியது. அதாவது ‘நாங்கள் அவுட் கேட்டால் நடுவர் கை  தொங்கி விடும், அவர்கள் அவுட் கேட்டால் நடுவர் கை உயரும்” என்று முத்தாய்ப்பாகக் கூறினார் பிராத்வெய்ட்.

 

இதனையடுத்து ஹோல்டிங் கடுமையாகச் சாட ஐசிசி அவருக்கு எச்சரிக்கை விடுத்தது.  ‘நடுவர் பற்றிய விமர்சனங்களை பட்டவர்த்தனமாக்க வேண்டாம்... சென்சார் செய்யவும்’ என்று உத்தரவிட்டதோடு கிரிக்கெட்டில் நல்ல விஷயங்களைப் பற்றி கூறவும் எதிர்மறை அம்சங்களை பெரிது படுத்த வேண்டாம் என்று நீதிபோதனையும் செய்தது.

 

ஐசிசி வர்த்தக உரிமைகள் கூட்டாளி சன்செட் அண்ட் வைன் என்ற நிறுவனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்புத் தலைமை ஹவ் பெவன் என்பவர் ஹோல்டிங்கிடம்  “கிரிக்கெட்டின் உயர்தர விஷயங்களை கவனமேற்கொள்ளவும் ஆட்டத்தின் சிறந்த மதிப்புகளையும் உணர்வையும் கொண்டாடவும்” என்று ‘நீதிபோதனை’ செய்தார்.

 

மேலும், “லைவ் நிகழ்ச்சியில் சில தீர்ப்புகள் வர்ணனையில் விவாதங்களைக் கிளப்பும் ஆனால் ஐசிசி டிவி உரிமைதார ஒளிபரப்பாளராக நாம் தவறுகளைப் பெரிது படுத்தக் கூடாது” என்று ஹோல்டிங்குக்குத் தெரிவித்திருந்தது.

 

இதற்கு மேலும் காட்டமான மைக்கேல் ஹோல்டிங்,  “அந்த நடுவர்கள் இதே ஃபிபா கால்பந்து உலகக்கோப்பையாக இருந்திருந்தால் பெட்டிப் படுக்கையை எடுத்து கொண்டு வீட்டுக்குத்தான் போக வேண்டும். தொடர்ந்து இன்னொரு போட்டியில் உலகக்கோப்பையில் அவர்கள் நடுவர்களாக இருக்க முடியாது. ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராக கிரிக்கெட் என்பது உயர்தரத்தில் நடத்தப்பட வேண்டும்.

 

நடுவர்கள் படுமோசமாகச் செயல்பாட்டாலும் நாம் அவர்களைப் பாதுகாத்து வர்ணிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளா? இப்போதெல்லாம் வர்ணனையாளர்களின் குரவளை நசுக்கப்படுகின்றன, அதுவும் ஒலிபரப்பு நிறுவனங்களினால்... சென்சார்ஷிப் எதில் வர வேண்டுமோ அதில் வந்தால் நல்லது, கிரிக்கெட் வர்ணனையில் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது இத்தகைய சென்சார்ஷிப் கூடாது” என்று சாடியுள்ளார்.

 

வர்ணனையை விட்டுச் செல்லலாம் என்று ஹோல்டிங் முடிவெடுத்ததாகவும் பிறகு இருதரப்பினரிடையேயும் சமரசம் ஏற்பட்டதால் அவர் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்னுதாரணமாக பிசிசிஐ-யின் நடத்தையைக் குறிப்பிட முடியும் சச்சின் டெண்டுல்கர் பிரியாவிடை போட்டிக்கு வர்ணனையாளராக இயன் சாப்பலை அழைத்த போது சச்சின் டெண்டுல்கரை தூக்கிப்பிடிக்கவும், விமர்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது, இந்த நிபந்தனையை ஏற்காத இயன் சாப்பல் வரவில்லை என்று பதிலளித்தார்.

 

ஹர்ஷா போக்ளே ஒருமுறை ஐபிஎல் வர்ணனையிலிருந்து தூக்கப்பட்டதும் அவரது விமர்சனத்தினால்தான். இப்போது நம் ரசிகர்களுக்குப் புரியும் கிரிக்கெட் யாரால் யாருக்காக நடத்தப்பட்டு வருகிறது என்று... சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொரு வர்ணையாளரும் முன்னாள் வீரர்களும் தோனியைப்பற்றியும், கோலியைப் பற்றியும் மட்டுமே விதந்தோதி தூக்கிப் பிடிப்பதன் அர்த்தம் இப்போதாவது இக்காலத்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் புரிந்தால் சரி. அனைத்தும் வர்த்தக நலன்கள், அனைத்தும் உருவாக்கப்பட்டு நம் மீது திணிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x