Last Updated : 27 Jun, 2019 01:35 PM

 

Published : 27 Jun 2019 01:35 PM
Last Updated : 27 Jun 2019 01:35 PM

உலகக்கோப்பை 1992-க்கும் 2019-க்கும் ஒற்றுமை என்ன?- பாகிஸ்தானுக்கு சாதகமாகி வரும் நிகழ்வுகள்

1992-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டிக்கும், 2019-ம் ஆண்டில் நடக்கும் உலகக் கோப்பைக்கும், பாகிஸ்தானும் பல ஒற்றுமையான நிகழ்வுகள் இருக்கின்றன.

கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் தனிச்சிறப்பு, இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுதான். அந்த போட்டித் தொடரில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற நிலையில், தொடர் முழுவதும் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டது.

8 போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் பல தோல்விகளை அடைந்து கடைசி நேரத்தில் வெற்றி பெற்று 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தடுமாறி முன்னேறியது.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

மெல்போர்னில் நடந்த  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சரி கடந்த 1992-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கும், இப்போது நடக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கும் என்ன ஒற்றுமை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை:

1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 9 அணிகள் போட்டியிட்டன, ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டம் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன, இதுவும் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

விளையாடும் விதிமுறைகள்

கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரு வெள்ளைப்பந்துகளை ஒவ்வொரு முனையிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதேபோலத்தான் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இரு வெள்ளைப்பந்துகள், பேட்டிங் செய்யும் ஒவ்வொரு முனையிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முடிவுகளில் வரும் ஒற்றுமைகள்

கடந்த 1992-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணி மோதிய முதல் 7 போட்டிகளின் முடிவுகளும், 2019-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணி மோதிய போட்டிகளின் முடிவுகளும் ஒரே மாதிரியாக வந்துள்ளன.

1992-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் தோல்வி, 2-வது ஆட்டத்தில் வெற்றி, அடுத்த போட்டி மழையால் ரத்து, 4-வது போட்டியில் தோல்வி, 5-வது போட்டியில் தோல்வி, 6-வது போட்டியில் வெற்றி, 7-வது போட்டியில்  வெற்றி. இந்த வகையில் அமைந்தது.

இதேபோன்ற ஒற்றுமைதான் 2019-ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு அமைந்திருக்கிறது.

முதல் போட்டியில் மே.இ.தீவுகளிடம் தோற்றது பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 3-வது போட்டி மழையால் ரத்து, 4-வது போட்டியில் இந்தியாவிடம் தோல்வி, 5-வது போட்டி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி, 6-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றி, 7-வது போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

அன்றைய நியூஸிலாந்து.. இன்றைய நியூஸிலாந்து

கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது நியூஸிலாந்து அணிக்கு மார்டின் குரோவ் கேப்டனாகஇருந்தார். இவர் தலைமையில் அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆனால், கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்தை 7விக்கெட்டில் வீழ்த்தியது பாகிஸ்தான். தோல்வி அடையாமல் வந்த நியூஸிலாந்து முதல் தோல்வியை பாகிஸ்தானிடம் அடைந்தது.

2019-ம் ஆண்டில், நியூஸிலாந்து அணி தோல்வி அடையாமல் வந்த நிலையில், பாகிஸ்தானிடம் நேற்று நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டில் தோல்வி அடைந்தது. ஆனால், 1992-ம் ஆண்டில் பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு இடையே போட்டி நடந்தபோது அது 34-வது ஆட்டமாக இருந்தது, இந்த முறை 33-வது ஆட்டமாக அமைந்துள்ளது.

.paksjpg100

கலக்கிய நட்சத்திர வீரர்கள்.

1992-ம் ஆண்டில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் கலக்கினார்.

2019-ம் ஆண்டில் பாகிஸ்தானில் இன்சமாம் உல் ஹக்கின் உறவினர் இமாம் உல் ஹக் சிறப்பாக விளையாடி வருகிறார்.

1992-ல் பாகிஸ்தான் இடதுகை பேட்ஸ்மேன் அமீர் சோஹைல் 6-வதுஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2019-ம்ஆண்டில் பாகிஸ்தான் இடதுகை பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் 6-வது ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

1992- உலகக் கோப்பைப் போட்டிக்கு முன், ஆஸ்திரேலியாவும், இந்திய அணியும் உலகக் கோப்பையை வென்றிருந்தன.

அதேபோல 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்கு முன், ஆஸ்திரேலியா(2015)வும், இந்திய அணி(2011) உலகக் கோப்பையை வென்றுள்ளன.

அரசியல் நிகழ்வுகள் ஒற்றுமை

கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி நடந்தபோது, பாகிஸ்தான் முன்னாள் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆஷிர் அலி சர்தாரி சிறையில் இருந்தார்.

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி நடந்து வரும் வேளையில் இப்போது ஆஷிப் அலி சர்தாரி சிறையில் இருக்கிறார்.

1992-ம் ஆண்டில் ஆலாதின் எனும் திரைப்படம் அப்போது ரிலீஸ் அனது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி நடந்து வரும்போது, ஆலாதீன் திரைப்படம் மீண்டும் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது.

எனவே 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்றுள்ளபோதும், 1992-ம் ஆண்டு உலக்க கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்றபோதும் பல்வேறு ஒற்றுமைகள் இருந்தது தெளிவாகிறது. அதற்காக 1992-ம் ஆண்டைப் போல் பாகிஸ்தான் கோப்பையை வெல்லுமா என்று இப்போது கூற முடியாது. ஆனால், அதற்கான தகுதிகள் இருக்கின்றன என்பதில் மாற்றமில்லை.

இன்னும் பாகிஸ்தான் அணிக்கு 2 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளையும் எளிதாக வென்றுவிடும் சாத்தியம் இருப்பதால், பாகிஸ்தான் அணி தற்போதுள்ள 7 புள்ளிகளைக் காட்டிலும் கூடுதலாக 4 புள்ளிகள் பெற்று 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் செல்லவாய்ப்பு இருக்கிறது.

அதேசமயம், இங்கிலாந்து அணி அடுத்து இந்தியாவுடனும், நியூஸிலாந்து அணியுடனும் மோத உள்ளது. இரு அணிகளையும் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதால், அந்த அணியின் நிலைமைதான் அந்தரத்தில் இருக்கிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x