Published : 15 Jun 2019 11:57 AM
Last Updated : 15 Jun 2019 11:57 AM
உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது போர் கிடையாது. இரு நாட்டு ரசிகர்களும் பொறுமையுடன், அமைதியாக இருந்து போட்டியைக் காண வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2012-13 ஆம் ஆண்டுக்குப் பின் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அதேசமயம் நடுநிலையான நாடுகளில் மட்டும் நடக்கும ஆசியக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி ஆகியவற்றில் மட்டும் விளையாடி வருகின்றனர்.
உலகக்கோப்பை போட்டியில் இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் 6 முறை மோதியுள்ள போதிலும், அதில் ஒருமுறை கூட இந்தியாவை வென்றதில்லை பாகிஸ்தான். ஆனால், இந்த முறை வெல்வோம் என மனத்திடத்துடன் பாகிஸ்தான் அணியினர் இருக்கிறார்கள்.
ஆனால், வரலாறு தொடர வேண்டும் இந்திய அணி தோற்றுவிடக்கூடாது என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு நாட்டு ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை போட்டி நடக்கிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் வாசிம் அக்ரம் கூறியதாவது:
''உலகக்கோப்பை போட்டிகளிலேயே இறுதிப்போட்டியைக் காட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புமிக்க, போட்டி என்றால், அது இந்தியா, பாகிஸ்தான் போட்டிதான்.
இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் குறித்த உணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கிறது. ஆனால், இந்தப் போட்டியைப் பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட வேண்டுமே தவிர, இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் சூழலை மேலும் பதற்றமடைய வைத்துவிடக்கூடாது.
உலகம் முழுவதும் எனக்குத் தெரிந்தவரை 100 கோடி ரசிகர்கள் இந்தப் போட்டியைப் பார்ப்பார்கள். இந்தப் போட்டியைக் காட்டிலும் வேறு ஏதும் பெரிதாக இருக்க முடியாது.
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் இரு அணிகளில் நிச்சயம் ஒருவர் தோற்க வேண்டும், ஆதலால், இரு நாட்டு ரசிகர்களும் பொறுமையாக இருந்து, அமைதியாக போட்டியைக் காண வேண்டும். இந்தப் போட்டியை போர் என்ற ரீதியில் எடுத்துக்கொண்டு பார்க்கக் கூடாது, அவ்வாறு எண்ணும் ரசிகர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களாக இருக்க முடியாது.
நிச்சயமாக இந்த ஆட்டம் இரு நாட்டு அணி வீரர்களுக்கும் மிகப்பெரிய அழுத்ததை ஏற்படுத்தும். என்னைக் காட்டிலும் அழுத்தத்தை யாரும் சந்தித்து இருக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது, இரு தரப்பிலும் வீரர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை தருவார்கள் என்பதால், எனக்கு கடுமையான அழுத்தம், நெருக்கடி இருந்தது.
ஆனால், இதுவரை இந்திய அணியை 6 முறையில் ஒருமுறை கூட பாகிஸ்தானால் வெல்ல முடியவில்லை. பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங், ரன் குவிப்பு இந்த முறை மாறும் என நம்புகிறேன்.
மனதைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து, போட்டியை எதிர்கொண்டால், இந்தியாவை வீழ்த்த முடியும்.
இந்தியாவுடன் நான் மோதிய அனைத்துப் போட்டிகளும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அனைத்துப் போட்டிகளையும் நான் ரசித்துப் பார்த்துள்ளேன். என்னால் விளையாடாவிட்டாலும் எங்கிருந்தாலும் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளேன்.
இந்தியாவிடம் வலுவான பந்துவீச்சு, பேட்டிங் வரிசை இருக்கிறது. அவ்வாறு இருந்தபோதிலும் கூட கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
ஆனால், உலகக்கோப்பை போட்டியில் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி என்று வரும்போது, எந்த அணி அழுத்தத்தையும், நெருக்கடியையும் புத்திசாலித்தனமாக கையாள்கிறார்கள அவர்களதான் வெற்றி பெறுகிறார்கள்''.
இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT