Published : 15 Jun 2019 12:37 PM
Last Updated : 15 Jun 2019 12:37 PM
உலகக்கோப்பை போட்டியில் நாளை இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறும் நிலையில், இன்று இரவு இந்திய வீரர்களுக்கு தூக்கமில்லா இரவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என மூத்த வீரர் ஹர்பஜன் சிங் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு உற்சாகத்தையும், பதற்றத்தையும் அளிக்கிறதோ அதைக் காட்டிலும் பன்மடங்கு வீரர்களுக்கு இருக்கும். இதை இரு அணி வீரர்களும் உணர்ந்திருப்பார்கள்.
தன்னுடைய கடந்த கால அனுபவம் குறித்து ஹர்பஜன் சிங் பேட்டி அளித்துள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 17 முறை விளையாடியுள்ளார்.
அவர் கூறியதாவது:
''இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே எனக்கு முதல்நாள் இரவு தூக்கமே வராது. படுத்தாலும் தூங்கமாட்டேன். அதிகாலையிலேயே எழுந்து பணிகளைத் தொடங்கிவிடுவேன்.
எனக்கு அப்போது இருந்த கவலையெல்லாம் எப்படியாவது போட்டியை வென்றுவிட வேண்டும். ஒருவேளை போட்டியில் தோற்றுவிட்டால், ரசிகர்கள் நம்மை என்ன செய்வார்கள், உள்ளிட்ட பல்வேறு எண்ணங்கள் எனக்குள் வந்து சென்றன.
தோற்றுவிட்டால், மக்களும், ரசிகர்களும் ஆத்திரமடைந்து எதை வேண்டுமானாலும் செய்வார்களே என்று அச்சமடைந்தேன். கடந்த 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதிஆட்டத்தில் நாங்கள் ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோது மக்கள் எங்கள் மீது மிகுந்த கோபத்தோடு இருந்தார்கள்.
எங்கள் விளையாட்டை நினைக்காமல், வீடுகளின் மீது கல் எறிவது, உருவ பொம்மையை எரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டார்கள்.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றாலும் எனக்கு அன்று இரவு தூக்கம் வராது. நாங்கள் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வென்றபோது, அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. எனக்கு மனதுக்குள் குதூகலம், மகிழ்ச்சி உச்ச கட்டத்தில் இருந்தது. ஏனென்றால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அப்படிஒரு உற்சாகம் கிடைக்கும்.
இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுடன் விளையாடும் போது இருக்கும் அழுத்தத்தைக் காட்டிலும் பாகிஸ்தானுடன் விளையாடும் போது அழுத்தம் அதிகமாக இருக்கும்.
ஏனென்றால் இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் தங்கள் அணி வெல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். இதில் யாராவது ஒரு அணி தோற்றாலும் அந்த நாட்டு ரசிகர்கள் ஆத்திரமடைந்து பல்வேறு செயல்களில் ஈடுபடுவார்கள்.
ஆதலால், இந்திய அணி வீரர்களுக்கு இன்று இரவு தூக்கமில்லா இரவாக இருக்கும என நினைக்கிறேன். இரு நாட்டு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதே அழுத்தத்தை தரக்கூடியதுதான். ஆனால் ஏற்கெனவே இந்தியா நல்ல ரெக்கார்டு வைத்துள்ளதால், இந்திய அணிக்கு வெற்றி குறித்த அழுத்தம் அதிகமாக இருக்கும்''.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT