Last Updated : 21 Jun, 2019 05:09 PM

 

Published : 21 Jun 2019 05:09 PM
Last Updated : 21 Jun 2019 05:09 PM

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் யாருக்கு வாய்ப்பு: நாளை ஆப்கனுடன் மோதல்

சவுத்தாம்டன் நகரில் நாளை நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நசுக்கப்பட்ட நம்பிக்கையோடு இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது வலிமையான இந்திய அணி.

மாலையில் நடக்கும் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து மோதுகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

ஒருதரப்பாக அமையுமா?

இந்தப் போட்டி நிச்சயம் ஒரு தரப்பாகவே அமையப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். யார் வெல்லப் போகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும் போது, இந்த ஆட்டத்தில் ஆடும் ஆப்கானிஸ்தான் அவசரப்பட்டு விக்கெட்டுகளை இழக்காமல் புத்திசாலித்தனமாக வங்கதேசம் போன்று விளையாடுவது போட்டியை சுவாரஸ்யப்படுத்தும். 

இந்தியாவுக்கு எதிராக இதுவரை உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மோதியதில்லை. முதல் முறையாக நாளை மோதுகிறது

இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிராக இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் தோல்வியும், ஆசியக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தை சமனும் செய்தது. அணிக்குள் ஏராளமான குழப்பம், வீரர்களுக்கு இடையே பல்வேறு மனக்குழப்பம் ஆகியவற்றைச் சுமந்து கொண்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி அவற்றை ஒதுக்கிவைத்து விளையாடுதல் அவசியம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை 4 போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு போட்டி மழையால் ரத்து என 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில ஒருவெற்றிகூட இல்லாமல் இருக்கிறது.

வலி ஏற்படுத்தும் காயங்கள்

வலிமையான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை அனாசயமாக வீழ்த்திவிட்டுக் களம் புகும் கோலி படைக்கு இந்த ஆட்டம் சவாலாக இருக்கப் போவதில்லை. ஆனால், இந்திய அணியில் தொடர்ந்து வரும் காயங்கள் வேதனைப்படுத்துகின்றன.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்த தவண் காயத்தால் தொடரில் இருந்து விலகி இருப்பது, புவனேஷ்வர் குமார் அடுத்த 3 போட்டிகளுக்கு விளையாட முடியாதது, விஜய் சங்கருக்கு ஏற்பட்ட காயம் போன்றவை அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

தினேஷ்-பந்த் ?

இதில் ஷிகர் தவணுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட ராகுல், பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் அடித்து பாஸாகிவிட்டார். அந்தப் போட்டியில் நம்பிக்கை அளித்த விஜய் சங்கர் பயிற்சியின் போது பும்ரா யார்கர் பந்துவீச்சில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். நாளைய போட்டியில் விஜய் சங்கர் விளையாடுவாரா என இதுவரை உறுதியில்லை.

ஒருவேளை விஜய் சங்கர் விளையாடாவிட்டால், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது இளம் வீரர ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படுவரா என்பது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக முகமது ஷமி வருவது உறுதியாகிவிட்டதால் அதில் பிரச்சினை ஏதுமில்லை.

வலிமையான பேட்டிங்

பேட்டிங்கில் ரோஹித் சர்மா 2 சதங்கள், அரை சதம் அடித்து ரன் சேர்ப்பு பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். விராட் கோலி களத்தில் அசைக்க முடியாத வீரராக இருந்து வருகிறார். இதுவரை 2 அரை சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். இதுதவிர தோனி, ராகுல், ரிஷப் பந்த், பாண்டியா என வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது.

இதில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஏமாற்றம் அளித்தாலும், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

உலகக்கோப்பை அணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் பும்ரா, முதல் முறையாக களமிறங்கும் ஷமி ஆகியோரின் பந்துவீச்சை ஆப்கன் வீரர்கள் தாக்குப்பிடித்து விளையாடுவார்களா என்பது கேள்விக்குறிதான்.சுழற்பந்துவீச்சில் யஜூவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குச் சவாலாகவே இருக்கும்.

50 ஓவர்கள்

ஆப்கன் அணியைப் பொறுத்தவரை கடந்த 4 போட்டிகளாக 50 ஓவர்கள் வரை முழுமையாக ஆடாமல் ஆட்டமிழந்து வந்த ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்றைய இங்கிலாந்து ஆட்டத்தில்தான் முதல் முறையாக 50 ஓவர்கள் வரை நிலைத்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு பொன்னான ஆண்டாகத்தான் இருந்தது. 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 12 வெற்றிகள், ஒரு போட்டியில் சமன்செய்தும் முடித்தது. ஆனால், உலகக்கோப்பைக்கு  முன்பாக அணியின் கேப்டன்ஷிப்பில் செய்த மாற்றம், வீரர்களிடையே பெரும் குழப்பத்தையும் , மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டித் தொடரிலேயே மிக மோசமான பேட்டிங் சராசரியை ஆப்கானிஸ்தான் அணிதான் கொண்டுள்ளது. அதாவது முதலிடத்தில் இந்திய அணி 3 சதங்கள், 4 அரைச தங்கள் என 100.57 ஸ்ட்ரைக் ரேட், சராசரியாக 63.57 வைத்துள்ளது.

ஆனால், இதற்கு நேர்மாறாக, ஆப்கானிஸ்தான் அணி 3 அரை சதங்களுடன் அணியின் மொத்த ஸ்ட்ரைக் ரேட் 69 ஆக உள்ளது. பேட்ஸ்மேன்களின் சராசரி வெறும் 15.30 ரன்கள் மட்டுமே. அதாவது அனைத்து பேட்ஸ்மேன்களும் சராசரியாக 15 ரன்களுக்கு மேல் தாண்டுவதில்லை.

ஆப்கானிஸ்தான் தனது முதல் 4 ஆட்டங்களிலும் 40 ஓவர்களுக்கு மேல் தாண்டவில்லை. 50 ஓவர்களை நின்று பேட் செய்யவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில்தான் 50 ஓவர்கள் நிலைத்து நின்று பேட் செய்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் 7 பேட்ஸ்மேன்களில் 5 பேட்ஸ்மேன்களின் சராசரி வெறும் 25 ரன்களுக்குள்ளாகவேதான் இருக்கிறது. குல்புதீன் நயிப், ஜத்ரன், அஸ்கர் ஆப்கன் உள்ளிட்ட சில வீரர்கள் மட்டுமே கடந்த போட்டிகளில் ஓரளவு நிலைத்து பேட் செய்தார்கள்.

பந்துவீச்சிலும், விக்கெட் வீழ்த்துவதிலும் ஆப்கானிஸ்தான் மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள். இதுவரை நடந்த 5 போட்டிகளில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் குல்புதீன் நயிப், ஜத்ரன் இருவர் மட்டும 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித்கான் டாப் 20 பந்துவீச்சு வரிசையில் கூட இல்லை.

ரஷித் கான் பந்துவீச்சு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் பந்துவீச்சு மோர்கனால் சிதறடிக்கப்பட்டது. இதுவரை ஒருநாள் போட்டி பந்துவீச்சில் 6 சிக்ஸர் மட்டுமே அடிக்க விட்டிருந்த ரஷித் கான் இங்கிலாந்து ஆட்டத்தில் 11 சிக்ஸர்கள் நொறுக்கப்பட்டன. நாளை ரஷித் கான் நம்பிக்கையுடன் பந்துவீச வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ரஷித் கானின் லெக் ஸ்பின்னுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சிறிது அச்சப்படுவார்கள் என்பதால், நம்பிக்கையுடன் பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். இவர் தவிர முகமது நபி, முஜிபூர் ரஹ்மான் ஆகியோரின் சுழற்பந்துவீச்சும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை போட்டியில் இதுவரை ஒருவெற்றிதான் பெற்றுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின் போது, ஸ்காட்லாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். மற்ற போட்டிகள் அனைத்திலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x