Published : 12 Sep 2014 11:41 AM
Last Updated : 12 Sep 2014 11:41 AM
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் இயக்குநருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது:
இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் இதுவரை யாருக்குமே கிடைக்காத பாராட்டுகள் தோனிக்கு கிடைத்துள்ளது. அதற்கு அவர் முழு தகுதியானவர்தான். அவரது தலைமையில்தான் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்போதும் கூட தோனியின் தகுதிக்குரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும் என்றார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. இதனால் அணியின் கேப்டன் தோனி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்திய கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அணி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது. பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டனர்.
அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். தலைமை பயிற்சியாளர் பிளட்சரை ஓரங்கட்டும் வகையில் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார் என்றே கருதப்பட்டது. பிளட்சர் தாமாகவே முன்வந்து பயிற்சியாளர் பணியில் இருந்து விலக வேண்டுமென பிசிசிஐ கருதுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ரவி சாஸ்திரியை பிசிசிஐ நியமித்தது சரிதான் என்பதுபோல இந்த வெற்றி அமைந்தது.
இங்கிலாந்து தொடருக்கு மட்டுமே ரவி சாஸ்திரி இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில் பிளட்டசரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில் பிளட்சரை புகழ்ந்தார் ரவிசாஸ்திரி. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை ரவி சாஸ்திரியை இயக்குநராக பதவி நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘ரவி சாஸ்திரி இயக்குநராக பொறுப்பை ஏற்ற சில நாள்களிலேயே அணியில் நல்ல மாற்றம் காணப்பட்டது. அவர் நீடிப்பது அணியின் பலமாக கருதப்படுகிறது. இதனால் அவரை பதவியில் நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
ரவிசாஸ்திரியை நீட்டிக்க வைப்பது மூலம் பிளட்சர் தானாக ஓய்வு முடிவை எடுக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ரவிசாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் பிளட்சரை பாராட்டி இருந்தார். அவருக்கு ஆதரவாக பிசிசிஐ-யிடம் அறிக்கை அளிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.ரவி சாஸ்திரி நியமனத்தின்போது கேப்டன் தோனி, பிளட்சருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT