Published : 10 Sep 2014 10:35 AM
Last Updated : 10 Sep 2014 10:35 AM

மரின் சிலிச்சுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் குரேஷியாவின் மரின் சிலிச் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.

நியூயார்க் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் மரின் சிலிச் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஜப்பானைச் சேர்ந்த நிஷிகோரியை தோற்கடித்தார். இதனால் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசியரான நிஷிகோரி ஏமாற்றத்தோடு திரும்பியுள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய சிலிச், “கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். குறிப்பாக கடந்த ஆண்டு கடும் பயிற்சி மேற்கொண்டேன். எனது பயிற்சியாளர் கோரன் எனக்கு சிறப்பான வெற்றியை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என நினைக்கிறேன்.

இந்த வெற்றிக்காக நாங்கள் இருவரும் தீவிரமாக உழைத்திருக்கிறோம். அதிலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் டென்னிஸை ரசித்து விளையாடவும், நகைச்

சுவையோடு விளையாடவும் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இங்கு கடந்த இரு வாரங்களாக மிகவும் ரசித்து விளையாடினேன். அதேநேரத்தில் எனது வாழ்நாளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஜோகோவிச், நடால், ஃபெடரர் போன்றவர்களையும் தோற்கடிக்க முடியும்” என்றார்.

தோல்வி குறித்துப் பேசிய நிஷிகோரி, “சிலிச் என்னை முற்றிலுமாக வீழ்த்திவிட்டார். அதேநேரத்தில் மிக நன்றாக ஆடினார். என்னால் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இது மிகக் கடினமான தோல்விதான். ஆனாலும் இறுதிச்சுற்று வரை முன்னேறியதில் மகிழ்ச்சியே. அடுத்த முறை பட்டம் வெல்ல முயற்சிப்பேன்” என்றார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் குரேஷியர் என்ற பெருமையைப் பெற்றார் சிலிச். இதற்கு முன்னர் 2001-ல் குரேஷியாவின் இவானிசெவிச் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றார். இவானிசெவிச்தான், மரின் சிலிச்சின் தற்போதைய பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் ஆண்டுக்கு முன்பு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்ட சிலிச், தனது 28-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் பட்டத்தை வென்றிருக்கிறார். இந்தப் போட்டியில் சிலிச்சின் போட்டித் தரவரிசை 14. இதன்மூலம் பீட்சாம்ப்ராஸுக்குப் பிறகு தரவரிசையில் பின்னிலையில் இருந்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை சிலிச் பெற்றுள்ளார். பீட் சாம்ப்ராஸ் 2002-ல் அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றபோது சர்வதேச தரவரிசையில் 17-வது இடத்தில் இருந்தார்.

நிஷிகோரிக்கு எதிராக 9 பிரேக் பாயிண்ட்களில் 8-ஐ “சேவ்” செய்த சிலிச், 17 ஏஸ் சர்வீஸ்களை விளாசினார். 2005-க்குப் பிறகு ஜோகோவிச், ஃபெடரர், நடால் ஆகியோரில் ஒருவர்கூட இல்லாமல் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x