Published : 10 Mar 2018 04:03 PM
Last Updated : 10 Mar 2018 04:03 PM
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவின் காட்டடி சதம் மற்றும் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 223 ரன்களுக்கு மடிய, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 32.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்குக் 229 ரன்கள் எடுத்து தொடரைக் கைப்பற்றியது. ராஸ் டெய்லர் அணியில் காயம் காரணமாக இடம்பெறாதது நியூசிலாந்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணியிலும் ஜேசன் ராய் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இங்கிலாந்தின் 3வது அதிவேக சதம்: பேர்ஸ்டோவின் மட்டை சுழற்றல்!
ஜானி பேர்ஸ்டோ இன்று என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை, ஒரு ஜெயசூரியா, சச்சின் டெண்டுல்கர், ஆடம் கில்கிற்ஸ்ட், பிரெண்டன் மெக்கல்லமைப் பார்ப்பது போல் இருந்தது. 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஹிட் விக்கெட் ஆகி வெளியேறிய போது நியூஸிலாந்து மனநிலை சிதறடிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இஷ் சோதி, பேர்ஸ்டோவிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
கொலின் டி கிராண்ட்ஹோமின் 3வது ஓவரில் 16 ரன்கள் விளாசிய பேர்ஸ்டோ, 38 பந்துகளில் அரைசதம் கண்டார், இஷ் சோதியின் 8 பந்துகளில் 5 சிக்சரக்ளை விளாசினார், நேர் பவுண்டரிகளின் இருபுறமும் இந்த சிக்சர்கள் பறந்தன, மிகவும் துல்லியமான காட்டடி. எல்லாம் ரசிகர்கள் மத்தியில் போய் விழுந்தன. இதில் ஒன்றை ரசிகரில் யாராவது கேட்ச் பிடித்திருந்தால் 50,000 டாலர் பரிசு கிடைத்திருக்கும் ஆனால் பிடிக்க முடியவில்லை, ஏனெனில் அனைத்தும் அத்தனை சக்தி வாய்ந்த ஷாட்களாகும். ஸ்கொயர் லெக் திசையில் புல் ஷாட்டில் 99 ரன்கள் வந்த பேர்ஸ்டோ அதன் பிறகு தேர்ட்மேனில் தட்டி விட்டு 1 ரன் எடுத்து இங்கிலாந்தின் 3வது அதிவேக ஒருநாள் சதமாக 58 பந்துகளில் சதம் கண்டார்.
ஏற்கெனவே ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதம் எடுத்தது இங்கிலாந்தின் முதல் அதிவேக சதமாகும் மொயின் அலி 53 பந்துகளில் எடுத்தது 2வது இடத்தில் உள்ளது, தற்போது பேர்ஸ்டோ 58 பந்துகளில் எடுத்தது 3வது அதிவேக சதமாகும். சதம் அடித்த பிறகு டிரெண்ட் போல்ட் பந்தை ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் பளார் பவுண்டரி அடித்தார், மீண்டும் அதையே முயற்சி செய்த போது ஸ்டம்பை மிதித்து ஹிட் விக்கெட் ஆனார். 50 ரன்களிலிருந்து சதத்துக்கு 20 பந்துகளில் விரைந்தார் பேர்ஸ்டோ. முன்னதாக நியூஸிலாந்து இன்னிங்சில் பவுண்டரி அருகே மிக அருமையாக ஒரு கையில் ஒரு ஸ்டன்னிங் கேட்சையும் எடுத்தார் பேர்ஸ்டோ.
பேர்ஸ்டோவும் அலெக்ஸ் ஹேல்சும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 20.2 ஓவர்களில் 155 ரன்கள் சேர்த்தனர். ஹேல்ஸ் 74 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஸ்லாக் ஸ்வீப் முயற்சியில் சாண்ட்னரிடம் ஆட்டமிழந்தார். மோர்கன் அடி வாங்கி புண்பட்டிருந்த சோதிக்கு ஆறுதலாக ஒரு விக்கெட்டைக் கொடுக்கும் போது இங்கிலாந்து 192/3 என்று இருந்தது. ஜோ ரூட் (23), இயான் மோர்கன் (26) இணைந்து 229/3 என்று வெற்றி பெறச் செய்தனர். நியூஸிலாந்து தரப்பில் அனைவருக்கும் அடி டிரெண்ட் போல்ட் 6 ஓவர்களில் 50 ரன்கள், சோதி 7.4 ஓவர்களில் 78 ரன்கள். சாண்ட்னர் மட்டும் சிறப்பாக வீசி 10 ஓவர்களில் 44 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார், சவுதி 5 ஓவர்களில் 20 ரன்கள்.
கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத் அபாரம், 93/6லிருந்து சாண்ட்னர் மீண்டும் அதிரடி:
முன்னதாக இங்கிலாந்தினால் பேட் செய்ய அனுப்பப்பட்ட நியூஸிலாந்து அணியில் கொலின் மன்ரோ 3வது பந்தில் கிறிஸ் வோக்ஸிடம் பின்பக்கம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். லெக் திசையில் ஆடமுற்பட்ட போது டாப் எட்ஜ் எடுத்தது. வெலிங்டனில் 49 ரன்கள் எடுத்த பிறகே மன்ரோவின் இந்தத் தொடர் ஸ்கோர்கள் 6,1,0,0 ஆகும். கேன் வில்லியம்சன் 14 ரன்களில் மார்க் உட்டின் வைடு ஆஃப் த கிரீஸ் பந்தை தவறான லைனில் ஆடி மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். டாம் லேதம் அடில் ரஷீத்தின் பிளைட்டுக்கு ஆட்டமிழந்த போது நியூஸிலாந்து 60/3. சாப்மேன் இறங்கி மொயின் அலியின் திரும்பிய பந்துக்கு பவுல்டு ஆனார் 61/4. இந்த அவுட்டையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மார்டின் கப்தில் 68 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸின் அபார கேட்சுக்கு ரஷீத்திடம் வெளியேறினார் 79/5. டிகிராண்ட்ஹோம் ரஷீத் பந்தை அசிங்கமாக சுழற்ற லாங் ஆனில் எளிதான கேட்ச் ஆனது. நியூஸிலாந்து 93/6.
ஹென்றி நிகோல்ஸ் தனது முந்தைய 4 இன்னிங்ஸ்களில் 14 ரன்களையே எடுத்தவர் இன்று கட்டுக்கோப்புடன் ஆடி 73 பந்துகளில் அரைசதம் கண்டார். சாண்ட்னர் அதிரடி முறையில் ஆடி மீண்டுமொருமுறை இந்தத் தொடரில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி 60 பந்துகளில் 50 ரன்கள் வந்தார். 58 ரன்களில் மொயின் அலி ஒரு கேட்சை விட்டார் இவருக்கு.
டாம் கரண் 40வது ஓவரில்தான் கொண்டு வரப்பட்டு 5.5 ஓவர்களில் 46 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களில் கரனிடம் ஆட்டமிழந்தார், சாண்ட்னர் 71 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் தன் அதிகமான தனிப்பட்ட ஸ்கோரான 67 ரன்களை அடித்த பிறகு பவுண்டரியில் ஹேல்ஸின் அற்புதமான கேட்சுக்கு வெளியேறினார், இவரது கேட்சைப் பின்னுக்குத் தள்ளிய திகைப்பூட்டும் இன்னொரு மிட்விக்கெட் கேட்சில் பேர்ஸ்டோ டிம் சவுதி வெளியேறுவதற்குக் காரணமானார். 93/6லிருந்து நியூஸிலாந்து 223 ஆல் அவுட்.
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ, ஹேல்ஸ் இருந்த மூடுக்கு இன்று 400 கூட போதியிருக்காது, இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 3-2 என்று கைப்பற்றியது. ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ, தொடர் நாயகன் கிறிஸ் வோக்ஸ். இவர் இந்தத் தொடர் முழுதும் அற்புதமான தொடக்க ஓவர்களை வீசியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து, நியூஸிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. மார்ச் 22-ல் ஆக்லாந்தில் முதல் டெஸ்ட். மார்ச் 30-ம் தேதி கிறைஸ்ட் சர்ச்சில் 2வது டெஸ்ட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT