Published : 26 Mar 2018 05:08 PM
Last Updated : 26 Mar 2018 05:08 PM
பந்தை அத்துமீறி சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் முதல் ஆஸ்திரேலிய பொதுமக்கள் வரை அனைவரும் ஸ்மித் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அனைத்திலும் ஸ்மித் தலைப்புச் செய்தியாகி தலைப்புப் பக்கத்தை அலங்கரித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் ‘யாரைக் குற்றம்சாட்டுவது?’ என்ற தலைப்பில் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ராபர்ட் கீ: ஸ்மித்தைத்தான் நான் குற்றம்சாட்டுவேன். அவர் எல்லாவற்றையும் பற்றி கருத்துக் கூறிக்கொண்டேயிருந்தார். கேகிசோ ரபாடா தடை நீக்கம் பற்றி கருத்து கூறினார். ஆண்டர்சன் ஸ்லெட்ஜிங், ஆஷஸ் தொடர், ஜானி பேர்ஸ்டோ, பேங்க்ராப்ட் தலைமுட்டிய கதை என்று அனைத்தைப் பற்றியும் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஆடும் கிரிக்கெட்டோ படுமோசம்.
மாட்டிக் கொண்டதால் அவர் இன்று ஏதோ பரிதாபத்துக்குரியவராக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தான் செய்ததற்காக வருத்தமடைபவர் போல் தெரியவில்லை. அனைத்தையும் மூடிமறைக்கவே அவர் முயல்கிறார்.
அவர் போயேத் தீர வேண்டும், பந்தைச் சேதப்படுத்தியதற்காக மட்டுமல்ல, கிரிக்கெட் மைதானத்தில் இவரது தலைமையில் ஆஸ்திரேலியர்கள் நடந்து கொள்ளும் அனைத்து துர்நடத்தைகளுக்கும் காரணம் இவரே. போதும், மாற்றம் தேவை.
மைக்கேல் ஹோல்டிங்:
தொலைக்காட்சி ரீப்ளேக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் தாங்கள் செய்ததை ஸ்மித்தும் பேங்கிராப்ட்டும் நியாயப்படுத்துவதையும் தாண்டி ஒட்டுமொத்த இழிவையும் எதுவுவே நடக்காதது போல் பேசியதுதான் அதிர்ச்சி ஏற்பட்டது, அதாவது அது சரிப்பட்டு வரவில்லை நடுவர்கள் பந்தை மாற்றவில்லை என்ற தொனியில் பேசினர். நான் ஒருவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டேன் ஆனால் அது இலக்கைத் தவறவிட்டது அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்ற தொனியில் இருவரும் பேசினர்.
இருவரும் உட்கார்ந்து இப்படிச்செய்ய எப்படித் திட்டமிட்டனர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஏமாற்றத் திட்டமிட்டனர்.
பாப் வில்லிஸ்: சல்மான் பட் திட்டத்தில் மொகமது ஆமிர் சிக்கியது போல் ஸ்மித் திட்டத்தில் அனுபவமற்ற பேங்கிராப்ட் சிக்கியுள்ளார். ஸ்மித்தின் காலம் முடிவுக்கு வருகிறது என்றே கருதுகிறேன்.
ஜேஸன் கில்லஸ்பி:
செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்மித் பேசியது சூழலின் சூட்டை உணராதது போல் தெரிந்தது. முன் கூட்டியே திட்டமிட்டு ஏமாற்றுவதை ஒப்புக் கொண்டது போல் பேசினார்.
அதிர்ச்சிகரமானது, வருந்தத்தக்கது, ஏமாற்றளிப்பது, ஸ்மித் தொடர்ந்து கேப்டனாக நீடிக்க முடியாது.
இத்தகைய பேரிழிவிலிருந்து ஆஸ்திரேலியா மீண்டு விடும் ஆனால் இதற்கு நிச்சயம் காலமெடுக்கும். இந்தப் புண்கள் ஆற நீண்ட காலமாகும். ஆஸ்திரேலிய அணி தங்கள் நடத்தைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலக்கட்டம் வந்து விட்டது, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
மைக் ஆத்தர்டன்:
நான் ஆஸ்திரேலியர்கள் சிலரிடம் பேசினேன், அவர்கள் கூறும்போது இந்த அளவுக்கு யார் மீதும் அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டதில்லை என்றனர். ஸ்மித் மீது மட்டுமல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீதே கோபம் கொப்பளிக்கிறது.
ஸ்மித்துக்கு ஆதரவு இல்லை, அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டும்.
டோமினிக் கார்க்: இவ்வளவு நடந்த பிறகும் தானே இன்னும் வழிநடத்த சரியான நபர் என்று கூறியபோதே அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவர் நேர்மையாளராக இருந்தால் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘நானே காரணம், நான் விலகுகிறேன்’ என்று கூறியிருக்க வேண்டும். ஏமாற்றியதாக ஒப்புக் கொண்ட பிறகு விளையாட்டில் அது விளையாட்டாக மறைந்து விடாது.
ஸ்மித் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை, பேங்கிராப்ட் மறுத்திருக்கலாம். அவருக்காக வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT