Published : 25 Mar 2018 05:35 PM
Last Updated : 25 Mar 2018 05:35 PM
மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ராஷீத் கான் இன்று படைத்தார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 52போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ராஷித் கான் 44 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நடந்து வருகிறது. இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றாலும் ஒருமுறைக்காகவே இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஷாய் கோப் விக்கெட்டை வீழ்த்தியபோது, 100-வது விக்கெட் என்ற மைல்கல்கை ராஷித் கான் அடைந்தார்.
19வயதான இளம் வீரர் ராஷித்கான் அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனையாகும். அதுமட்டுமல்லாமல் 50 விக்கெட்டுகளை 26 போட்டிகளில் அடைந்தார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷெல் ஸ்டார்க், பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக்(53 போட்டி), ஷேன் பாண்ட்(54போட்டி), பிரட் லீ (55 போட்டி) ஆகியோரின் சாதனைகளை ராஷித் கான் முறியடித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவும், ராஷித் கானும் முதலிடத்தில் உள்ளனர்.
அதுமட்டுலமல்லாமல், மிகக்குறைந்த வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1994ம் ஆண்டு பிடித்தார். அதையும் ராஷித் கான் முறியடித்துவிட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்ப போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தேர்வாகியிருந்த ராஷித் கானின் பந்துவீச்சு அந்த அணி ப்ளே ஆப் சுற்றுவரை செல்ல முக்கியக் காரணமாக இருந்தது. 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை ராஷி்த கான் வீழ்த்தி இருந்தார். வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள 11-வது ஐபிஎல்போட்டியில் சன் ரைசர்ஸ் அணி ராஷித் கானை ரூ.9 கோடி கொடுத்து தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT