Published : 08 Sep 2014 01:00 PM
Last Updated : 08 Sep 2014 01:00 PM

பிசிசிஐ ஏஜிஎம் விவகாரம்: செப்.26-ல் செயற்குழு கூட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு வரும் 26-ம் தேதி கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தை (ஏஜிஎம்) ஒத்திவைப்பது தொடர்பாக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏஜிஎம்மை நடத்துவதில் முட்டுக்கட்டை நீடித்து வருவது தொடர்பாக ஆலோ சனை நடத்த பிசிசிஐ உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 31 உறுப்பினர்களில் 18 பேர் நேரடியாகவும், பிசிசிஐ இடைக்கால தலைவர் சிவலால் யாதவ் உள்ளிட்ட 3 பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி யிருக்கும் என்.சீனிவாசனும் கலந்து கொண்டார். அப்போது வரும் 26-ம் தேதி பிசிசிஐ செயற்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “ஏஜிஎம் தொடர்பாக சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராயப்பட்டது. ஆனால் இப்போதைய தருணத்தில் ஏஜிஎம்மை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

பிசிசிஐ விதிமுறைப்படி ஒரு கூட்டம் நடைபெற்ற 3 வாரங் களுக்குப் பிறகே இன்னொரு கூட்டத்தைக் கூட்ட முடியும். அதனால் வரும் 26-ம் தேதி செயற்குழுவை கூட்டினால், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஏஜிஎம்மை நடத்த முடியாது.

இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஏஜிஎம் நடைபெற வாய்ப்பே இல்லை. இந்தக் கூட்டத்தில் 21 பேர் கலந்து கொண்டனர். இதன்மூலம் சீனிவாசனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பது தெளிவாகி யுள்ளது” என்றார்.

ஐபிஎல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முத்கல் கமிட்டி வரும் நவம்பரில் அறிக்கை அளிக்கவுள்ளது. அதன்பிறகே ஏஜிஎம்மை நடத்த வேண்டும் என பிசிசிஐ உறுப்பினர்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. சீனவாசன் மீது தவறில்லை என முத்கல் கமிட்டி அறிக்கை அளித்தால், சீனிவாசன் மீண்டும் பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தை நாடுவேன்: வர்மா

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பிசிசிஐ ஏஜிஎம் நடத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என பிஹார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x