Published : 27 Sep 2014 10:50 AM
Last Updated : 27 Sep 2014 10:50 AM

2015 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி: பிசிசிஐ செயற்குழுவில் முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை இந்திய அணியின் இயக்குநராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நீடிப்பார் எனவும், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை (ஏஜிஎம்) நவம்பர் 20-ம் தேதி நடத்துவது எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ)செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின்போது உலகக் கோப்பை வரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக டங்கன் பிளெட்சரும், உதவிப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், அருண், தர் ஆகியோரும் இருப்பார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து உதவிப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜோதேவ்ஸ், டிரெவர் பென்னி ஆகியோர் தங்களின் ஒப்பந்த காலம் முடியும் வரையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரியலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடர், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவற்றின்போது இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நவம்பர் 20-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின்போதுதான் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x