Last Updated : 25 Mar, 2018 01:59 PM

 

Published : 25 Mar 2018 01:59 PM
Last Updated : 25 Mar 2018 01:59 PM

விஸ்வரூபமெடுக்கும் ‘பால்டேம்பரிங்’: கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை நீக்குங்கள்: ஆஸி. விளையாட்டு ஆணையம் உத்தரவு

 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக ஸ்டீவ் ஸ்மித்தை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் தெளிவாகப் பதிவானது.

இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவானது. பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும்வரை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகத் தொடரலாம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சதர்லாந்து தெரிவித்தார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையத்தின் தலைவர் ஜான் வில்லி, தலைமை நிர்வாக அதிகாரி பால்மர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் யாருக்கெல்லாம் அணியில் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் அனைவரையும் உடனடியாக நீக்க வேண்டும்.

விளையாட்டில் இதுபோன்ற மோசடியான, ஏமாற்றுத்தன செயல்கள் நடைபெறவே கூடாது. ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன், நேர்மையுடன், மரியாதையாக நடக்க வேண்டும் என்று இந்த நாடு எதிர்பார்க்கிறது.

நாட்டின் பிரதிநிதிகளாக கிரிக்கெட் அணி இருக்கிறது. உதாரணமாக, கிரிக்கெட் போட்டியை பின்பற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு பயிற்சி எடுத்து வருகிறார்கள், தேசிய அணியில் விளையாட மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல உதாரணமாக வீரர்களும், அணியும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தல்

இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக ஸ்டீவ் ஸ்மித்தை நீக்ககோரியுள்ளார். மெல்போர்ன் நகரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய செய்தியை அறிந்ததும், நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், வேதனை அடைந்தேன். இன்றுகாலை அனைவரும் எழுந்தபோது, தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த செய்தி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏமாற்றுத்தனத்தில், மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது என்ற விஷயம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் டேவிட் பீவிருடன் பேசினேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த சம்பவங்களுக்கு எனது வேதனைகளையும், கருத்துக்களையும் தெளிவாக அவரிடம் கூறி இருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவின் பிரதிநிகளாக கிரிக்கெட் அணி அங்கு சென்றுள்ளது. அங்கு அவர்கள் செய்யும் எந்த ஒரு ஒழுக்கக்குறைவான செயலும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவமானமாகும். ஆதலால், உடனடியாக விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் எந்நேரமும் நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x