Published : 09 Mar 2018 01:07 AM
Last Updated : 09 Mar 2018 01:07 AM
கொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது ஆட்டம் தரமற்ற ஒரு சர்வதேச கிரிக்கெட்டுக்கு உதாரணமாகத் திகழ்ந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் (வேறு வழியின்றி) வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியை எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஒரு ‘கேரக்டர்’ கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் படு மட்டமான பீல்டிங்கையும், கோட்டை விடப்பட்ட கேட்ச் வாய்ப்புகளையும் 11 வைடுகள் அடங்கிய மோசமான பந்து வீச்சையும் சரிவர பயன்படுத்திக் கொள்ள முடியாத தரமற்ற பேட்டிங்கை ஆடி 20 ஓவர்களில் 139/8 என்று மடிய, இந்திய அணி இலக்கை விரட்டி வங்கதேசத்தின் ஒன்றுமேயில்லாத பேட்டிங் போலவே ஒன்றுமேயில்லாத பந்து வீச்சை எதிர்கொண்டு 140 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களில் 140/4 என்று வெற்றி பெற்றது.
ஏன் தரமற்ற கிரிக்கெட்?
டாஸ் வென்று முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார் ரோஹித் சர்மா. முதல் ஓவரை உனாட்கட் வீச 6வது பந்தில் சவுமியா சர்க்கார் பந்தைப் புரிந்து கொள்ளாமல் ஒரு அசிங்கமான ஷாட்டை ஆட பந்து டாப் எட்ஜ் ஆகி தேர்ட்மேனுக்கு காற்றில் செல்கிறது. பவுண்டரியிலிருந்து ஓடி வந்த வாஷிங்டன் சுந்தரும் கேட்சுக்கான அழைப்பை விடுக்கவில்லை, பாயிண்டிலிருந்து பின்னால் ஓடிய பாண்டேயும் அழைப்பு விடுக்கவில்லை. வழக்கம் போல் இருவருக்கும் இடையில் பந்து விழுந்தது. பேட்டிங், பீல்டிங் என்று கிரிகெட்டின் தரம் அங்கு அடிவாங்கியது.
இதனை பயன்படுத்திக் கொள்ள சற்றும் முயலாத சவுமியா சர்க்கார் இதே உனாட்கட்டின் அடுத்த ஓவரில் பேடிற்கு வந்த பந்தை லெக் திசையில் தூக்கி சிக்சருக்கு அடித்தார். ஆனால் அதே ஓவரில் இதைவிடவும் ஷார்ட் பிட்ச் பந்தை, ஆனால் கொஞ்சம் கூடுதலாக எழும்பிய பந்தை ஷார்ட் பைன் லெக்கில் சாஹலிடம் அடிக்க அவர் முன்னால் பாய்ந்து கேட்சை எடுத்தார்.
அடுத்த ஷர்துல் தாக்கூர் ஓவரில் தமிம் இக்பால் பிளிக் செய்ய முயன்று கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார், ஆனால் அதனை ஒழுங்காக முறையீடு செய்தார் தமிம், பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆனது விதிப்படி நாட் அவுட். தப்பினார் தமிம் இக்பால்.
அடுத்த 2 பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய தமிம் இக்பால், ஷர்துல் தாக்கூரின் அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை ஷார்ட் பைன் லெக்கில் உனாட்கட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சவுமியா சர்க்கார் போலவே வெளுக்க வேண்டிய பந்தை ஷார்ட் பைன்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆகவே இரண்டு மோசமான பந்துக்கு 2 விக்கெட்.
ஒரே ஓவரில் 2 கேட்ச் கோட்டை விடப்பட்டது:
ஏன் தரமற்ற கிரிக்கெட் என்றால் முதல் 2 விக்கெட்டுகளுமே தரமற்ற பந்துக்குத் தரமற்ற ஆட்டத்தினால் விழ, விஜய் சங்கர் ஓவரில் லிட்டன் தாஸ் இருமுறை ஆட்டமிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டது! சங்கர் பந்தை லிட்டன் தாஸ் ஹூக் செய்ய முயல பந்து பவுலர் தலைக்கு மேல் பின்னால் செல்ல ரெய்னா எளிதான கேட்சை விட்டார். ஒருநாள் அணியில் இடம்பெறுவேன், என்னை அணியிலிருந்து நீக்கியது காயப்படுத்துகிறது என்றெல்லாம் கூறிவிட்டு கேட்சை விடுவது எந்தத் தரத்தில் சேர்த்தி? அதே ஓவரில் மீண்டும் லிட்டன் தாஸுக்கு மீண்டும் விஜய் சங்கரின் பவுன்சரில் ஃபைன் லெக்கில் வாஷிங்டன் சுந்தர் கேட்சை விட்டார். சங்கருக்கு ஒரே ஓவரில் சர்வதேச விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பு மோசமான பீல்டிங்கினால் பறிபோனது.
ஆனால் அவர் முஷ்பிகுர் ரஹீம் (18) விக்கெட்டை தனது அடுத்த ஓவரில் வீழ்த்தினார். இறங்கி வந்து கொஞ்சம் ஓவராக ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் அடிக்கப்பார்த்தார் எட்ஜ் ஆனது, கள நடுவர் நாட் அவுட் கொடுக்க ரிவியூவில் அவுட் ஆனது. சங்கர் தன் முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு விஜய் சங்கர், வங்கதேச கேப்டன் மஹ்முதுல்லாவை 1 ரன்னில் வீழ்த்தினார்.
இரண்டு கேட்ச் வாய்ப்பைப் பயன்படுத்திய லிட்டன் தாஸ் 30 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களில் சாஹல் பிளைட்டை புரிந்து கொள்ளாமல் ரெய்னாவிடம் லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். மெஹிதி ஹசன் மிராஸை உனாட் கட் 3 ரன்களில் வீட்டுக்கு அனுப்பினார்.
119/6 என்று இருந்த வங்கதேசம் 139 ரன்களுக்கு 8 என்று முடிந்தது. சபீர் ரஹ்மான் 30 ரன்களை எடுத்தார். 20 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன்கள் விகிதத்தையே எட்ட முடியாத ஒரு மோசமான் பேட்டிங்கில் ரூ.11.5 கோடி உனாட்கட் 4 ஒவர்களில் 38 ரன்கள் என்று ஓவருக்கு 9 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்து 4 வைடுகளுடன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் வேறு. வங்கதேசம் அடித்த 3 சிக்சர்களில் 2 சிக்சர்கள் ரூ.11.5 கோடி உனாட்கட் பந்தில் வந்தது. வாஷிங்டன் சுந்தர், சாஹல் டைட்டாக வீசினர், விஜய் சங்கர் ஓவருக்கு 8 ரன்கள் வீதத்தில் 32 ரன்களுக்கு 2 விக்கெட்.
விரட்டலில் ரோஹித் சர்மா (17) விக்கெடஇந்திய அணி முஸ்தபிசுர் ரஹ்மானின் லேசான இன்ஸ்விங்கருக்கு பிளேய்ட் ஆன் முறையில் இழந்தது. ரிஷப் பந்த் 7 ரன்களில் ரூபல் ஹுசைன் பந்தில் ரோஹித் போலவே பிளேய்ட் ஆன் ஆனார். சுரேஷ் ரெய்னாவும் 1 ரன்னில் வீழ்ந்திருப்பார், ஆனால் லெக் கல்லியில் மெஹிதி ஹசன் மிராஸ் கடினமான ஒரு வாய்ப்பை நழுவ விட்டார்.
ஆனால் 1300% சம்பள உயர்வு பெற்ற ஷிகர் தவன், டஸ்கின் அகமதை ஒரு ஹூக் சிக்ஸ், புல் பவுண்டரி அடித்ததன் மூலம் நிலைமைக்குக் கொண்டு வந்தார். 35 வது பந்தில் தன் அரைசதத்தை எடுத்தார் தவன். ரெய்னா 27 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து, இடுப்புக்கு வந்த ஷார்ட் பந்தை ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஷிகர் தவண் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மணீஷ் பாண்டே 19 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் நாட் அவுட். தினேஷ் கார்த்திக் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டு 2 ரன்கள் நாட் அவுட். தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகே கிரிக்கெட்டை மறந்த வங்கதேசத்துக்கு எதிராகக் கூட தினேஷ் கார்த்திக்கை முன்னால் களமிறக்காததன் அரசியலை யாராவது தட்டிக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆட்ட நாயகனாக விஜய் சங்கர் தேர்வு!! இவர் 4 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்ததோடு 2 பவுண்டரி 1 சிக்சருடன் 3 வைடுகள் 2 நோபால்களையும் வீசியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இந்திய அணி வீசிய 2 நோபால்களுமே விஜய் சங்கர் போட்டதுதான்.
வங்கதேசத்தின் 138 ரன்களில் இந்திய அணி சொதப்பலான பீல்டிங்குடன் 15 ரன்களை உதிரி வகையில் கொடுத்தது. மொத்தத்தில் தரமற்ற ஒரு கிரிக்கெட் ஆட்டம் நடந்தேறியுள்ளது.
இதில் ரோஹித் சர்மா ஆட்டம் முடிந்து கூறியதுதான் நகைச்சுவையா அல்லது உண்மையில் அவர் இந்த ஆட்டத்தை நம்புகிறாரா என்ற உண்மையான கிரிக்கெட் ரசிகரின் வேதனையான கேள்விக்கு பதில் கூற முடியாத தொனியில் அமைந்தது: “ இட் வாஸ் எ கிரேட் பெர்ஃபாமன்ஸ்”! என்னவொரு நகைமுரண்!! ஒரு மோசமான ஐபிஎல் கிரிக்கெட்டை விடவும் தரமற்ற ஒரு மோசமான ஒரு சர்வதேச கிரிக்கெட்! இத்தகைய அர்த்தமற்ற தொடர்களை முதலில் ஒழித்தால்தான் எந்த ஒரு கிரிக்கெட் வடிவமும் சுவாரசியமானதாக இருக்கும்.
சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆடிய முத்தரப்பு டி20 தொடரை ஒப்பிடும்போது இந்தத் தொடர் இதுவரை ஒரு தரமற்ற கீழ்நிலை கிரிக்கெட்டாகவே உள்ளது என்பதை வருத்தத்துடனும் வேதனையுடனும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT