Last Updated : 30 Mar, 2018 02:37 PM

 

Published : 30 Mar 2018 02:37 PM
Last Updated : 30 Mar 2018 02:37 PM

முதல் முறையல்ல, பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித், வார்னர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டனர்: போட்டி நடுவர் பகீர் தகவல்

 பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் விளையாடத் தடையும், பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் விளையாடவும் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் உத்தரவிட்டது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஸ்மித் சிட்னி விமானநிலையத்தில் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரினார்.

மேலும், அணியின் பயிற்சியாளர் டேரன் லீமானும் 4-வது டெஸ்ட் போட்டியோடு விலகுவதாக தெரிவித்துள்ளார். ஸ்மித்,வார்னருக்கான தண்டனையைக் குறைத்து மன்னிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்தும் செயல் ஸ்மித், வார்னருக்கு புதிதல்ல, இருவரும் பல போட்டிகளில் வழக்கமாக வைத்துள்ளனர் என்று போட்டி நடுவரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான டேர்ல் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

பலமுறை உள்நாட்டுப்போட்டிகளில் பந்தை சேதப்படுத்தியதாக ஸ்மித்,வார்னர் மீது புகார்கள் எழுந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து டேர்ல் ஹார்பர் சிட்னி ஹெரால்டு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் விக்டோரியா அணிக்கும் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையிலான செப்பீல்ட் சீல்ட் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கா ஸ்மித்தும், வார்னரும் விளையாடினார்கள். ஆனால், இருவரும் அந்தப் போட்டியில் நேர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருவர் மீதும் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அந்தப் போட்டியில் இருவரும் நேர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என ஆதாரத்துடன் என்னிடம் புகார் கூறப்பட்டது.

அது குறித்து நான் கிரிக்கெட் ஆஸ்திரேலியா போட்டி நடுவருக்கும், தேர்வுக்குழு மேலாளர் சிம்மன் டாபுலுக்கும் நான் மின்அஞ்சல் செய்தேன்.

இதில் டேவிட் வார்னர் மீண்டும், மீண்டும் அந்த தவறை செய்தார். இது குறித்து அப்போது இருந்த நடுவர்கள் ஸ்மித்திடம் நேர்மையான முறையில் விளையாடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்கள்.

இதுதொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் அணியின் பயிற்சியாளர் டிரன்ட் ஜான்சனிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் ஒரு அணியின் கேப்டன் பந்தை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுவதை கண்டிக்கவில்லை. இதை பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.

அதுமட்டுமல்லாமல், சிட்னி மைதானத்தில் தன்னுடைய நியூ சவுத் வேல்ஸ் அணி தோல்வி அடைந்தவுடன் ஸ்மித், மைதானம் சரியில்லை என்று புகார் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு போட்டிகளிலும், செபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் விளையாடுவதையும் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது வார்னர், ஸ்மித் இருவரையும் பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் எச்சரிக்கை செய்து இருந்தேன்.''

இவ்வாறு டேர்ல் ஹார்பர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x