Published : 03 Sep 2014 10:00 AM
Last Updated : 03 Sep 2014 10:00 AM
பார்முக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து போராடி வரும் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், திடீரென பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரான புல்லேலா கோபிசந்திடம் பயிற்சி பெற்று வந்த சாய்னா, ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் விமல் குமாரிடம் பயிற்சி பெறவிருக்கிறார்.
கடந்த ஜூனில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 20 மாத கால தொடர் தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாய்னா. இதேபோல் கடந்த மே மாதம் நடைபெற்ற உபெர் கோப்பையிலும் சிறப்பாக ஆடினார். பின்னர் உடற்தகுதி பிரச்சினை காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய சாய்னா, கடும் பயிற்சிக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் களமிறங்கினார். ஆனால் அதில் காலிறுதியோடு வெளியேறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அதிரடியாக பயிற்சியாளரை மாற்றியிருக்கும் சாய்னா, பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோன் அகாடமிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் கூறியதாவது:
உபெர் கோப்பை போட்டியின்போது விமல் எனக்கு வழங்கிய ஆலோசனை பெரிதும் உதவியாக இருந்தது. அதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக அவரிடம் பயிற்சி பெற விரும்பினேன். ஆசிய விளையாட்டுப் போட்டி மிகப்பெரிய போட்டியாகும். அதில் பதக்கம் வெல்ல விமலால் எனக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். பெங்களூர் சென்று அவரிடம் 15 நாள்கள் பயிற்சி பெறவிருக்கிறேன் என்றார்.
கோபிசந்தின் பயிற்சியின் கீழ் இதுவரை 20-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் சாம்பியனாகியிருக்கும் சாய்னா, திடீரென விமலிடம் பயிற்சி பெறவிருப்பது பல்வேறு ஊகங்களை எழுப்பியிருக்கிறது. அதுகுறித்துப் பேசிய சாய்னா, “இது தற்காலிக முடிவுதான். ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு மீண்டும் ஹைதராபாத் திரும்பிவிடுவேன். கோபிசந்த் தொடர்ந்து எனது பயிற்சியாளராக இருப்பார்” என்றார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT