Published : 09 Mar 2018 01:51 PM
Last Updated : 09 Mar 2018 01:51 PM
தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டர்பன் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இடையே நடந்த, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக்குக்கும் இடைய ஓய்வு அறைக்கு செல்லும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டது. டீகாக் தனது மனைவியையும், குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசியதால், தான் கோபமாக நடந்து கொண்டதாக வார்னர் ஐசிசி நடுவரிடம் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, வார்னருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 75சதவீதம் அபராதமும், டீக்காக்குக்கு 25 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கும், குறிப்பாக டேவிட் வார்னருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜேம்ஸ் சதர்லாந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது வார்னருக்கும், டீகாக்குக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்துக்கு அளிக்கப்பட்ட தண்டனையையும், இந்த விஷயத்தை சிறப்பாக கையாண்ட போட்டி நடுவர் ஜெப் குரோவையும் நான் பாராட்டுகிறேன்.
ஆஸ்திரேலிய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் எதிரணி வீரர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். எதிரணி வீரர்களுடன் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.
ஐசிசி ஒழுங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, கிரிக்கெட்டின் மரியாதையை காக்கும் வகையில் வீரர்கள் செயல்படுவது அவசியம். ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான நடத்தையை ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
எதிரணிகளுக்கு போட்டியாக நமது வீரர்கள் களத்தில் சிறப்பாகச் செயல்படுவதை ஆஸ்திரேலியவாரியம் வரவேற்கிறது. அதில் மாற்றமில்லை. ஆனால், டர்பனில் நகரில் நடந்த சம்பவம் போல் இனிவரும் காலங்களில் நடக்காமல் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்திரேலிய வீரர்களில் பலர், குறிப்பாக வார்னர் டெஸ்ட் விளையாடும் 9 அணிகளுக்கும் எதிராக பெரும்பாலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அடுத்துவரும் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் சிறப்பாக நடப்பார்கள் என்று வாரியம் நம்புகிறது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT