Published : 24 Sep 2014 11:35 AM
Last Updated : 24 Sep 2014 11:35 AM
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆண்டின் கடைசி டென்னிஸ் போட்டியான உலக பைனல்ஸ் (டபிள்யூடிஏ பைனல்ஸ்) டென்னிஸ் போட்டியில் விளையாட 4-வது ஜோடியாக இந்தியாவின் சானியா மிர்ஸா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
இது தொடர்பாக டபிள்யூ.டி.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சானியா மிர்ஸா முதல்முறையாக பங்கேற்கவுள்ளார். அதேநேரத்தில் காரா பிளாக் 11-வது முறையாக விளையாடவுள்ளார். இதற்கு முன்னர் எலீனா லிகோவ்ட்சேவா, ரெனே ஸ்டப்ஸ், ஸீலெஸ் ஹியூபர் ஆகியோருடன் இணைந்து விளையாடியிருக்கிறார் காரா பிளாக்.
மொத்தம் 8 ஜோடிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இத்தாலியின் சாரா எர்ரானி-ராபர்ட்டா வின்ஸி, ரஷ்யாவின் எக்டெரினா மகரோவா-எலீனா வெஸ்னினா, நடப்பு சாம்பியனான சீனாவின் பெங் ஷுவாய்-ஷியே சூ வெய் ஆகிய ஜோடிகளுடன் சானியா-காரா ஜோடியும் தகுதி பெற்றுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சானியா, “உலக பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால் நானும், காராவும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறோம். உலகின் தலைசிறந்த போட்டியில் பங்கேற்க ஆர்வத்தோடு காத்திருக்கிறோம். நான் முதல்முறையாக பங்கேற்கவிருக்கிறேன்.
காரா தாயான பிறகு பங்கேற்கவுள்ள முதல் உலக பைனல்ஸ் போட்டி இது. இந்த ஆண்டு முழுவதும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. அதே போன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக பைனல்ஸ் போட்டியிலும் சிறப்பாக ஆடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT