Published : 25 Sep 2014 03:34 PM
Last Updated : 25 Sep 2014 03:34 PM
ஐதராபாத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சுனில் நரைன் மற்றும் சைனமன் (இடது கை லெக்ஸ்பின்) பவுலர் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சில் திணறி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இழந்த 7 விக்கெட்டுகளில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி கேப்டன் ஆடம் வோஜஸ் மட்டுமே நிதானத்தைக் கடைபிடித்து இரண்டு புதிர் ஸ்பின்னர்களிடத்திலும் சிங்கிள் எடுப்பதன் அவசியத்தை அறிந்திருந்தார். இதனால் அவர் 52 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
வோஜஸ், சிம்மன்ஸ் இணைந்து 9 ஓவர்களில் 68 என்ற நல்லத் தொடக்கத்தை கொடுத்தனர். 30 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்த சிம்மன்ஸ் விக்கெட்டை சைனமன் பவுலர் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். உத்தப்பா ஸ்டம்ப்டு செய்ய அவர் ஆட்டமிழந்தார்.
அதிரடி மன்னன் மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் எடுத்த நிலையில் உத்தப்பா ஸ்டம்ப்டு செய்ய குல்தீப் யாதவிடம் ஆட்டமிழந்தார்.
சுனில் நரைனின் கேரம் பந்துகளும் குல்தீப் யாதவ்வின் இடது கை கூக்ளியும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியினரை திணறடித்தது. வேறு வழியில்லாமல் அவர்கள் அர்த்தமற்று மட்டையை சுற்றத் தொடங்கி வீழ்ந்தனர்.
இவர்கள் இருவரால் 120/2 என்று இருந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நரைன் 9வது முறையாக இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் இது ஒரு சாதனை. கடைசியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 151/7 என்று முடிந்தது. தொடக்கத்தில் யூசுப் பத்தான் டைட்டாக வீசி 4 ஓவர்களில் 22 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் உத்தப்பா 23 ரன்கள் எடுக்க மற்றோர் தொடங்கி பிறகு வெளியேற 14.1 ஓவரில் 87/5 என்று ஆனது.
15வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 2 சிக்சர்களை அடித்தார் பிறகு மேலும் 2 சிக்சர்களை விளாசி 19 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வெற்றி பெறச் செய்தார்.
கம்பீர் (2) காலிஸ் (6) சொதப்ப பாண்டே 24 ரன்களையும், டென் டஸ்சாதே 15 ரன்களையும் எடுக்க யூசுப் பத்தான் 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்ததும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆட்ட நாயகனாக இடது கை சைனமன் பவுலர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT