Published : 03 Mar 2018 09:36 AM
Last Updated : 03 Mar 2018 09:36 AM
ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
கோவை நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணியின் கேப்டன் சூசைராஜ், முதல் கோலை அடித்தார். 25-வது நிமிடத்தில் பஞ்சாப் அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் வீரர் சென்சோ கியல்ட்சென் அடித்த கோலால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலை வகித்தது.
59-வது நிமிடத்தில் சென்னை வீரர் அலெக்ஸாண்டர் ராகிக் கோலை அடித்து அசத்தினார். இதனால் சென்னை அணி 2-1 என்ற முன்னிலையை பெற்றது. இரண்டாவது பாதியில் பஞ்சாப் அணியின் கோல் அடிக்கும் சில முயற்சிகளுக்கு சென்னை கோல் கீப்பர் முட்டுக்கட்டையாக இருந்தார். முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி அணி வெற்றி பெற்றது. சென்னை சிட்டி அணியின் கேப்டன் சூசைராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
அவருக்கு தமிழக ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினர். விழாவில், எம்எல்ஏ-க்கள் அருண்குமார், அம்மன் அர்ஜுனன், சென்னை சிட்டி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், இணை உரிமையாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் சென்னை அணி 18 ஆட்டங்களில், 4 வெற்றி, தலா 7 டிரா, தோல்விகளுடன் 19 புள்ளிகள் பெற்று தொடரை நிறைவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT