Published : 31 Mar 2018 02:39 PM
Last Updated : 31 Mar 2018 02:39 PM
பாகிஸ்தானில் உள்ள இரு 6 வயது சிறுவர்கள் தங்களின் பந்துவீச்சால் வாசிம் பாகிஸ்தானில் உள்ள 6 வயது சிறுவர்கள் இருவர் தங்களின் பந்துவீச்சால் வாசிம் அக்ரத்தையும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவையும் கவர்ந்துள்ளனர். இருவரின் பந்துவீச்சைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.
இந்த இரு சிறுவர்களின் பந்துவீச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரைச் சேர்ந்த சிறுவன் அலி மிகால் கான். இவருக்கு மற்றொரு பெயர் ‘ஜூனியர் ஷேன் வார்னே’. இந்த 6 வயது சிறுவன் ‘லெக் ஸ்பின்’ வீசும் அழகு அனைவரையும் ஈர்த்துவிடும். அந்த அளவுக்கு, மிகத் துல்லியமாக, லைன் அன்ட் லென்த்தில் பந்துவீசி, பந்தை நன்றாக ‘டர்ன்’ செய்கிறார்.
இவரின் வீடியோவைப் ட்விட்டரில் பார்த்த ஆஸ்திரேலிய ‘ஸ்பின் லெஜென்ட்’ ஷேன் வார்னே, புகழ்ந்துள்ளார்.
மற்றொரு 6-வயது சிறுவனின் பெயர் ஹசன் அக்தர். இவருக்கு பாகிஸ்தானின் ஊடகங்கள் வைத்துள்ள பெயர் ‘குட்டி வாசிம் அக்ரம்’. இவரின் பந்துவீச்சின் தோற்றம் அனைத்தும் வாசிம் அக்ரம் வீசுவது போன்று இருக்கும். இந்த வீடியோவைப் பார்த்த வாசிம் அக்ரம் அந்த சிறுவனைப் பாராட்டி அவருக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.
இந்த இரு சிறுவர்களின் பந்துவீச்சையும் பாகிஸ்தான் ஊடகங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றன.
‘ஜூனியர் ஷேன் வார்னே’ என அழைக்கப்படும் அலி மிகான் கான் கூறுகையில், ‘என்னுடைய கனவு பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதாகும். கிரிக்கெட்டை விரும்புகிறேன். சிறந்த லெக் ஸ்பின்னராக வருவதே எனது விருப்பமாகும்.
என்னுடைய பந்துவீச்சு வீடியோவைப் பார்த்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே ட்விட்டரில் புகழ்ந்தது எனக்கு கவுரமாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் அலியின் வீடியோப் பார்த்த ஷேன் வார்னே, ட்விட்டரில்,‘அலியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது. உன்னுடைய கைகளில் இருந்து வீசப்படும் பந்து மிகத்துல்லியமாக ஆடுகளத்தில் விழுகிறது. மிகச்சிறிய வயதில் சிறப்பாக பந்துவீசும் உனக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து பயிற்சி செய்தால், எதிர்காலத்தில் சிறந்த பந்துவீச்சாளராக மாறமுடியும்’ என பாராட்டி இருந்தார்.
ஷேன் வார்னேயின் ட்விட்டுக்கு பதில் அளித்து அலியின் தந்தையும் பதிவிட்டு இருந்தார்.
அதேபோல ‘குட்டி வாசிம் அக்ரம்’ எனச் சொல்லப்படும் ஹசனின் பந்துவீச்சைப் பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் அசந்துவிட்டார். ட்விட்டரிலேயே அந்த சிறுவன் எங்கி இருக்கிறான் என்று கேட்டுள்ளார். அதன்பின் 6 வயது ஹசனுடன், வாசிம் அக்ரமை சந்திக்க ஜியோ தொலைக்காட்சி ஏற்பாடு செய்தது.
இதையடுத்து லாகூர் நகரில் உள்ள மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை ஹசனை, வாசிம் அக்ரம் சந்தித்தார். அப்போது அந்த சிறுவனை பந்துவீசச் செய்து ரசித்த வாசிம் அக்ரம், அவனுக்கு பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். அந்த சிறுவனுடன் நீண்டநேரம் செலவு செய்து விளையாடியும், பேசியும் மகிழ்ந்தார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு பகிர்ந்தார். அதில்,’மிகச்சிறந்த சிறுவன், நம்பமுடியாத திறமை பொதிந்து கிடக்கிறது. ஹசனுடன் நான் நேரத்தை ரசித்து செலவு செய்தேன்’ எனத் தெரிவித்தார்
இதற்கிடையே ஹசனின் தந்தை முகமது கூறுகையில், ‘ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எங்களுடைய வீடுகூட களிமண்ணால் கட்டப்பட்டதுதான். ஆனால், தினமும் பந்துவீசுகிறேன் எனக் கூறி ஹசன் தரையை பெயர்த்துவிடுவான். வாசிம் அக்ரம் எனது மகனுடன் அன்புடன் பேசி, பழகினார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷெல் ஸ்டார்க், முகமது ஆமிர் ஆகியோரும் எது மகனைச் சந்தித்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT