Last Updated : 02 Mar, 2018 09:07 AM

 

Published : 02 Mar 2018 09:07 AM
Last Updated : 02 Mar 2018 09:07 AM

போரின் ஊடே வளர்ந்த ரேங்கோ போபோவிக்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் புனே சிட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக செர்பியா நாட்டைச் சேர்ந்த ரேங்கோ போபோவிக் பணியாற்றி வருகிறார். அவர், தனது இளமை காலத்தில் யுகோஸ்லோவியாவில் நடைபெற்ற போரால் கால்பந்து வாழ்க்கையை ஏறக்குறைய கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். போர் காரணமாக அவரது குடும்பம் சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இவை அனைத்தில் இருந்தும் மீண்டு சிறந்த கால்பந்து வீரராகவும் தற்போது இந்தியாவில் நமது வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் வெறும் பயிற்சியை மட்டும் அளிக்காமல், வாழ்க்கையை எப்படி அணுகவேண்டும், கடினமான சூழ்நிலைகளிலும் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என பயனுள்ள பல்வேறு விஷயங்களை தனது அனுபவத்தின் வாயிலாக எடுத்துரைக்கவும் செய்கிறார். இதுதொடர்பாக அவர் பல்வேறு விஷயங்களை ஸ்போர்ட்ஸ்டார் இதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் சுருக்கம்:

இந்தியன் சூப்பர் லீக் முன்னேற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

மாற்றங்கள் தெளிவாக உள்ளது. தற்போதைய சீசன் வீடியோக்களையும், முதல் சீசன் வீடியோக்களையும் ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியும். முதல் சீசன் போட்டியானது பாப் ஸ்டார்ஸ் போன்று தோற்றமளித்தது.

இந்திய வீரர்கள் திறமையானவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ்எல் வலுவான தளமாக உள்ளது.

இந்திய கால்பந்துக்கு சாதகமான விஷயம் என்னவென்றால் முன்னேற்றம் காண்பதற்கு பெரிய அளவிலான இடம் உள்ளது. அதற்கு பயிற்சியாளர்கள் வழிகாட்ட வேண்டும். நாங்கள் இங்கே பயிற்சியாளராக மட்டும் எங்கள் வேலையை செய்யக்கூடாது. அதையும் கடந்து அதிகம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நாம் சரியான பாதையை அவர்களுக்கு காட்ட வேண்டும். சிலவற்றை நாம் வழங்கும் போது, அதை அவர்கள் வருங்காலங்களில் பயன்டுத்திக் கொள்வார்கள். இதை சாதிப்பது கடினம் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த வீரர்கள் பசியுடன் இருக்கிறார்கள்.

இந்தியா பெரிய நாடு, இங்கு பல்வேறு மொழிகள் உள்ளது. இது அணியை பாதிக்கும் என நினைக்கிறீர்களா?

மைதானத்தில் எத்தனை பந்துகள் உள்ளது? ஒன்று தானே. கால்பந்து மைதானத்தை பொறுத்தவரை ஒரே ஒரு மொழி தான். அது ‘கால்பந்து மொழி‘ மட்டுமே. இது தனிப்பட்ட மொழி. எந்த வார்த்தைகளும் இல்லாமல் உங்களால் சக அணி வீரர்களை புரிந்து கொள்ள முடியும். இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. உங்களது வெளிப்பாடுகள்தான் மைதானத்தில் உங்களது மொழி.

நீங்கள் வளரும் காலக்கட்டத்தில் என்ன வசதிகள் இருந்தது?

வளரும் காலக்கட்டங்களில் எங்களுக்கு விளையாடுவதற்கு கால்பந்து மைதானம் கிடையாது. புற்கள் பரப்பை எங்கு பார்த்தாலும் அங்கு விளையாடுவோம். இரண்டு பெரிய கற்கள் அல்லது பள்ளி பைகளைத் தான் கோல் கம்பமாக பயன்படுத்துவோம். அது நல்ல களமாக இருந்தது இல்லை, செயற்கை இழைகளால் ஆன களமும் கிடையாது. எந்தவிதமான புற்களும் இருக்காது. மேற்பரப்பு மிகவும் சீரற்ற முறையில் இருக்கும். ஆனால் யாரும் காயம் அடைந்தது கிடையாது.

இந்த அனுபவம்தான் கால்பந்து வாழ்க்கையில் நான் ஒருபோதும் காயம் அடையாமல் இருக்க உதவியது. ஏனெனில் எல்லாவிதமான ஆடுகளங்களிலும் நான் விளையாடியிருந்தேன். நாங்கள் பெரிய அளவிலான வசதியை கொண்டிருக்க வேண்டியதில்லை. எனினும் இருந்ததை வைத்து விளையாடினோம். எதையாவது அடைய வேண்டும் என்று நீங்கள் ஆசை மற்றும் ஆர்வம் கொண்டிருந்தால், அதை எதுவாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையே இது காட்டுகிறது.

வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட ஒருநாட்டில் வளர்வது எந்த வகையில் கடினமாக இருந்தது?

நான் யுகோஸ்லாவியாவில் பிறந்தேன். எனது குழந்தைப்பருவம் முழுவதையும் அங்கேயேதான் கழித்தேன். எனது குழந்தை பருவத்தில் அங்கு மோதல்கள் இல்லை. இப்போது தேர்வு செய்ய முடிந்தால் அதே குழந்தைப் பருவத்தை தேர்வு செய்வேன். போர் போன்ற ஒன்று நடைபெறும் என்று யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது. பல இன குழுக்கள், மதங்கள் இருந்தது. ஆனால் யாரும் யாரையும் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என கேட்டது கிடையாது.

நீங்கள் நல்ல மனிதராக இருந்தால் மக்கள் அக்கறை கொள்வார்கள். யாருமே உங்களுடைய நிறம் அல்லது மதம் குறித்து அக்கறை கொள்ளமாட்டார்கள். நான் 25 வயதில் இருந்த போதுதான் மோதல்கள் தொடங்கின. அப்போது நான் அங்கு இல்லை, ஆஸ்திரியாவில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் எனது குடும்பம் அங்கு வசித்தது. எல்லோருக்கும் கொடூரமான தருணங்கள் அமைந்தன. அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என நம்புகிறேன்.

போருக்காக பயன்படுத்தப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தியிருந்தால் நாங்களும் உலகில் வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாக இருந்திருப்போம் என்பதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

மோதலால் ஏதேனும் உங்களுக்குள் தாக்கம் ஏற்பட்டதா?

இது என்னை வலுப்படுத்தியது. எனது குடும்பம் உயிருடன் இருக்கிறதா என்பது தெரியாத நிலையில் எனது வாழ்க்கையில் சிறந்த கால்பந்தை விளையாடினேன். நேட்டோ படை யுகோஸ்லோவியாவில் குண்டுகள் வீசிய போது எனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேசமுடியவில்லை. ஏதோ கிளர்ச்சியாளர் போன்று இருப்பதாக எனக்கு தோன்றியது. இதுதான் நாங்கள் (செர்பியர்கள்) வலுவாகவும், சக்தியுடன் இருப்பதை காட்டியது.

எதிர்மறையான எண்ணங்கள், விரக்தியில் இருந்து விடுபடவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் கால்பந்து எனக்கு சிறந்த தளமாக இருந்தது. நான் மைதானத்தில் இருக்கும் போது செர்பியாவின் உண்மையான குணங்களை காட்ட முடிந்தது. நாங்கள் வலுவாக உள்ளோம், எங்களை உங்களால் தோற்கடிக்க முடியாது என்பதை காட்ட விரும்பினேன். துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு நேட்டோ படைக்கு எதிராக சண்டையிடும் சூழ்நிலையில் நான் இல்லை. கால்பந்துதான் என்னுடைய சண்டை.

யுத்தத்தைஎதிர்த்துபோராடஉங்கள்நாட்டிற்குதிரும்பிச்செல்லநீங்கள்எப்போதாவதுநினைத்தீர்களா?

எனது குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது கால்பந்து வாழ்க்கையை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிடலாமா என ஆலோசனை செய்தேன். அவர்கள் வெளியேறவில்லையென்றால் அங்கு செல்லலாம் என முடிவு செய்தேன். நிலைமை மோசமாக இருந்தால், நான் திரும்பி வருவேன், என்று என் குடும்பத்தினரிடம் சொன்னேன். அதை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டனர். இதனால் எங்களது குடும்பத்தினர், வீட்டை விட்டு வெளியேறினார்கள். அப்போது அவர்கள் எனது தாத்தா, அப்பாவின் புகைப்படங்களை கூட கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் எங்களை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டார்கள் என நினைத்தோம். எப்படியும் வீட்டுக்கு திரும்பிவிடுவோம் என்றும் நினைத்தார்கள். இது, என் வாழ்வின் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றாகும்.

அந்தநேரத்தில்ஸ்டூம்கிராஸ்அணியில்உங்கள்மனநிலைஎன்ன?

சுவராசியமாக இருந்தது. யூகோஸ்லோவியாவை சேர்ந்த 4 பேர் அணியில் இருந்தோம். என்னைத் தவிர இருவர் குரோஷியர்கள், ஒருவர் சுலோவேனியர். இவர்கள் 3 பேரும் எனது நண்பர்களாக இருந்தனர். நாங்கள் வெவ்வேறு தேசங்களில் இருந்தும், மதங்களில் இருந்தும் வந்திருந்தோம். ஆனால் இக்கட்டான தருணங்களில் அவர்கள் என்னுடன் இருந்தார்கள். நாங்கள் ஒன்றாக வாழ்ந்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம்.

ஆனால் எங்களை போன்ற மக்கள் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு மடிந்தார்கள். நான் இளைஞனாக இருந்த போது நாட்டுக்காக உயிரை கொடுப்பதுதான் பெரிய பணி என்று நினைத்தேன். ஆனால் தற்போது நாட்டுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். இது மற்றவர்களைவிட அற்புதமான பணி.

ஆமாம் நீங்கள் சென்று இறந்துவிடலாம். ஆனால் நீங்கள் அடைந்தது என்ன? நீங்கள் உயிருடன் இருந்தால்தான் போராட முடியும், அதிகம் செய்ய முடியும். சண்டை என்றால் அனைவரும் கையில் ஆயுதத்தை எடுப்பது என நான் பொருள் கொள்ளவில்லை. நான் அதற்கு எதிரானவன். ஒராண்டுக்கு போரை நடத்துவதைவிட 1000 ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது என்றே நினைக்கிறேன்.

கொந்தளிப்பான நேரங்களில் என்ன நடந்தது?

எனது குடும்பம்தான் எனது வாழ்க்கையின் உந்துதல். எனக்கு 15 வயது இருக்கும் போது எனது தந்தை இறந்துவிட்டார். மூத்த மகனான நான்தான் குடும்பத்தை கவனிக்க வேண்டியது இருந்தது. எனது தாய், சகோதரர்களை கவனித்துக்கொள்ள பணம் சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கை உங்களை கீழே தள்ளும்போது, நீங்கள் எழுந்து நிற்க வேண்டும். என் தந்தை இல்லாமல் வாழ்க்கையை நான் கற்றுக்கொள்ள வேண்டும். கடினமான வழியிலேயே அதை கற்றேன். என்னை சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதை பார்த்தேன். அதில் இருந்து என்னை வடிவமைத்துக் கொண்டேன்.

போரினால்பாதிக்கப்பட்டபகுதியில்இருந்துபலபுகழ்பெற்றவிளையாட்டுவீரர்களான நெமான்ஜா விடிக், டென்னிஸ்சூப்பர் ஸ்டார்ஸ்நோவக்ஜோகோவிக்,அனாஇவனோவிக் போன்றவர்கள்உருவாகி உள்ளனர். அவர்கள்எங்கிருந்து உருவாகி உள்ளார்கள்என்றுநீங்கள்நினைக்கிறீர்கள்?

நான் அனா இவானோவிக் பற்றி உங்களுக்கு சொல்கிறேன், அவரை பற்றி கூறும்போது உங்கள் மனதில் வரும் முதல் சிந்தனை என்ன? அவருடைய பெரிய புன்னகை. அவர் எப்பொழுதும் ஒரு பெரிய புன்னகையுடன் விளையாடுவார். அவரது புன்னகையின் பின்னால் உள்ள கதைகளை உங்களால் நம்ப முடியுமா? அந்த புன்னகை சின்னமாக இருக்கிறது, அவர் எங்கிருந்து வருகிறார் என்பதை அது பிரதிபலிக்கிறது. இதுதான் அவர்கள் யார் என்பதை உருவாக்குகிறது.

நேட்டோ படையின் குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இவானோவிச், கைவிடப்பட்ட நீச்சல் குளத்தை அதிகாலையிலேயே பயிற்சிக்காக பயன்படுத்துவாராம்? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

நேட்டோ அமைப்பு உலகில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாகும். அதற்கு எதிராக கிளர்ச்சி செய்வது உங்களை வலுவானதாக்குகிறது. “உங்களது குண்டுகளால் என்னை கொல்ல முடியாது, எனது விளையாட்டு உணர்வையும் உங்களால் அழிக்க முடியாது” என்பதே அனா இவானோவிச்சின் வழி.

இதுபோன்ற விஷயங்கள் தான் எங்களுக்கு வலுவானவை. நேட்டோ எங்களை வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருக்கச் செய்தது. ஜோகோவிச், அனா இவானோவிச், விடிக் ஆகியோர் இன்று தான் பெரிய நட்சத்திரங்களாக உள்ளனர். ஆனால் இந்த நிலையை எட்டமுடியாத பலர் இருக்கிறார்கள். அவர்களும் ஹீரோக்கள் தான். அவர்கள் மற்றவர்களுக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்குகிறார்கள்.

செர்பியாவில் உள்ள மக்களிடம் நான் ஒன்று கூறுவேன், பள்ளிகளில் அரசியல்வாதிகளின் புகைப்படங்களை வைக்காதீர்கள், மாறாக ஜோகோவிக் போன்றவர்களின் படங்களை வையுங்கள் என்று. அரசியலைவிட விளையாட்டு மிகவும் முக்கியம் என்றே நான் கருதுகிறேன். ஜோகோவிக் ஒரு சிறந்த உதாரணம். அனைவரும் 'நான் அவரைப் போல இருக்க விரும்புகிறேன்' என்று சொல்ல வேண்டும்.

வெறும் 8 மில்லியன்மக்கள் தொகையை கொண்ட,செர்பியாவிலிருந்துபலசிறந்தவிளையாட்டுவீரர்கள்உருவாகி உள்ளனர். இந்தியாவும் அதனைஅடைய முடியும் என நினைக்கிறீர்களா?

இந்தியாவில் ஏன் இது சாத்தியமாகாது? வீரர்களை பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள தொடங்க வேண்டும். அவர்கள் ஒரு கோலை அடித்து விட்டு திருப்தி அடைந்துவிட மாட்டார்கள், ஒரு கோல் அடிக்க உதவ வேண்டும் அல்லது ஒரு ஒப்பந்த்தில் கையெழுத்திட வேண்டும். அதுதான் ஆரம்பம். ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடைவது எளிதானதுதான், ஆனால் அங்கேயே விட்டுவிட்டால் அது கோழைத்தனமானது. இதுதான் நீங்கள் போராடத் தொடங்க வேண்டிய நேரம், உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

அரசியல் மோதல்களில் இருந்து வெளியேற விளையாட்டு உதவுமா?

நிச்சயமாக, விளையாட்டு மதம், நிறத்தை பற்றி கவலை கொள்வதில்லை. அது மக்களை ஒருங்கிணைக்கிறது. விளையாட்டு மட்டும் அல்ல, கல்வியும் வலுவான ஆயுதம்தான். பள்ளியில் உடற்கல்வி வகுப்பில் உங்களுக்கு எடுக்கவும் கொடுக்கவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பந்து உங்களிடம் இருக்கும் போது கொடுக்கவேண்டும், இல்லாத போது கேட்டுப்பெற வேண்டும். இது வாழ்க்கையை விளக்குவதற்கு எளிமையான மற்றும் மிகவும் பழமையான வழி, ஆனால் இது சிறந்த வழி.

பயங்கரவாதத்தைஎதிர்த்துப்போராடுவதற்குஒருசாதனமாகவிளையாட்டை பயன்படுத்தலாம்எனநீங்கள்கணக்கிடுகிறீர்களா?

வன்முறை எப்போதும் ஆக்ரோஷமானது, அதிக கவனத்தை பெறுகிறது. சிறந்த உதாரணம் இந்தியாவிலேயே உள்ளது. ஒவ்வொரு மனிதனும் போராட்டத்தின் வாயிலாக எதிர்ப்பை காட்டலாம். ஆனால், வன்முறையின் வழியாக அல்ல என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

தவறான செயல்களுக்கு எதிராக நாம் பேசவேண்டும், ஆனால் வன்முறை இல்லாமல். விளையாட்டு அதை செய்கின்ற வழிகளில் ஒன்றாகும். விளையாட்டு தனிச்சிறப்புடன் உள்ளது. இது சரியான தகவலை அனுப்புவதற்கு எளிதான சிறந்த வழி. இதை செய்ய நாம் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். உலகத்தை சிறந்த இடமாக ஆக்குவதற்கான அதிகாரம் விளையாட்டிடம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x