Published : 24 Mar 2018 08:33 AM
Last Updated : 24 Mar 2018 08:33 AM

வினை விதைத்தவன் வினையறுப்பான் வாசகத்துக்கு உதாரணமான ஆஸி. வீரர்கள், டேரன் லீ மேன்

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா தொடர் கிரிக்கெட் ஆட்டத்தின் ஆகச் சிறந்த ‘அசிங்கமான’ தொடர் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

காரணம் ஆஸ்திரேலியாவின் அராஜகமான ஸ்லெட்ஜிங் மனநிலைதான், அதற்கு பல்வேறு விதங்களில் பதிலடி கிடைக்கும் போது அவர்கள் ஆவேசமடைவதை நாம் இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம்.

இரு அணிகளுக்கும் இடையிலான பகைமை எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு புகார் கடிதம் எழுதும் அளவுக்குச் சென்றுவிட்டது.

வார்னர்-டி காக் சம்பவம், ஸ்மித்-ரபாடா சம்பவம், ரபாடா தடை நீக்கம் பற்றி ஸ்மித் தத்துப்பித்தென்று அளித்த பேட்டி ஆகியவை பொதுவெளியில் விவாதப்பொருளாக தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று கிளம்பிவிட்டனர். விவகாரம் மைதானத்துக்கு வெளியேயும் உணர்ச்சிகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது.

வார்னரின் மனைவிக்கும் ரக்பி வீர்ர் சோனி பில் வில்லியம்ஸுக்கும் இருந்த ஓர் உறவைக் கேலி செய்து முகமூடி அணிந்து வந்த ரசிகர்களுக்கு எழுந்த பொது ஆதரவிலிருந்தே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிரான ஒரு மனநிலை உருவாகிவிட்டது தெரிந்தது.

இத்தகைய போக்கு கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் 3வது டெஸ்ட் போட்டியில் எல்லைக்கோட்டருகே நிற்கும் ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்பங்களை இழுத்து அவதூறாகப் பேசுவதும், அவுட் ஆகிச் சென்ற டேவிட் வார்னரை இப்படித்தான் ரசிகர் ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்குவதும் நடந்துள்ளது. வார்னருக்கும் ரசிகருக்கும் இடையே நடந்த சூடான வாக்குவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இத்தகைய அசிங்கமான நடத்தைகளை பயிற்சியாளராக ஊக்குவித்த டேரன் லீ மேன், வடிவேலு நகைச்சுவை பாணியில் அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, தனக்கு வந்தால் ரத்தம் என்பது போல் பேசியுள்ளார்:

“உலகம் முழுதும் எங்கும் இதனை ஏற்கிறோம். ஆனால் எல்லை கடந்து வீர்ர்களின் குடும்பங்களை இழுத்து அவதூறு பேசுவது, எல்லை மீறி குடும்பத்தினரை வசைபாடுவதை ஏற்க முடியாது. டெஸ்ட் முழுதும் இப்படிப்பட்ட வசைகள் நடந்து வருகின்றன. டெஸ்ட் தொடர் முழுதுமே இத்தகைய போக்கு இருந்து வருகிறது.

இது கீழ்த்தரமானது என்று கருதுகிறேன். வீரர்கள் குடும்பங்களைப் பற்றி அசிங்கமாக பேசுவது என்பது நடந்து கொண்டிருக்கிறது, கிரிக்கெட் மைதானத்தில் இது நல்லதல்ல. உலகில் வேறு எங்கும் இப்படி நடப்பதில்லை. இங்கு மட்டுமல்ல எங்குமே இப்படி நடக்கக் கூடாது.

நாங்கள் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதியுள்ளோம். நாங்கள் அவர்களிடமிருந்து வரும் பதிலையும் பார்ப்போம். வசைகள் தனிப்பட்ட தாக்குதலாக உள்ளது, படுமோசமாக உள்ளது, வார்னர் மட்டுமல்ல பலவீரர்களுக்கும் இது இந்தத் தொடரில் நடந்து வருகிறது. இரு தரமான அணிகள் மோதும் சர்வதேச போட்டியில் வந்து ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. மைதானத்தில் மட்டுமல்ல வெளியிலும் வசை தொடர்கிறது என்பதுதான் நடந்து வருகிறது. இது மிகவும் கீழ்த்தரமானது” என்றார்.

300 விக்கெட்டுகளை வீழ்த்திய மோர்னி மோர்கெல் கூறும்போது, ஆஸ்திரேலிய மைதானங்களிலும் இத்தகைய போக்கு உண்டு, நான் இத்தகைய வசைகளை எதிர்கொண்டிருக்கிறேன், நாம் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. குடிபோதை, கடும் வெயில் எனவே இதனை நாங்களும் எதிர்பார்த்தோம். நான் மெல்போர்னில் ஆடும்போது இதே போன்ற வசையை நானும் எதிர்கொண்டேன், என்றார்.

டேரன் லீ மேன் ஆஸ்திரேலிய ரசிகர்களும் இப்படி உள்ளதைச் சுட்டிக்காட்டி கண்டித்திருந்தால் அவரது நோக்கத்தின் நன்மையை நாம் பாராட்டலாம், ஆனால் தென் ஆப்பிரிக்க ரசிகர்களை மட்டும் சாடுவது சரியல்ல.

ஆஸ்திரேலிய ரசிகர்களின் சில ‘நிறவெறி’ சம்பவங்கள்:

ஆஸி. வீர்ர்களின் நடத்தையினால் தூண்டப்பட்டு எதிரணி வீரர்களை ரசிகர்கள் நிறவெறி வசைபாடுவது என்பதற்கு ஆஸி. கிரிக்கெட்டில் நீண்ட நெடும் வரலாறு உள்ளது. இதற்கு தனிக்கட்டுரைத் தேவைப்படும்.

தென் ஆப்பிரிக்காவின் உயரமான ஆஃப் ஸ்பின் பவுலர் பேட் சிம்காக்ஸ் மீது ஒரு முறை 1997-ம் ஆண்டு சிட்னி ஒருநாள் போட்டி ஒன்றில் சிக்கன் மாமிசத்தை ரசிகர் ஒருவர் விட்டெறிந்தார்.

சமீபத்திய தொடர்களில் ஹஷீம் ஆம்லா உட்பட பலவீரர்கள் மீது நிறவெறி வசைகள் ஆஸ்திரேலிய மைதானங்களில் தொடர்ந்ததும் சர்ச்சையானது. 2005-06-ல் வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே நெல், மகாயா நிடினி, ஆஷ்வெல் பிரின்ஸ், ஷான் போலக், ஆகியோர் மீது நிறவெறி வசையை ரசிகர்கள் ஏவினர்.

ஹர்பஜன் சிங்கை இப்படியாக வம்பிழுத்து விட்டு ஹர்பஜன் ஏதோ நிறவெறி வசை செய்தார் என்று கட்டமைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த முயற்சியினால் மைதானத்தில் ஹர்பஜன் சிங் மீதான கேலி வலுத்ததையும் பார்த்திருக்கிறோம்.

ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறிப்பாக பாகிஸ்தானின் இன்ஸமாம் உல் ஹக், மொகமது யூசுப் உள்ளிட்டோரை கடுமையாக நிறவெறி வசை பாடியதும் நிகழ்ந்துள்ளது.

எனவே மைதானத்தில் வீரர்களின் நடத்தையை டேரன் லீ மேன் போன்ற பயிற்சியாளரும் கேப்டன்களும் கட்டுப்படுத்தினால் ரசிகர்களும் ஆவேசமடைய மாட்டார்கள், ஆனால் வீரர்களைத் தூண்டி விட்டு எதிரணி வீரர்களை மட்ட்டம்தட்டுவது என்று செய்யும் போது அவரவர்களுக்கு அவரவர் நாட்டு வீரர்கள் ஹீரோக்கள்தான், எனவே பதிலடி கிடைக்கவே செய்யும். வினைவிதைப்பவன் வினையறுப்பான் என்ற நம் பழமொழி அதன் வார்த்தைகளைத் தாண்டிய ஆழமான அர்த்தங்களைக் கொண்டது. டேரன் லீ மேன் மட்டுமல்ல அனைத்துப் பயிற்சியாளர்கள் அனைத்து கேப்டன்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x