Published : 14 Mar 2018 04:04 PM
Last Updated : 14 Mar 2018 04:04 PM
கிரிக்கெட் ஆட்டத்தில் பணிச்சுமை குறித்து பல நாட்டு வீரர்களும் தங்கள் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியும் பணிச்சுமை கொஞ்சம் அவரது உடலையும் பதம்பார்த்து வருகிறது, எனவே எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
மும்பையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் கூறும்போது, “உடல் ரீதியாக கொஞ்சம் காயங்கள் இருந்தன. அதனை தற்போது கடந்து வந்திருக்கிறேன். பணிச்சுமை என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போகாமல் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறது. என் உடல், என் மனம், என் கிரிக்கெட் ஆகியவை குறித்து நான் இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதில் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியுள்ளது.
எனவே ஓய்வு என்பது மிக மிக முக்கியம். கிரிக்கெட்டையோ எதையோ இழந்து விட்டதாக துளியும் நான் நினைக்கவில்லை, இந்த ஒய்வை முழுதும் மகிழ்வுடன் கழித்து வருகிறேன், காரணம் என் உடலுக்கு இந்த ஓய்வு தேவைப்படுகிறது” என்றார்.
பணிச்சுமை குறித்து கோலி இப்போது கூறவில்லை. இலங்கைக்கு எதிரான கடந்த உள்நாட்டுத் தொடரின் போது அவர் இது குறித்து சற்று உரக்கவே பேசினார்.
அப்போது, “ஏன் எனக்கு ஓய்வு கூடாது? எனக்கு நிச்சயம் ஓய்வு தேவை. என் உடல் அதற்குக் கேட்கும் போது நான் ஓய்வு எடுத்துக் கொள்வேன். நான் ரோபோ அல்ல, என்னுடைய தோலை கீறினாலும் ரத்தம் வரும்” என்று சற்றே காட்டமாகக் கேட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் ஏப்ரல், மே-யில் நடைபெறுகிறது, பிறகு ஆப்கானுடன் ஒரு டெஸ்ட் போட்டி, பிறகு இங்கிலாந்தில் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் பிறகு ஜூலையின் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கடினமான தொடர் காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT