Published : 26 Mar 2018 03:36 PM
Last Updated : 26 Mar 2018 03:36 PM
ஆக்லாந்தில் நடைபெற்ற, பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தை ட்ரா நோக்கிச் செலுத்திய ஸ்டோக்ஸ், வோக்ஸ் இருவரையும் பவுன்சரில் காலி செய்தார் நீல் வாக்னர், 4ம் நாள் நன்றாக ஆடி வந்த மார்க் ஸ்டோன்மேனையும் பயங்கர பவுன்சரில் வீழ்த்தினார் வாக்னர். இவரது பவுன்சர்கள் விக்கெட்டாக மாறிய தருணங்கள அனைத்துமே மிக மிக முக்கியமானவை, இங்கிலாந்து அணி நன்றாக ஆடியக் காலக்கட்டமாகும், ஸ்டோன்மேனும் ஜோ ரூட்டும் (51) இணைந்து 6/1-லிருந்து 94/1 என்று கொண்டு சென்றபோதுதான் வாக்னரின் பவுன்சரில் அரைசதம் எடுத்து அருமையாக ஆடிய ஸ்டோன்மேன் வீழ்ந்தார்
5ம் நாளான இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் என்று தொடங்கிய இங்கிலாந்து அணி 127வது ஓவரில் 320 ரன்களுக்குச் சுருண்டது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து போல்ட், சவுதி ஸ்விங்குக்கு 58 ரன்களுக்கு பரிதாபமாக மடிய நியூஸிலாந்து அணி கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் சதங்களுடன் 427/8 என்று டிக்ளேர் செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 102 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் 10-வது முறை நியூஸிலாந்து இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் டாட் ஆஸ்டில் 3 விக்கெட்டுகளையும் போல்ட் மீண்டும் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக டிரெண்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.
டேவிட் மலானை, சவுதி எட்ஜ் செய்ய வைத்தார், தள்ளிச் சென்ற பந்து ஆடத்தூண்டப்பட்டார் விளிம்பில் பட்டு 2வது ஸ்லிப்பில் லேதமிடம் கேட்ச் ஆக 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அபாய வீரர் ஜானி பேர்ஸ்டோ இறங்கியவுடனேயே 0-வில் லெக் திசை கேட்சை விக்கெட் கீப்பர் வாட்லிங் விட்டார். இவர் மீண்டும் 21 ரன்களில் இருந்த போது மோசமான டாட் ஆஸ்ட்ல் பந்தை மோசமாக பேர்ஸ்டோ ஆடி மிட் ஆனில் கேட்ச் கொடுக்க அதனை மோசமாக போல்ட் கோட்டை விட்டார். மிக எளிதான கேட்ச் தரைதட்டியது. ஆனால் டாட் ஆஸ்ட்ல் வீசிய இன்னொரு ‘எங்கு வேண்டுமானாலும்’ அடிக்கலாம் என்ற ரகப் பந்தை மிட் விக்கெட்டில் பேர்ஸ்டோ அடிக்க இம்முறை கேப்டன் கேன் வில்லியம்சன் தலைக்கு மேல் அபாரமாகப் பிடித்தார், 26 ரன்களில் பேர்ஸ்டோவின் மோசமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
பென் ஸ்டோக்ஸ் வழக்கத்துக்கு விரோதமாக தன் 66 ரன்களுக்கு 188 பந்துகள் ஆடி ட்ராவுக்கு முயற்சி செய்தார். மொயின் அலி மாறாக ஷாட்களை ஆடினார் 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் பந்து ஒன்று இன்ஸ்விங் ஆகி மிடில் அண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வர வாங்கினார். பலத்த முறையீடுக்கு நாட் அவுட் பதிலாக வர வில்லியம்சன் தைரியமாக ரிவியூ செய்தார். பேட்தானோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்ததால் மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் வில்லியம்சன் ஆர்வம் காட்டினார், அவரது நம்பிக்கை வீண் போகவில்லை முதலில் கால்காப்பில்தான் பட்டது, அவுட்.
217/6 என்ற நிலையில் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் (52) இணைந்து சுமார் 31 ஓவர்கள் விக்கெட்டைக் கொடுக்காமல் நியூஸிலாந்தை வெறுப்பேற்றியதோடு ஸ்கோரை 300 ரன்களுக்கு உயர்த்தினர். மேலும் ரன் இடைவெளியை 152-லிருந்து ரன்களிலிருந்து 69-ஆக குறைத்தனர்.
நீல் வாக்னர் அதுவரை மிகமிக அருமையாக ஷார்ட் பிட்ச், பவுன்சர் பந்துகளை திறம்பட வீசி வந்தார், ஆனால் பலன் கிட்டவில்லை. தன் முதல் விக்கெட்டாக வாக்னர் ஸ்டோன்மேனை (55) வீழ்த்தியபோது மிகப்பெரிய பவுன்சரில்தான் இதனைச் சாதித்தார், தொண்டை வரை எழும்பிய பவுன்சரில் ஸ்டோன்மேன் கேட்ச் ஆனார்.
இம்முறை ட்ரா செய்து விடலாம் என்று ஆடிய ஸ்டோக்ஸ் (66) விக்கெட்டையும் பவுன்சரில் வீழ்த்தினார் வாக்னர். இடைவேளைக்கு இன்னும் 3 பந்துகளே உள்ள நிலையில் வாக்னர் பவுன்சரை பாயிண்டில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை 26 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகாமல் காப்பாற்றிய ஓவர்டன் 3 ரன்களில் ஆஸ்ட்ல் பந்தில் எல்.பி.ஆனார். கிறிஸ் வோக்ஸ் 118 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்திருந்த போது விளையாடவே முடியாத பவுன்சரை வீசினார் வாக்னர். வோக்ஸ் முகத்தை நோக்கிச் சென்ற பவுன்சர் அது. கால்கள் இரண்டும் தரையிலிருந்து எழும்ப தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மட்டையை கொண்டு செல்ல நேரிட்டது. கிளவ்வில் பட்டு ஷார்ட் லெக்கில் எளிதான கேட்ச் ஆனது. உண்மையில் வாக்னர் வீசிய 3 பவுன்சர்களில் ஸ்டோன்மேன், ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆகியோர் முக்கியத் தருணங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
5 ஆண்டுகளுக்கு முன்னர்...
5 ஆண்டுகளுக்கு முன்னர் இரு அணிகளும் இதே மார்ச் 26-ம் தேதி ஈடன் பார்க் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டியும் இப்படிப்பட்ட ஒரு பரபரப்பு டெஸ்ட் போட்டியாக அமைந்தது அப்போது இங்கிலாந்து ட்ரா செய்தது, ஆனால் இப்போது பென் ஸ்டோக்ஸ் விக்கெட் அந்த வாய்ப்பை முறியடித்தது.
மேலும், அப்போது தேநீர் இடைவேளைக்கு முன் வீசப்பட்ட கடைசி ஓவரில் இயன் பெல் ஆட்டமிழந்தார். கடைசி 2 மணி நேர ஆட்டத்தின் போது 7 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. இன்றும் பென்ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும் போது 300/7, இடைவேளைக்கு முன்னர் ஆட்டமிழந்தது நடந்துள்ளது.
ஆனால் அன்று விக்கெட் கீப்பர் மேட் பிரையர் நிற்க 1 விக்கெட்டை நியூஸிலாந்தால் வீழ்த்த முடியாமல் டிரா ஆனது, ஆனால் இன்று நீல் வாக்னரின் தீர்மானகரமான பவுன்சர்கள் இங்கிலாந்துக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை.
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச்சில் நடக்கிறது, நியூஸிலாந்து இந்தத் தொடரை இழக்க வாய்ப்பில்லை, ஆனால் இங்கிலாந்துக்கு ட்ரா செய்ய வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT