Published : 07 Sep 2014 01:12 PM
Last Updated : 07 Sep 2014 01:12 PM

தெலங்கானாவுக்கும் இந்தியாவுக்கும் சமர்ப்பணம்: சானியா

யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 6-1, 2-6, 11-9 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ்-மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸாலெஸ் ஜோடியைத் தோற்கடித்தது. முதல்முறையாக அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றிருக்கும் சானியாவுக்கு ஒட்டுமொத்தத்தில் இது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய புருனோ சோயர்ஸ், “எங்களுக்கு ஆதரவு அளித்த இந்திய மற்றும் பிரேசில் ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய சானியா, இந்த சாம்பியன் பட்டத்தை தெலங்கானா மாநிலத்துக்கும், இந்தியாவுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றார்.

சில நாட்களுக்கு முன்னர் தெலங்கானா மாநிலத்தின் தூதுவராக சானியா நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் மருமகளை தூதுவராக நியமிப்பதா என சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கும் அவர் மேலும் கூறியது: பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. புருனோவுடன் இணைந்து சாம்பியன் ஆனது சிறப்பானது. முதல்முறையாக நாங்கள் இருவரும் இணைந்து விளையாடினோம். கடந்த இரு வாரங்களுமே எங்களுக்கு சிறப்பாக அமைந்தது.

இந்த வெற்றியை எனது தாய்நாடான இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கிறேன். இதேபோல் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். அமெரிக்க ஓபனில் பட்டம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவு நனவாகி யிருக்கிறது. இதேபோல் மேலும் பல பட்டங்கள் வெல்வேன் என நம்புகிறேன் என்றார்.

தெலங்கானா தூதுவராக நியமிக்கப்பட்ட விவகாரத்தால் எழுந்த சர்ச்சை அமெரிக்க ஓபனில் விளையாடியபோது உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று கேட்டபோது, “நான் மைதானத்திற்குள் நுழைந்துவிட்டால் ஆட்டத்தில் மட்டுமே எனது கவனம் இருக்கும். எதிர்மறையான விஷயங்களில் நான் கவனம் செலுத்த நினைப்பதில்லை” என்றார்.

புருனோவுடன் இணைந்து விளையாடியது குறித்துப் பேசிய சானியா, “விம்பிள்டன் போட்டிக்குப் பிறகு இருவரும் சந்திக்க நேர்ந்தது. அப்போது நாம் இருவரும் இணைந்து விளையாட முடியுமா என புருனோ கேட்டார். அதன் பிறகு இருவரும் தொடர்ந்து பேசி இணைந்து விளையாட முடிவு செய்தோம்” என்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா ஆவார். ஒட்டுமொத்தத்தில் 3-வது இந்தியர். பயஸ், பூபதி ஆகியோர் மற்ற இரு இந்தியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x