Last Updated : 25 Mar, 2018 02:43 PM

 

Published : 25 Mar 2018 02:43 PM
Last Updated : 25 Mar 2018 02:43 PM

வெடித்தது பால்டேம்பரிங்: ஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா

பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினமா செய்துள்ளனர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விக்கெட் கீப்பர் டைம் பைனி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் தெளிவாகப் பதிவானது.

இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவானது. மேலும், பந்தை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்மித், இந்த விவகாரம் தனக்கு தெரிந்தேதான் நடந்தது என்று தெரிவித்தார். இதனால், ஸ்மித்தை உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து அறிந்துதான் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாகத் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டில் சிக்கியவர்களை உடனடியாக விசாரிக்கவும், கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட்ர் வார்னரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லாந்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல துணைக் கேப்டன் பதவியை டேவிட் வார்னரும் ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும்,எஞ்சியுள்ள போட்டிகளுக்கும், விக்கெட் கீப்பர் டைம் பைனி கேப்டனாக செயல்படுவார். அவருக்கு கீழ் ஸ்டீவ்ஸ்மித், டேவிட் வார்னர் செயல்பட வேண்டும். இது இன்றைய போட்டியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்படும், அதற்கான குழுவினர் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுள்ளனர். கிரிக்கெட் மிகவும் கண்ணியமான முறையிலும், நேர்மையாகவும் விளையாடப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x