Last Updated : 15 Mar, 2018 06:21 PM

 

Published : 15 Mar 2018 06:21 PM
Last Updated : 15 Mar 2018 06:21 PM

இன்னும் நீண்ட காலம் இந்தியாவுக்கு ஆடியிருக்கலாமே ஜாஃபர்: சாதனைகள் பல உடைத்த ஜாஃபர் குறித்து ஹர்பஜன் ஆதங்கம்

இந்திய உள்நாட்டுக் கிரிக்கெட்டின் ரன் மெஷின், ஜாம்பவான், வாசிம் ஜாஃபர் 18,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 6வது இந்திய வீரரானார். இதனையடுத்து இவர் இன்னும் சிறிது காலம் கூடுதலாக இந்திய அணிக்கு ஆடியிருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் ஆதங்கத்துடன் புகழ்மாலை சூட்டினார்.

விதர்பா அணிக்கு ஆடிவரும் ஜாஃபர், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிராக தற்போது நடைபெறும் இரானி கோப்பை போட்டியில் இரட்டைச் சதம் எடுத்தார். 40 வயதில் 250+ ஸ்கோரை எடுக்கும் முதல் இந்தியர், வயதான ஆசியருமாவார் வாசிம் ஜாஃபர். அதே போல் 40 வயதில் இரட்டைச்சதம் எடுக்கும் 5வது இந்திய வீரருமாவார் வாசிம் ஜாஃபர்.

முன்னாள் இந்திய கேப்டனும் லெஜண்டுமாகிய சுனில் கவாஸ்கர் 25,834 ரன்களுடன் இதில் முன்னிலை வகிக்கிறார்.

முதல் நாள் ஆட்டத்தில் விதர்பா கேப்டன் ஃபைஸ் பாஸல், சஞ்சய் ராமசாமி ஆகியோர் ஆட்டமிழந்தபிறகு இன்னிங்ஸை நிலை நிறுத்தினார் வாசிம் ஜாஃபர்.

18,000 ரன்கள் மூலம் திலிப் வெங்சர்க்கார் (17,868), ஜி.ஆர்.விஸ்வநாத் (17,970) ஆகியோரைக் கடந்து சாதனை புரிந்தார். மேலும் ஜி.ஆர்.விஸ்வநாத்துக்குப் பிறகு 6 தொடர் அரைசதங்கலை இரானி கோப்பை கிரிக்கெட்டில் எடுத்தவருமானார் ஜாஃபர்.

டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2000-த்தில் அறிமுகமான ஜாஃபர் 2008-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவே கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆடினார். 5 சதங்கள் 11 அரைசதங்கள், சராசரி 34.10. இங்கிலாந்தில் இவரும் தினேஷ் கார்த்திக்கும் தொடக்க வீரர்களாக டெஸ்ட் போட்டிகளில் இறங்கி குறிப்பிடத்தகுந்த சராசரியை வைத்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் கிரிக்கெட் வீர்ர்கள் புகழாரம்:

சவுரவ் கங்குலி: வெல் டன் வாசிம் ஜாஃபர், ஓல்ட் மேன்... சூப்பர்.

ஹர்பஜன் சிங்:

18,000 ரன்கள், வாழ்த்துக்கள் வாசிம் ஜாஃபர். இன்னும் வலுவாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவுக்காக இன்னும் சிறிது காலம் கூடுதலாக ஆடியிருக்கலாம்.

சுனில் கவாஸ்கர் 25,834, சச்சின் டெண்டுல்கர் 25,396, ராகுல் திராவிட் 23,974, லஷ்மண் 19,730, விஜய் ஹசாரே 18,740 ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இரானி கோப்பையில் முரளி விஜய் சாதனை அதிகபட்ச ரன்களான 266 ரன்களை உடைத்து இன்று ஆட்ட முடிவில் 285 நாட் அவுட்டாக இருக்கிறார் வாசிம் ஜாஃபர். இதில் 34 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும்.

முதல் தர கிரிக்கெட்டில் கவாஸ்கர், டெண்டுல்கர் 81 சதங்களுடன் முதலிடம் வகிக்கின்றனர், சதங்களில் 53 சதங்களுடன் வாசிம் ஜாஃபர் 8ம் இடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x