Published : 12 Mar 2018 07:09 PM
Last Updated : 12 Mar 2018 07:09 PM

தெ.ஆ.பதிலடி வெற்றி! ஆஸி.யின் வாய்ப்பேச்சுக்கு ஆட்டத்தின் மூலம் பழிதீர்ப்பு: ரபாடா, டிவில்லியர்ஸினால் ஆஸி. தோல்வி

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சிறந்த பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரில் 1-1 என்று சமநிலை எய்தியுள்ளது.

ஆஸ்திரேலியா 243 மற்றும் 239 ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 382 ரன்கள் மற்றும் 102/4 என்று வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கேகியோ ரபாடா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் அபாரமான ஒரு ஸ்பெல்லில் ஆஸி முதுகெலும்பை உடைத்த ரபாடா 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 2வது இன்னிங்சிலும் 54 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை தலைகுனியச் செய்தார். இவரோடு ஏ.பி.டிவில்லியர்ஸ் முதல் இன்னிங்சில் 146 பந்துகளில் 20 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 126 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ, 2வது இன்னிங்சில் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் ஆக்ரோஷம் காட்டி லயன் பந்தில் பேங்கிராப்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

4-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா 41 ரன்கள் முன்னிலையிலும் கையில் 5 விக்கெட்டுகள் இருப்புடனும் தொடங்கியது. அபாய வீரர் மிட்செல் மார்ஷ் 39 ரன்களில் கிரீசில் இருந்தார். ஆனால் ரபாடா ஆவேசத்தின் முன் மிட்செல் மார்ஷ் ஒன்றும் செய்ய முடியவில்லை ஒரு பந்தை பிட்ச் செய்து உள்ளே கொண்டு வர வேகமும் ஸ்விங்கும் கோணமும் சேர்ந்து இடையில் புகுந்து ஸ்டம்பைத் தாக்கியது. 45 ரன்களில் மிட்செல் மார்ஷைக் காலி செய்தார்.

பிறகு பாட் கமின்ஸ் 5 ரன்களில் வெளியே சென்ற பந்தை மட்டையால் இடித்து கல்லியில் டிபுருய்னிடம் கேட்ச் கொடுத்தார். மிட்செல் ஸ்டார்க் லெந்த் பந்தை பெரிய ட்ரைவ் ஆட முயன்றார் எட்ஜ் ஆகி டிகாக்கிடம் சரண். ஸ்டார்க் 1 ரன்னில் அவுட் ஆனார். ரபாடா இந்த டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் கொடுத்து 11 ஆஸி.விக்கெட்டுகளைச் சாய்த்தார். தன் 28வது டெஸ்ட் போட்டியிலேயே 4வது முறையாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ரபாடா. ஆனால் ஸ்மித்தை தோளில் இடித்ததனால் தகுதி இழப்புப் புள்ளிகளைப் பெற்ற ரபாடா அடுத்த டெஸ்ட் போட்டியில் இருப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது, இதனால் முதன் முதலாக ஆஸி.யை தங்கள் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை தொடரில் வீழ்த்தும் வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது..

நேதன் லயன் 5 ரன்களில் இங்கிடி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க, ஜோஷ் ஹேசில்வுட் 17 ரன்களில் கேசவ் மஹராஜ் பந்தில் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆக ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 100 ரன்கள் முன்னிலை, தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 101 ரன்கள்.

முதல் இன்னிங்ஸ் அதிரடியின் தொடர்ச்சியாக மீண்டும் டிவில்லியர்ஸின் சிறு அதிரடி:

devilliersjpg100 

இலக்கை விரட்ட களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் மார்க்ரம் 7 ரன்களில் இருந்த போது ஹேசில்வுட் பந்தில் மிட்செல் மார்ஷ் ஸ்லிப்பில் கேட்சைத் தவற விட்டார். நேதன் லயனின் அருமையான பந்து வீச்சுக்கு அவரிடமே டீன் எல்கர் 5 ரன்களில் வெளியேறினார். மார்க்ரம் அருமையான சில ஷாட்களுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்து ரிவர்ஸ் ஆகும் என்ற அச்சத்தில் ஆடுவது போல் ஆடினார், பந்தும் உள்ளே வந்து வெளியே செல்ல எட்ஜ் ஆகி ஸ்மித்தின் சமயோசிதமான கேட்ச் ஆனது.

டிவில்லியர்ஸ் இறங்கினார், எந்த ஒரு ஆஸி.நெருக்கடிக்கும் அடிபணியப்போவதில்லை என்று உறுதிபூண்டு 4 பவுண்டரிகள் 1 சிக்சரை விளாசி 26 பந்துகளில் 28 ரன்களை விரைவில் எடுத்தார். ஆம்லாவுடன் 49 ரன்கள் கூட்டணி அமைக்க தென் ஆப்பிரிக்கா வெற்றி இலக்குக்கு அருகில் வந்தது. ஆம்லா 27 ரன்களில் கமின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். நேதன் லயன் இந்தத் தொடரில் முதல் முறையாக பந்து வீசி டிவில்லியர்ஸை வீழ்த்திய பவுலர் ஆனார். டுபிளெசிஸ், டிபுருய்ன் வெற்றியை உறுதி செய்தனர்.

ஒரு அருமையான, தரமான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது, மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் அராஜக வாய்ப்பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x