Published : 28 Mar 2018 08:53 AM
Last Updated : 28 Mar 2018 08:53 AM
ப
ந்தைச் சேதப்படுத்தி கிரிக்கெட்டையும், ரசிகர்களையும் ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் மீதான கோபம் ஆஸ்திரேலிய மக்களின் மனதில் இன்னும் வடுவாகவே உள்ளது. இது விரைவில் மறக்கப்படக்கூடும் என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை. சரி, பந்தை சேதப்படுத்துவதால் என்னதான் நிகழும், அதனால் குறிப்பிட்ட அந்த அணி எந்த வகையில் ஆதாயம் பெறும் என்பதற்கு விடை கண்டுபிடித்தால், அது வெற்றிக்காக குறுக்கு வழி பாதையில் பயணிப்பதையே தோலுரித்து காட்டுகிறது. வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எப்படியென்றால் ஏமாற்றி, மோசடி செய்யும் பாதையின் ஊடாக பயணித்து, விளையாட்டு உணர்வுகளை காற்றில் பறக்க விட்டு வெற்றி மட்டுமே எங்களது தாரக மந்திரம், அதை எவ்வழியேனும் அடைவோம், அதற்காக குறுக்கு வழிகளைகூட பிரயோகிப்போம் என்பதுதான்.
பந்து எதற்காக சேதப்படுத்தப்படுகிறது என்றால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ முறையில் விரைவாக விக்கெட்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே. ரிவர்ஸ் ஸ்விங் கிரிக்கெட்டில் அரிய கலையாகவே பிரயோகிக்கப்படுகிறது. வழக்கமாக பயன்படுத்தப்படும் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் ஆகியவற்றுக்கு எதிர்மறையானதுதான் ரிவர்ஸ் ஸ்விங். புதிய பந்தில் சாதாரண ஸ்விங்குகள் விழும். அதாவது இன் ஸ்விங், அவுட் ஸ்விங். பளபளப்பாக இருக்கும் பந்தின் பகுதி பந்து வீச்சாளர் கையின் வலதுபுறம் வாயிலாக வீசப்பட்டால் அது அவுட் ஸ்விங். அதேவேளையில் பளபளப்பான பகுதி இடதுபுறம் இருந்தால் இன் ஸ்விங் ஆக விழும். காற்றின் உதவியுடன் இதனை பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக கையாள்வார்கள்.
இதன் செயல் அப்படியே தலைகீழாக இருப்பதுதான் ரிவர்ஸ் ஸ்விங். இந்த முறையில் பளபளப்பான பகுதி வலது புறம் இருந்தால் இன் ஸ்விங்கும், இடது புறமிருந்தால் அவுட்ஸ்விங்கும் ஆகும். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதில் ஒரு அறிவியல் தத்துவமும் புதைந்துள்ளது. ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சை கையாள்வதற்கு ஒரு கோட்பாடும் உள்ளது. பந்தின் இரு பகுதிகளின் எடையிலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதுதான். இது பெர்னோலி தியரத்தை ஒட்டியதுதான். இதற்காக தான் பந்தின் ஒரு பகுதியை மட்டும் வீரர்கள் அதிகம் தேய்ப்பார்கள். எடை அதிகமாக இருக்கும் பகுதியை விட குறைவாக இருக்கும் பகுதியில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும். இது பந்தை உள்நோக்கி தள்ளுவதால் இன் ஸ்விங் ஆகிறது. இந்த வகையில் பந்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்டு ஸ்டெம்புகளை நோக்கி பாயும். ஆனால் பேட்ஸ்மேனோ பந்து வெளியில் வீசப்படுவதால் அவுட் ஸ்விங் தான் ஆகும் என தவறாக கணிக்கப்படுவதற்கு தள்ளப்படுவார். ஆனால் அவரின் எண்ணத்துக்கு மாறாக பந்து இன் ஸ்விங் ஆவதால் ஏமாற்றப்படுவார்.
இந்த ரிவர்ஸ் ஸ்விங் கலையை அறிமுகப்படுத்தியது பாகிஸ்தான் அணிதான். 1970-களில் அந்த அணியின் சர்ப்ராஸ் நவாஸூம், சிக்கந்தர் பகத்தும் ரிவர்ஸ் ஸ்விங்கில் எதிரணியை திக்குமுக்காட செய்தனர். அவர்கள் இந்த கலையை இம்ரான்கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ் என அடுத்த தலைமுறையினருக்கும் வியாபிக்கச் செய்தனர். வாசிம் அக்ரமும், வாக்கர் யூனுஸூம் ‘சுல்தான்ஸ் ஆப் தி ஸ்விங்’ என புகழப்பட்டனர். எனினும் இவர்கள் மீது பந்தை சேதப்படுத்தியதாக புகார்கள் எழாமலும் இல்லை. பந்தை சேதப்படுத்தியதாக தண்டனை பெற்ற முதல் பந்து வீச்சாளர் வாக்கர் யூனுஸ்தான்.
பொதுவாக பந்தை பளபளப்பாக மாற்றுவதற்கு ஐசிசி விதிகளில் இடம் உள்ளது. அதாவது வியர்வை, உமிழ் நீரை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் ‘செயற்கை பொருளை’ பயன்படுத்தக்கூடாது. டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக 65 ஓவர்களுக்கு மேல்தான் பந்து ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும். அப்போதுதான் பந்தின் தன்மை மாறியிருக்கும். அதாவது பந்து மைதானம் முழுவதும் உருண்டோடியிருக்கும். எல்லைக்கோட்டின் கயிறுகளில் பட்டு, பந்தின் தையல் பகுதியில் நூல் வெளியே தெரிய ஆரம்பிக்கும். இந்த சூழ்நிலையில் தான் ரிவர்ஸ் ஸ்விங்கில் வேகப்பந்து வீச்சாளர்கள் புகுந்து விளையாடுவார்கள். சில அணிகள், பந்தின் தன்மையை மாற்ற சற்று வித்தியாசமாக யோசிக்கவும் தவறவில்லை. பீல்டிங்கின் போது பந்தை அதிக முறை ‘ஒன் பிட்ச்’ செய்வார்கள், அதிக பவுன்சர்களையும் வீசுவார்கள். இது பந்தை ரிவர்ஸ் ஸ்விங்குக்காக தயார் செய்தவற்கான யுக்திகள்.
ஆனால் விரைவாக வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற்றேத்தீர வேண்டும் என்ற கொள்கையின் வழியே பயணிக்கும் போதுதான் பந்தை தயார் செய்தவற்கு பதிலாக பந்தின் தன்மையை மாற்றுவதற்காக சதித் திட்டத்துடன் மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றனர். அன்றைய காலக்கட்டங்களில், ‘சோடா பாட்டில் ஓபனர்’, பேண்ட்டில் உள்ள ஜிப், வெயிலுக்காக உதட்டில் பூசப்படும் தைலம், தலையில் தேய்க்கப்படும் கிரீம் என பல செயற்கை பொருட்களை பந்தை சேதப்படுத்துவதற்காக பயன்படுத்தினர். தற்போது பான்கிராப்ட் பயன்படுத்தியது ‘உப்புத்தாள்’ வகையை சேர்ந்தது. இதன் மூலம் பந்தின் சொரசொரப்பு தன்மையை அதிகரிக்க செய்ய முயற்சித்துள்ளார். இதுபோன்ற செயலை ஆஸ்திரேலிய அணி நீண்ட காலம் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
ஏனெனில் அவர்களால் 26-வது ஓவரில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிந்துள்ளது. இதில்தான் அவர்கள் சிக்கியுள்ளனர். தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்காக ஒளிபரப்பு நிறுவனத்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ் தான், ஆஸ்திரேலிய அணியை கையும் களவுமாக சிக்க வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “26, 27, 28-வது ஓவரில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிகிறது என்றால் அவர்கள் ஏதோ தகிடுதத்தம் செய்கிறார்கள் என்று சந்தேகித்தேன். அதனால் நாங்கள் எங்கள் கேமரா நபர்களுக்கு இதன் மீது கவனம் செலுத்துங்கள், அவர்கள் பந்தை ஏதோ செய்கின்றனர் என்று அறிவுறுத்தினோம்.
ஒன்றரை மணி நேரம் அவர்கள் ஆட்டத்தை அலசினார்கள். அதன் பின்னரே பான்கிராப்ட்டை குறிவைத்து கேமரா பின் தொடர்ந்தது. கடைசியில் கையும் களவுமாக அவர், பிடிபட்டார். ஆடுகளத்தில் புற்கள் இருக்கும் போது ரிவர்ஸ் ஸ்விங் ஆவது சாத்தியமில்லை. ஒவ்வொரு சென்டி மீட்டரிலும் பிளவுகள் இருக்கும் பாகிஸ்தான் ஆடுகளம் அல்ல இது. எனவே இவ்வளவு குறைவான ஓவரில் அதுவும் இந்தப் ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சாத்தியமேயில்லை. சாதாரண பந்து தேய்ப்பு முறை பயன்படாது, ஸ்டீலைக் கொண்டு பந்தைத் தேய்க்க வேண்டும். அப்போதுதான் ரிவர்ஸ் ஸ்விங் உடனடியாகக் கிடைக்கும்” என்றார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறும்போது, “பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவது என்பது மிகப்பெரிய கலை. அதேசமயம், திருட்டுகூட ஒரு கலைதான். திருடியதற்காக ஒருவரை பிடித்து சிறையில் அடைத்தபின் அவரை புகழ்வோமா? ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை. ஆனால், பந்தை சேதப்படுத்துதல் என்பது நேர்மையற்றதாகும். ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு பந்துவீச்சாளர் நன்கு தயாராக வேண்டும், பந்தையும் சேதப்படுத்தாமல், வீச வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங் என்பது தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே சாத்தியம். அதிலும் சூழல், ஆடுகளத்தின் தன்மை ரிவர்ஸ் ஸ்விங் போடுவதில் முக்கியப்பங்காற்றும். ஆடுகளம் மிகவும் வறண்டதாகவும், கோடுகள் நிறைந்திருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் எளிதாக வீச முடியும். உதாரணமாக, டெல்லி பெரோஷ்கோட்லா மைதானத்தில், முதல் 10 ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் வரும்” என்றார்.
ஏதோ இந்தச் சதியில் ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோர் மட்டும்தான் பங்கேற்றிருப்பார்கள் என்று அறுதியிட்டுக்கூறிவிடவும் முடியாது. ஏனெனில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கட்டமைப்பு என்பது வித்தியாசமானது. பயிற்சியாளர் டேரன் லீமன், அணியில் உள்ள டேவிட் வார்னர் உள்ளிட்ட சீனியர் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் என அனைவருக்கும் தொடர்பு இருந்திருக்கக்கூடும். அணியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் டேரன் லீமன் கையில் வைத்திருப்பது நிதர்சனமான உண்மையும் கூட.
யாரை அணியில் இடம் பெறச்செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கும் முக்கியமான இடத்தில் பங்காற்றக்கூடியவரும் அவரே. சமீபகாலமாகவே ஆஸ்திரேலிய அணியின் மூர்க்கத்தனமான செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தன. ஆனால் கண்டிப்பு செய்ய வேண்டிய அந்நாட்டு கிரிக்கெட் வாரியமோ, ஆக்ரோஷமாக விளையாடும் போது இது வெளிப்படுவது இயல்புதான் என தங்களது வீரர்களை தட்டிக் கொடுத்தது. இதற்கான விளைவுகளைதான் தற்போது அறுவடை செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT