Published : 10 May 2019 03:56 PM
Last Updated : 10 May 2019 03:56 PM
விசாகப்பட்டிணம் மைதானம் தோனிக்குச் சாதகமான ஆட்டக்களம், ரசிகர்கள் இங்கு அவரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர், அதனால்தான் இன்னொரு முறை தோனியைப் பார்ப்பதற்காகவே இரண்டாவது ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கே விளையாட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
இதனால் அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே முதல் ப்ளே ஆஃபில் தோற்று தோனி படை விசாகப்பட்டிணத்துக்கு வருவதையும் தோனியின் இன்னொரு அதிரடி இன்னிங்ஸையும் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் விசாகப்பட்டிண ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஒரு மாற்றத்துக்காக அன்று மும்பைக்கு எதிராக சிஎஸ்கே தோற்பதை விரும்பினோம், எனவேதான் 2வது குவாலிஃபயரை ஆட அவர்கள் விசாகப்பட்டிணம் வருவார்கள். எங்கள் ‘தல’ தோனியின் ஆட்டத்தை மீண்டுமொரு முறை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.” என்கிறார் வளரும் கிரிக்கெட் வீரரும் தோனியின் அதிதீவிர ரசிகருமான அவினாஷ் என்பவர்.
இன்று விசாகப்பட்டிணத்தார்களின் ஆசை நிறைவேறுகிறது, டெல்லி கேப்பிடல்ஸ், சிஎஸ்கே ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி மும்பை இந்தியன்ஸுடன் கோப்பையை முடிவு செய்யும் இறுதிப் போட்டியில் 12ம் தேதி மோதும்.
இண்டர்மீடியேட் படிக்கும் இன்னொரு மாணவர், தோனியின் தீவிர ரசிகர் கூறும்போது, “தோனி எங்களுக்குக் கடவுள், இந்த மைதானத்தில் அவர் நிறைய ரன்களைக் குவித்துள்ளார். இங்கு அவர் சில ஹீராயிக் இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். நிச்சயம் டெல்லியுடனான இந்த ஆட்டம் நெருக்கமான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். சிஎஸ்கே வெற்றி அணியாக எழுச்சியுறும்” என்றார்.
அன்று டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் போட்டி நடைபெற்ற போது கூட ரிஷப் பந்த் கேட்சை விட்டாலும் பிடித்தாலும் ரசிகர்கள் தோனி தோனி என்று கத்தியபடியே இருந்தனர். பந்த் பேட் செய்ய வந்த போதும் தோனி கோஷம் அடங்கவில்லை.
இந்த மைதானத்தில் இரண்டு அபார இன்னிங்ஸ்களை தோனி ஆடியிருப்பதால் ஒரு வழிபாட்டு மனோபாவம் இந்த ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.
இதே மைதானத்தில்தான் பரமவைரி பாகிஸ்தானுக்கு எதிராக தோனி 2005ல் 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். பிறகு பல ஆண்டுகள் கழித்து ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தோனி மீண்டும் விசாகப்பட்டினத்தில் ஆடிய போது கடைசி ஓவரில் 3 மிகப்பெரிய சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசியதை ரசிகர்கள் எளிதில் மறப்பதாக இல்லை.
பொறியியல் மாணவர் ஜி.ஸ்ரீநிவாஸ் கூறும்போது, “ஆட்டத்தின் சிறந்த பினிஷர்களில் தோனி ஒருவர், இப்போது இன்னொரு சரவெடிக்காகக் காத்திருக்கும். இன்று மைதானம் மஞ்சள் குளியல் காணும்” என்கிறார் உற்சாகத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT